Sunday, September 21, 2014

Friday, September 19, 2014

கத்தி: கதை(?) விமர்சனம்...!




கதைப்படி ஹீரோ நம்ம தற்காலிக சூப்பர்ஸ்டார்தான்.... எங்க பாத்தாலும் பவர்கட்டா இருக்கே, எல்லார் வாழ்க்கைலயும் வெளிச்சத்த ஏத்தலாம்னு ஒரு உயர்ந்த குறிக்கோளோட  ஊர்ல சின்னதா ஒரு கடை போட்டு பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருக்கார். ஊர் திருவிழாவுக்கு புல் லைட் சப்பளையும் அவருதான். அத வெச்சே செமையா இண்ட்ரோ சாங் எடுத்திருக்காங்க. குரூப் டான்சர்ஸ் எல்லாரும் ஆளுக்கொரு பெட்ரோமேக்ஸ் லைட்ட தூக்கி பிடிச்சிட்டே ஆடுறது கண்ணைப் பறிக்குது. இப்படியே போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் ஒரு பொம்பள கைல கூடையோட வந்து பெட்ரோமேக்ஸ் லைட்டு வேணும்னு கேக்குது... அந்த இடத்துல நம்ம டாகுடரோட ரியாக்சனை பார்க்கனுமே.... கண்ணு சிவக்குது, கை துடிக்குது, நாடி நரம்பெல்லாம் புடைக்குது, பின்னணி மியூசிக் அதிருது........ சான்சே இல்ல, அப்படி ஒரு பந்தாவான சீன்....! கூடை வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லிடுறார். அந்தம்மாவும் திட்டிக்கிட்டே போய்டுது.

ஆனா இத வில்லனோட அல்லக்கை ஒருத்தன் ஒளிஞ்சி நின்னு பாத்துடுறான். அவன் நேரா போய் வில்லன்கிட்ட சொல்லிடுறான். வில்லன் உடனே அல்லக்கைகள் எல்லார் கைலயும் ஆளுக்கொரு கூடைய கொடுத்து போய் பெட்ரோமேக்ஸ் லைட்டு வாங்கிட்டு வாங்கடான்னு அனுப்பி வைக்கிறான். டாகுடருக்கு கோவம் கோவமா வருது, என்னடா இது இன்னிக்குன்னு பாத்து பெட்ரோமேக்ஸ் லைட் வாங்க வர்ரவங்கள்லாம் கைல கூடையோடவே வர்ராங்கன்னு. அப்போ கூடவே சுத்திட்டு இருக்க காமெடியன் இது வில்லனோட வேலைன்னு சொல்லி புரியவைக்கிறான். அவ்வளவுதான் டாகுடருக்கு கோபம் கொப்பளிக்குது.

கூடைய வெச்சி ஆளனுப்புறவனை கூடைக்குள்ளயே வெச்சி அடிப்பேண்டான்னு பஞ்ச் டயலாக் பேசியபடி வில்லன்களை அடிச்சு துவம்சம் பண்றார். அப்போதான் அவருக்கு தெரியுது கூடைகள்லாம் இந்தியாவுல்ல செஞ்சது இல்லேன்னு. வில்லன்கள் பின்னாடியே ஃபாலோ பண்ணி, வெளிநாட்டுல இருந்து கூடைகளை கடத்திட்டு வர்ராங்கன்னு கண்டுபுடிக்கிறார். இருந்தாலும் அவருக்கு சந்தேகம், உள்நாட்டுலயே கூடை கிடைக்கும் போது வெளிநாட்டுல இருந்து ஏன் கடத்திட்டு வரனும்னு. இதை கண்டுபிடிச்சே ஆகனும்னு வில்லன்களை புடிச்சி ரகசியமா ட்ரைனேஜ் பைப் லைன்களுக்குள் அடைச்சு வைக்கிறார். அங்கேயே பெட்ரோமேக்ஸ் லைட்டோட இரவு பகலா காவலுக்கும் இருக்கார். அப்போ வில்லன் ஆள் ஒருத்தன் டாகுடரோட டெடிக்கேசனை பாத்துட்டு கண்கலங்குறான். ஏண்ணே கூடை மேல உங்களுக்கு இவ்ளோ கோவம்னு கேக்குறான்,

அதைப் பாத்து டாகுடரும் கண்கலங்குறார். உடனே ப்ளாஷ்பேக் தொடங்குது. டவுசர் போட்டபடி சமந்தா ஆடிக்கொண்டிருக்கிறார். கூடவே டாகுடரும், டூயட் சாங்காம். டாகுடர் இதிலும் ஹீரோயின் டவுசரில் கையை வைக்கும் மேனரிசத்தை தொடர்வது அல்டிமேட். ரசிகர்களுக்கு நல்ல தீனி. லவ் சீன்ஸ் இப்படியே நல்லா போய்ட்டு இருக்கு, அப்போ ஒருநாள் ஹீரோயினோட செல்ல நாயைக் காணலைன்னு பெட்ரோமேக்ஸ் லைட்ட எடுத்துட்டு ஊர் பூரா தேடுறார் டாகுடர். எங்கே தேடியும் கிடைக்கல. ஹீரோயின் ஒரே அழுகையா அழுகுது. இந்த காட்சில தியேட்டரே ஒப்பாரி வைக்க போவது உறுதி. அழகான பொண்ணுங்க அழுதா யார்தான் தாங்குவா? காலைல பாத்தா அந்த நாய் ஒரு கூடைக்குள்ள செத்துக் கெடக்குது, டாகுடர் பதறி போறார். அந்த கூடையை நாய் உள்ளெ இருக்குன்னு தெரியாம கவுத்தி போட்டதே அவர்தான். குற்ற உணர்ச்சில துடிக்கிறார். அப்பவே சபதம் செய்றார் இனி கூடை வெச்சிருக்கவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கவே மாட்டேன்னு.... டக்னு ஃப்ளாஷ்பேக் முடியுது, எல்லா வில்லனுங்க கண்ணுலயும் கண்ணீர்...  டாகுடரும் கண்ண தொடச்சிக்கிட்டே பெட்ரோமேக்ஸ் லைட்ட தொடைக்கிறார்.

வில்லன்களைத் தேடி வெளிநாட்டு கூடை வியாபாரி (தொழிலதிபர்) வர்ரார். இதை கேள்விப்படும் டாகுடர் தலைய லைட்டா புளிச் பண்ணி மீசைய பெருசா வெச்சிக்கிட்டு இன்னொரு கெட்டப் போட்டு ரகசியமா அந்த ட்ரைனேஜ் பைப்ப விட்டு வெளில வர்ரார்.  வில்லன் கூட பயங்கர சண்டை நடக்கிறது. தொழிலதிபர் அடிதாங்க முடியாமல் உண்மைகளை சொல்லிவிடுகிறார். வெளிநாட்டுக் கூடைகளை கடத்திக் கொண்டுவந்து உள்நாட்டுக் கூடை தொழிலை நசுக்கி இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்று சீன உளவுத்துறை சதித் திட்டம் தீட்டி இயங்குவதை கண்டுபிடிக்கிறார். பின்னணியில் இருக்கும் சீன சதிகாரர்களை சுற்றி வளைத்து சதித்திட்டத்தை முறியடித்து இந்திய பொருளாதாரத்தை டாகுடர் எப்படி காக்கிறார் என்பதே மீதிக்கதை...!  எந்த கெட்டப்பில் போய் இதை சாதிக்கிறார் என்பதை படு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். அதனால் நாமும் அதை சொல்லப் போவதில்லை.

டாகுடருக்கு இந்த கதைக்களம் மிகவும் புதுசு. இருந்தாலும் ஜமாய்த்திருக்கிறார். இதுவரை உள்ளூர் ரவுடிகள், வெளியூர் தீவிரவாதிகள்னு பட்டைய கெளப்பிட்டு இருந்த டாகுடரை இந்த முறை வெளிநாட்டுல இருந்து வர்ர டான்களை இரண்டு கெட்டப்புகளில் அடித்து துவைக்கும் கடினமான பணியை ஒப்படைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார் என்று இனி யாருமே சொல்லமுடியாத அளவுக்கு அவரை இரண்டு கெட்டப்பில் நடிக்க வைத்து சாதித்திருக்கிறார் முருகதாஸ். பெரிய முன்னேற்றம்தான். அது போல டிரைனேஜ் பைப்புக்குள் துணிச்சலாக நடித்திருக்கும் டாகுடரின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். பாதிக்கும் மேல் படம் அதற்குள்தான் வருகிறது என்பதால் மிகப்பிரம்மாண்டமாக ட்ரைனேஜ் செட் போட்டிருக்கிறார்கள். படம் வந்ததும் உங்கள் ஊரில் நல்ல தியேட்டரில் சென்று டிக்கட் எடுத்து பாருங்கள்!

Thursday, September 18, 2014

ஐ (ai): திரை விமர்சனம்...!


தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவில் கூட இப்படி ஒரு கதையுடன் இதுவரை எந்தப்படமும் வந்திருக்காது. அப்படிப்பட்ட கதை, திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது ஐ படம். கதைக்காகவே பல்வேறு தேசிய சர்வதேச விருதுகளை அள்ளிக் குவிக்க இருக்கிறது இப்படம்.

விக்ரம் கிராமத்தில் மாட்டுவண்டி வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஹீரோயின் எமி ஜாக்சன் சுற்றுலாவிற்காக வந்தவர் மாட்டுவண்டியில் சவாரி செய்கிறார். அவரைப்பார்த்த விக்ரம் காதல்வயப்பட்டு அங்கேயே காதலைச் சொல்கிறார். கோபமடைந்த எமி அர்னால்டின் போட்டோவை காட்டி இந்த மாதிரி ஒருத்தனைத்தான் லவ் பண்ணுவேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். இதைக்கேட்டு ஆவேசமடைகிறார் விக்ரம். அர்னால்டின் போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு பயங்கரமாக எக்சர்சைஸ் செய்கிறார், ஒன்றும் முன்னேற்றமில்லை. ஏதாவது லேகியம் சாப்பிட்டு பார் என்று நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். அவர்களை நம்பி சேலத்துக்கு செல்கிறார் விக்ரம். அங்கே வைத்தியரிடம் கிலோக் கணக்கில் லேகியம் வாங்கி வந்து உடல் முழுதும் பூசிக் கொண்டு படுக்கிறார். காலையில் பார்த்தால் அவரையே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பனிக்கரடி போன்ற தோற்றத்தில் பயங்கரமாக உருவம் மாறி இருக்கிறது.  காட்சியைப் பார்க்கும் நமக்கு இது என்ன சினிமாதானா என்ற பிரமிப்பு எழுகிறது. அவரைப் பார்த்த எல்லாரும் பயந்து ஓடுகிறார்கள். அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார். லேகீயத்தில் தான் ஏதோ கோளாறு என்று வைத்தியரை பார்க்கச் செல்கிறார். வைத்தியரை கட்டி வைத்து அடித்து மிரட்டியதில் அவர் வில்லன்கள் வந்து மிரட்டி லேகீயத்தை மாற்றி கொடுக்க சொன்னதை சொல்லி விடுகிறார்.

விக்ரம் ஆவேசத்துடன் வில்லன்களை தேட தொடங்குகிறார். ஆனால் பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறை வில்லனை நெருங்கும் போதும் அரசியல்வாதிகள் வந்து லஞ்சம் கேட்டுக்  குறுக்கிடுகிறார்கள். லஞ்சம் கேட்பவர்களை எல்லாம் கடித்து வைக்கிறார் விக்ரம். லஞ்சம் ஒழிந்து ஊரே செழிக்கிறது, அனைவரும் பாராட்டுகிறார்கள். இப்படியே போய் கொண்டிருக்கையில் ஒருநாள் டீவில் எமியின் பேட்டியை பார்த்துவிட்டு கண்கலங்குகிறார். பனிக்கரடி உருவத்துடன் விக்ரம் காதல் சோகத்தில் கண்கலங்குவது அருமை. அப்படியே கனவில் பாடல் காட்சி வருவது மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 2000 பனிக்கரடிகள் சூழ விக்ரம் எமியுடன் ஆடிப்பாடுகிறார். அண்டார்டிக்காவில் போய் ஐஸ் மலை செட் போட்டு எடுத்தார்களாம். ஒவ்வொரு ஐஸ்கட்டியும் ஒரு கலரில் மின்னுகிறது, எப்படி பெயிண்ட் அடித்தார்களோ தெரியவில்லை. டிக்கட்டிற்கு கொடுத்த காசு இதற்கே போதும். பாடல் முடிந்ததும் வில்லன்களை தேடிக் கண்டுபிடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகள் வழக்கம் போல பதற வைத்தாலும் ஹீரோவே ஜெயிப்பது வெகு யதார்த்தம்!

சண்டையில் மற்றவர்கள் தப்ப, ஒரே ஒரு வில்லன் மாட்டிக் கொள்கிறான். அவனும் வைத்தியர் கொடுத்தது லேகியம் இல்லை, பனிக்கரடி ஆயி என்று சொல்லிவிட்டு செத்துப்போகிறான். அதிர்ச்சியடைந்த விக்ரம், அதை சரி செய்வது எப்படி என்று குழம்புகிறார். துரத்திச் சென்று அடுத்த வில்லனை பிடிக்கிறார். அவன் இன்னொரு முறை பனிக்கரடி ஆயியை தடவினால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு செத்து விடுகிறான்.  பனிக்கரடி ஆயி வாங்க ஸ்காட்லாந்திற்கு கடலில் நீந்தியபடியே செல்கிறார் விக்ரம். பிரம்மாண்ட கப்பல்களை அவர் நீந்தியபடி கடந்துசெல்வது இதுவரை சினிமாவில் பார்த்தே இராத சீன். எப்படி செட் போட்டார்கள் என்றே தெரியவில்லை. அங்கு சென்று ஆய் வாங்கி தடவி, காலையில் பார்த்தால் முகமெல்லாம் கட்டிவந்த மனிதனாகி இருக்கிறார்.

இதனால் குழம்பிப் போன விக்ரம், வில்லன் தன்னை ஏமாற்றி இருக்கிறான் என்று புரிந்து கொள்கிறார். எமி அந்த ஊரில் இருப்பதை தெரிந்து கொண்டு அதே தோற்றத்தோடு பார்க்கச் செல்கிறார். அங்கே எமியை வில்லன்கள் கட்டிவைத்து இருக்கிறார்கள். சண்டையிட்டு மீட்கிறார் விக்ரம். அவரைப் பார்த்து எமி யார் நீ என்று கேட்கிறார், அதைக் கண்டு மனசுடைந்த விக்ரம், தப்பி ஓடிய வில்லன்களை துரத்தி பிடித்து அடித்து உதைத்து தனக்கு மாற்றுமருந்து என்ன என்று கேட்கிறார். அப்போது அந்த வில்லன் நான் சொன்னால் நீ கேட்கமாட்டியே என்று திரும்ப திரும்ப மறுப்பது பரபரப்பைக் கூட்டுகிறது. கடைசியில் நல்ல அழகான வாலிபனின் ஆயியை எடுத்து பூசிக் கொண்டால் பழைய உருவத்தை பெறலாம் என்று சொல்லிவிட்டு அவனும் செத்துப் போகிறான். அடுத்து விக்ரம் என்ன செய்ய போகிறார் என்று ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறார்கள்.

ஊருக்கு வந்த விக்ரம் வில்லன் சொன்னபடி செய்கிறார். எதுவும் ஆகவில்லை. அதிர்ந்து போய் மறுபடியும் மறுபடியும் செய்து பார்க்கிறார் ஒன்றும் ஆகவில்லை. நமக்கோ பரபரப்பு உச்ச கட்டத்தை அடைகிறது. வில்லன் கும்பலின் தலைவன் அந்த ஊர் சந்தைக்கு வந்திருப்பதை பார்த்து அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டு வந்து அடிக்கிறார் விக்ரம். இவ்வளவு நாளும் விக்ரமுக்கு  ஏற்பட்டது நிஜமான மாற்றம் அல்ல. அது வெறும் மேக்கப்தான் என்றும், இரவு நேரத்தில் தூங்கியவுடன் வந்து வில்லன் ஆட்கள் ரகசியமாக விக்ரமுக்கு அவருக்கே தெரியாமல் மேக்கப் போட்டு விட்டு போய்விடுவார்கள் என்றும் உண்மையை சொல்லி விட்டு செத்துப் போகிறான் அந்த வில்லன் கும்பல் தலைவன். சஸ்பென்ஸ் உடைந்ததும் தியேட்டரே ஆடிப்போகிறது. அடுத்த காட்சியில் விக்ரம் குளியறைக்குள் சென்று மேக்கப்பை களைத்து விட்டு ஸ்மார்ட்டாக கம்பீரமாக வெளியே வருவதை பார்த்து தியேட்டர் முழுதும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்..... எமி வெளியே விக்ரமுக்காக காத்திருக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு வெளியே வந்தும் படபடப்பு குறையவே இல்லை, பலநூறு படங்களை ஒரே நேரத்தில் பார்த்த எஃபக்ட்.......

ஸ்பெசல் எஃபக்ட்ஸ், சஸ்பென்ஸ் கதை, விக்ரம் நடிப்பு, ரஹ்மான் இசை, எமியின் அழகு..... இப்படி எல்லாத்துக்கும் ஒவ்வொரு வாட்டி படம் பார்க்கலாம்......!

ஆய்னு டைட்டில் வெச்சா கண்டுபுடிச்சிடுவாங்கன்னு ஐன்னு டைட்டில் வெச்சிருக்காங்க.... நாங்க சும்மா விடுவமா..... இங்கிலீஸ் டைட்டில் என்னான்னு செக் பண்ணி உண்மைய கண்டுபிடிச்சிட்டோம்ல....... ங்கொய்யால நாங்கள்லாம் யாரு.............!

Saturday, September 13, 2014

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா...!

ஐ படத்தோட பட்ஜெட் பத்தி தாறுமாறா செய்திகள் வந்து எல்லாரையும் கதிகலங்க வெச்சிட்டு இருக்கு! தமிழனுக்கு ஒலகம் பூரா பெருமைதேடித்தரப்போற படத்துக்கு நாமலும் ஏதாவது செஞ்சு சரித்துரல நம்ம பேர பச்சக்னு பதிய வெச்சுடனும்னு இப்பிடி இசை வெளியீட்டு விழாவ அட்வான்சா நடத்தியிருக்கோம். எல்லாரும் வந்து கலந்துக்குங்க!


வழக்கம்போல விவேக்குதான் மைக்கப் புடிச்சி எல்லாத்தையும் டேமேஜ் பண்ணுறாரு... சே.. மேனேஜ் பண்ணுறாரு...!

ஐ படம் ஒரு மொக்கைன்னு நான் சொல்லமாட்டேன், ஏன்னா அந்த உரிமை உங்களுக்குத்தான் இருக்கு. நீங்க மொக்கைன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன், ஏன்னா ஷங்கர் சாருக்கு அது பிடிக்காது. மொத்தத்துல ஐ.... ஒரு தலைசிறந்த உலகப்படமா அமையும்னு சொல்லி, மொதல்ல வைரமுத்து சார மேடைக்கு அழைக்கிறேன்.

தமிழனுக்கோர் பெருமை என்றால் அது இந்தியாவுக்கே பெருமை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கோரு பெருமை என்றால் அது தமிழனுக்கே பெருமை, டைரக்டர் ஷங்கருக்குப் பெருமை என்றால் எங்கள் சினிமாக் குடும்பத்திற்கே பெருமை, ஆனால் ஒரு தமிழ்ப்படத்திற்கு பெருமை என்றால் அது அகில உலகத்திற்கே பெருமை....!(ஸ்பீக்கரில் ரிக்கார்ட் செய்யப்பட்ட கைதட்டல் ஒலிக்கிறது, அதைக்கேட்டு ஆடியன்சும் கைத்தட்டுகிறார்கள்)

கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு, ரஜினிக்கு நடையழகு, எங்கள் சினிமாவிற்கு ஷங்கர் அழகு (மறுபடியும் கைதட்டல்), நன்றி!

நன்றி வைரமுத்து சார், நம்ம சினிமாவிற்கு எது அழகுன்னு விளக்கமா சொல்லிட்டீங்க. அழகு அழகுங்கும் போதுதான் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருது. ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கிட்டு வடை சுட்டுக்கிட்டு இருந்துச்சாம். மொத்தம் 5000 வடை. எல்லாத்தையும் ஒரே நேரத்துல ஒரு பெரிய சட்டில போட்டு சுட்டுக்கிட்டு இருந்துச்சி. அவ்வளவு வடையவும் சட்டில இருந்து ஒண்ணா ஒரு பெரிய முள்ளுக்கரண்டிய கிரேன்ல மாட்டி வெளிய எடுத்து வெச்சா அப்போ பாத்து ஆயிரம் காக்கா வரிசையா பறந்து வந்து ஆளுக்கொரு வடைய எடுத்துக்கிட்டு போயிடிச்சி. எல்லா காக்காயும் ஒரு போயி பெரிய மரத்துல உக்காந்துச்சி. மரத்துக்கு 2000 கிளைகள். பாட்டி வடையத் தேடி மரத்துக்கு வந்திடிச்சி. அவ்வளவு பெரிய மரத்தப் பாத்தும் பயப்படாம ஒரு பெரிய கல்ல எடுத்து மேலே வீசிச்சி. கல்லப் பாத்ததும் எல்லாக் காக்காயும் பயந்து போயி வடையக் கீழே போட்டு பறந்து போயிடிச்சி. இதுல வர்ர பாட்டியோட துணிச்சல்தான் எனக்கு அழகு....!..... கைதட்டுங்க எல்லாரும்...ம்ம்ம்..(*&^%$*&@#$...)

ரஜினி, ஷங்கர், வைரமுத்து எல்லாரும் தலையில் கைவைத்தபடி உக்கார்ந்திருக்கின்றனர். அர்னால்டு மலங்க மலங்க முழித்தபடி இருக்கிறார்.

ஓக்கே..ஓக்கே.. இப்பிடி ஐ படத்தோட வெற்றிக்கு(!) முழுமுதல் காரணமாக இருக்கும் ஷங்கர் சாருக்கு எங்கள் சல்யூட்! (மற்படியும் கைதட்டல்!)

அடுத்ததாக டைரக்டர் ஷங்கர் அவர்களை மேடைக்கு அழக்கிறேன்!

எல்லோருக்கும் வணக்கம். இசை வெளியீட்டு விழா நடத்தனும்னு முடிவு பண்ண உடனே நாங்க செஞ்ச முதல் காரியம் விவேக்கக் கூப்பிட்டதுதான் (!). அழைப்பிதழ் டிசைன் பண்றதுக்காக ஜப்பானுக்கு அருகிலுள்ள கும்மாங்கோன்னு ஒரு தீவுக்குப் போயிருந்தோம். அங்கே தண்ணிக்கடியில சுமார் 6000 அடி ஆழத்துல இருந்துக்கிட்டே விடிய விடிய டிசைன் பண்ணோம். அப்புறம் அதை பிரிண்ட் பண்றதுக்காக உருகுவே நாட்டுக்குப் போனோம். அங்க உள்ள ஒரு எரிமலை உச்சியில் இருக்கும் ஒரு டிஜிட்டல் அச்சகத்துல கிட்டத்தட்ட ரெண்டு மாசம் தங்கியிருந்து போஸ்டர் பிரிண்ட் பண்ணோம். அங்கே வந்து ஒத்துழைப்புக் கொடுத்த அனைவரும் எனது நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அடுத்ததா ஒரு முக்கியமான விஷயம். இந்த விழாவுக்கு போஸ்டர் ஒட்டுரதுக்காக மொராக்கோவுல இருந்து ஒரு மெசின வரவழைச்சிருக்கோம். அத வெச்சு முதல் போஸ்டர் ஒட்டும் விழா அடுத்து பனாமா நாட்டில் நடைபெறும். இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்தி உங்க எல்லாரையும் அதற்கு அழைக்கிறேன். இதேற்கெல்லாம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி!
நன்றி ஷங்கர் சார். உங்க முதல் போஸ்டர் ஒட்டும் விழாவுக்கு என்னையும் அழைச்சிருக்கீங்க. அதையும் ஒரு வெற்றி விழாவா ஆக்குவது என் கடமை. உங்க பிரம்மாண்டதிற்கு நான் அடிமை. தமிழனுக்கு அது என்றும் பெருமை! அடுத்ததா நாம் எல்லோரும் ஆவலுடம் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டார் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் (கைதட்டல்...விசில்!)

எல்லாருக்கும் வணக்கம்...(கைதட்டல்..!)..நான் எப்பவும் எதை செஞ்சாலும்...எந்தப் படம் பண்ணாலும் அது தமிழனுக்கு பெருமை தருவதாகத்தான் இருக்கும் (கைதட்டல்...!) இப்படி ஒரு வாய்ப்புக்கொடுத்த ஷங்கர் அவர்களுக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன். ஐ படத்தில் முதலில் என்னைத்தான் நடிக்க சொன்னார்கள், ஆனால் கோச்சடையான் படத்திற்கு பிறகு தொழில்நுட்ப படம் வேணாம் என்று நினைத்ததால் நான் நடிக்கவில்லை.அர்னால்டு நல்ல மனிதர், அழைத்ததும் வந்துவிட்டார். விக்ரம் நல்ல நடிகர், ஷங்கர் நல்ல இயக்குனர், அம்மா நல்ல முதலமைச்சர். நான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வருவேன், இல்லையென்றால் வரமட்டேன். லிங்கா இன்னும் சிறிது நாளில் தயாராகிவிடும். எனவே அனைவருக்கும்  நன்றி!

டிஸ்கி: எந்திரன் படத்தை பற்றி முன்பு எழுதிய பதிவை டிங்கரிங் செய்து போடப்பட்ட பதிவு இது....!