Friday, March 20, 2015

ஆப்பரேசன் சாணி....


நாங்க காலேஜ் படிக்கிறப்போ பக்கதுலயே ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தோம். அடுத்த தெருவுல ஒரு பிகர் இருந்துச்சு. அது ரொம்ப சுமார்தான்றதால ஆரம்பத்துல அத யாரும் கண்டுக்கல.  பிகர்களுக்கு கடும் வறட்சி(?) நிலவுன ஒரு காலகட்டத்துல இந்த பிகர் மேலயும் எங்க பார்வை விழுந்துச்சு, அந்த புள்ள சிட்டில பிரபலமா இருக்கும் ஒரு லேடீஸ் காலேஜ்ல படிச்சிட்டு இருந்துச்சு, சரி பஸ் ஸ்டாப்ல போய் பாத்துக்கலாம்னு காலைல போய் வெயிட் பண்ணா ஆள் வரவே இல்லை. சரி இன்னிக்கு பார்ட்டி லீவு போலன்னு பாத்தா காலேஜ் போயிட்டு ஈவ்னிங் பஸ் ஸ்டாப்ல இருந்து வந்துட்டு இருக்கு.

அடுத்த நாள்  பாத்தா மறுபடியும் அதே கதைதான் காலைல பஸ் ஸ்டாப்புக்கு ஆள் வரல, ஆனா ஈவ்னிங் காலேஜ்ல இருந்து ரிட்டன் வருது. என்னடா நடக்குதுன்னு நம்ம உளவுத்துறைய ரெடி பண்ணி அவங்க வீட்டுப்பக்கம் ஆள் போட்டோம். அடுத்த நாள் பாத்தா அவங்கப்பா டிவிஎஸ்ல கூட்டிட்டு போறாருன்னு தகவல் வந்துச்சு. அலார்ட்டா இருக்காங்களாம். ஆனா அந்த புள்ளயோட காலேஜ் ஏரியா மக்கள், அது காலைலயும் பஸ்லதான் வருதுன்னு தலைல அடிச்சு சத்தியம் பண்ணானுங்க. எல்லாருக்கும் ஒரே குழப்பம்.....


விவகாரம் ரொம்ப சிக்கலாகிட்டே போகுதுன்னு உடனடியா கண்டுபிடிக்க வேண்டிய  உளவுத்துறை பொறுப்ப என்கிட்ட ஒப்படைச்சானுங்க(!). முதல் வேலையா காலைல அவங்க வீட்டுல இருந்து அந்த டிவிஎஸ் எந்தப்பக்கமா போகுதுன்னு பார்த்தோம், பஸ்ஸ்டாப் பக்கமாத்தான் போச்சு, ஒண்ணும் பிடிபடலை,  அதுக்கிடைல அந்த புள்ள வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாடில ரெண்டு சீனியர் பசங்க புதுசா வாடகைக்கு வந்தாங்க. அவனுங்களுக்கு தண்ணியெல்லாம் வாங்கி கொடுத்து ஃப்ரெண்டு புடிச்சு, அவங்க வீட்டுக்கு ஒரு சண்டே போனோம்,  

அவனுங்களுக்கும் மேட்டர் வெளங்கிடுச்சி, இவனுங்க ஏதோ பிகர் மேட்டரா வந்திருக்கானுங்கன்னு, ஆனா பாவம் பசங்க ரொம்ப அம்மாஞ்சி போல, பக்கத்து வீட்டுல ஒரு பிகர் இருக்கறதே அவனுங்களுக்கு தெரியல. யாருடா அது எந்த பிகர் எங்களுக்கு தெரியாமன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டானுங்க. கரெக்டா அந்த டைம்பாத்து மொட்டமாடில வடகம் காயப்போட நம்ம பிகர் மேல வந்து நிக்குது. நாங்க உடனே பாஸ் பாஸ் இந்த பிகருதான், மாடில வந்து நிக்குது பாருங்கன்னு கூப்பிட்டோம். அவனுங்க ஆடி அசைஞ்சு வந்து பார்க்கிறதுக்குள்ள, இந்தப் புள்ள வடகத்த வெச்சிட்டு கீழ போயிடுச்சு போல, அவங்கம்மா வந்து வடகத்த எடுத்து வெச்சிட்டு இருந்துச்சு. இவனுங்க அத பாத்துட்டு, டேய் டேய் உங்க டேஸ்ட்டு ரொம்ப கேவலமா இருக்குடான்னு தலைல அடிச்சிக்கிட்டானுங்க. அதுவுமில்லாம காலேஜ் பூரா வேற மேட்டரை சொல்லிட்டானுங்க. அது காது மூக்கு வெச்சி பக்காவா டெவலப் ஆகி வேற ஆங்கிள்ல போக ஆரம்பிச்சிடுச்சு. டோட்டல் டேமேஜ். ஒரு அட்டுபிகருக்காக இவ்ளோ அடியான்னு இந்த ஐடியாவையும் கைவிட்டாச்சு.

அப்புறம் என்ன, வேற வழி இல்லாம மறுபடியும் பஸ்ஸ்டாப்புக்கே வந்தோம். அங்க இன்னும் அதே கதைதான் ஓடிட்டு இருந்துச்சு. கடைசியா ஒரு நல்ல நாள்ல எல்லாரும் நிதானமா (?) உக்காந்து பேசி எங்க ஏரியாவுல இருந்த எல்லா பஸ் ஸ்டாப்லயும் ஒவ்வொண்ணா செக் பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணி ஒவ்வொரு நாள் ஒரு ஸ்டாப்னு போனோம். கடைசில ஒருநாள் வசமா மாட்டிக்கிடுச்சி பிகரு.... என்னன்னு பாத்தா...  பொண்ண கூட்டிட்டு போயி ரெண்டு பஸ்ஸ்டாப் தள்ளி இருக்கும் பஸ்ஸ்டாப்ல போய் பஸ் ஏத்திவிடுறாரு அவங்கப்பா. ஏரியா பசங்க கண்ணுல காட்டாம பஸ் ஏத்துறாங்களாம்... பட் அடுத்த நாள் அதே ஸ்டாப்ல ஆஜராகுனா, மறுபடியும் பிகரைக் காணல.... நாங்க விடுவமா... ங்கொய்யால யாருகிட்ட.....  எங்க ஏரியாவுல இருந்த எல்லா பஸ்ஸ்டாப்லயும் ஆள் போட்டோம். பட் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பா போயி தேடும்போது அதவிட நல்ல நல்ல பிகருகளா கண்ணுல பட்டதுனால, இந்த பிகரை கைவிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையா போச்சு... நம்ம உளவுத்துறை அவ்ளோ கஷ்டப்பட்டும் கடைசில எந்த பிரயோஜனமும் இல்லாம போயிடுச்சு.....

இதுல சாணி எங்க வந்துச்சின்றீங்களா.... அந்த பிகரு வீட்டுல ரெண்டு மாடு வெச்சிருந்தாங்க, அதுனால அதுக்கு நாங்க வெச்சிருந்த கோட் நேம் சாணி...!

ஆப்பரேசன் சாணி சக்சஸ்.... பட்.....

Saturday, February 28, 2015

காக்கிச்சட்டை...!
நண்பனிடம் இருந்து திடீரென்று ஒரு கால், சீக்கிரம் வா, காக்கிச்சட்டை பார்க்கனும் என்று அவசர அழைப்பு. அந்த குறிப்பிட்ட பிரபலமான மாலுக்கு வரச்சொல்லி இருக்கிறான்... காக்கிச்சட்டை படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எகிற வைக்கும் எதிர்பார்ப்பிற்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா...? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திக்கேயன் தான் என்று பதிவர்கள் விமர்சனம் எழுதும் அளவிற்கு கலக்கி இருக்கிறார்கள் என்று பேச்சு வேறு.... எப்படியாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்று என்னையும் முடிவு செய்ய வைத்திருந்தது, அந்த நேரத்தில்தான் நண்பனிடம் இருந்து அழைப்பு.

வேகமாக தயாராகி, சில பல நிமிடங்களில் அந்த மாலை சென்றடைந்தேன். இந்த காலத்தில் தான் எவ்வளவு வசதிகள்... மால்களுக்குள் நுழைந்தாலே போதும், படம் பார்த்து, பொருள் வாங்கி, உண்டு களித்து வெளியேறலாம், அத்தனையும் குளு குளு ஏசியில்....... கலர்புல் லைஃப்...... கொடுத்து வெச்ச கல்லூரி பசங்க. எந்தக்கடையிலும் எந்தப்பொருளும் வாங்க வேண்டியதில்லை, சும்மா ஏசியில் உலாவிக்கொண்டிருந்தாலே போதும் பொழுது போய்விடும்.


மால்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்களை தயார் செய்து அனுப்புவார்கள் போல. அதற்காகவே பையன்கள் கூட்டம் கூடுகிறது. எல்லா மால்களும் சொல்லி வைத்தது போல பெண்கள் கூட்டம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஒருவேளை இது மால்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூட இருக்கலாம். பலநூறு கோடி முதலீடுகளில் மால்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இது எல்லாம் வியாபார யுக்திகள். எதுவும் சொல்வதற்கில்லை.

அங்கே நண்பன் காத்துக் கொண்டிருந்தான். வழக்கம் போல, ஏண்டா லேட்டு என்று கடிந்தபடி, வா போகலாம் என்று அழைத்துச் சென்றான். சில தளங்கள் மேலே ஏறினோம், பின்பு கீழே சென்றோம். அங்குதான் அந்த மல்டிப்ளக்ஸ் இருந்தது. அதில் ஒரு தியேட்டரில்தான் காக்கிச்சட்டை படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்தது. இன்னும் கூட்டம் வரத்தொடங்கி இருக்கவில்லை.


கும்பல் கும்பலாக ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர். சில ஜோடிகளும் இருந்தார்கள். கல்லூரி வகுப்புகளை கட் அடித்துவிட்டு வந்திருக்கலாம். டீன் ஏஜ் சிறுவர் கூட்டம் ஒன்றும் நின்று கொண்டிருந்தது. பள்ளி நேரத்தில் இவர்கள் எப்படி இங்கே என்று சிந்தித்தபடி, வேகமாக நடந்து கொண்டிருந்த நண்பனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தேன்.

நண்பன் தியேட்டர் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தான். படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருப்பதால் சும்மா சுற்றலாம் என்று போகிறான் போல என்று நானும் பின்னே தொடர்ந்தேன். கீழே சென்றோம், அந்த பகுதியில்தான் பிரபல சூப்பர்மார்க்கெட் ஒன்று இருக்கிறது. அங்கே செல்ல வேண்டு என எனக்கு நீண்ட நாளா ஆசை. சும்மா சுத்துவதற்கு அந்த மார்க்கெட்டுக்குள் போய்ப் பார்க்கலாம் என்று எண்ணி நண்பனை, அழைத்தேன், அதற்குள் அவன் என்னையும் உள்ளே வரச்சொல்லி விட்டு கடைக்குள் நுழைந்துவிட்டான். நேராக துணிகள் இருந்த பகுதிக்குச் சென்றான். போய் சிலவினாடிகள் தேடிவிட்டு, மச்சி இது எப்படி இருக்கு, இத பாக்கத்தான் உன்னை வரச்சொன்னேன் என்று தூக்கிக் காட்டினான். அவன் கையில் இருந்தது, ஒரு காக்கிச்சட்டை!