இது சவால் சிறுகதைப் போட்டி 2011-க்கான எனது இரண்டாவது சிறுகதை.
சந்திரன் அந்த போட்டோவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவன் கையில் நேற்று மாலையிலிருந்து இருந்து கொண்டிருந்தது. தலைகீழாக, சைடாக என்று எல்லாப்பக்கமும் திருப்பித் திருப்பி பார்த்து யோசித்து விட்டான். ஒன்றும் பிடிபடவில்லை. படத்தில் இரு துண்டு பேப்பர்கள் இருந்தன. ஒன்றில் எஸ்.பி. கோகுலுக்கு ஒருவர் S W H2 6F என்ற குறியீட்டை அனுப்பி இருக்கிறார், இன்னொன்றில் அது தவறான குறியீடு என்று இன்னொருவருக்கு சொல்லி இருக்கிறார். அதை பார்த்துக் கொண்டிருப்பவரின் கையில் இருக்கும் செல்போனில் விஷ்ணு இன்ஃபார்மரிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. அது ஒரு தொடுதிரை செல்போன் என்று தெரிந்தது, ஆனால் போன் என்ன பிராண்டு, மாடல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறமாக வெளியில் ஏதாவது ஒரு செல்போன் கடைக்குச் சென்று தேட வேண்டும் என எண்ணிக் கொண்டான். மேசை மீது ஒரு ஸ்டீல் ஸ்கேலும் வெள்ளைக்காகிதமும் இருக்கிறது. அவ்வளவுதான். இதைத்தான் அவன் நேற்று மாலையில் இருந்து யோசித்துக் கொண்டிருக்கிறான்.
செல்போனைக் கையில் வைத்திருப்பவர் ஒரு ஆண் என்று அவரது கையும் தலையும் உணர்த்தின. இடது கையில் வாட்ச் கட்டி இருக்கிறார். நீலக் கலர் ஸ்ட்ராப். வாட்ச் அந்தப் பக்கமாக இருப்பதால் என்ன பிராண்ட், டிஜிட்டல் வாட்சா, அப்போ நேரம் என்னவென்றும் எதுவும் தெரியவில்லை. வெளிச்சத்தை வைத்துப் பார்க்கும் போது அது இரவு நேரமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் கேமரா ப்ளாஷ் லைட்டுகள் எப்போதும் குழப்பிவிடும். வெள்ளைக் காகிதம் குறிப்புகள் எதுவும் எழுதுவதற்காக அந்த காகிதம் வைக்கப்பட்டிருக்கலாம்.
கனவில் கூட அந்த S W H2 6F என்ற குறியீடுகள் வந்து ஆட்டம் போட்டன. அப்போதாவது ஏதாவது க்ளூ கிடைக்குமா என்று எழுந்து உக்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். விஷ்ணு என்பவன் ஒரு இன்ஃபார்மர். அது போட்டோவிலேயே இருக்கிறது. இன்ஃபார்மர் என்றால் அவனுக்குத் தெரிந்த வரை காவல் துறைக்கு ரகசியமாக தகவல் கொடுப்பவர்கள்தான். அந்த துண்டு காகிதத்தில் எஸ்.பி. கோகுல் என்று வேறு இருக்கிறது, எனவே இது நிச்சயமாக காவல் துறை சம்பந்தப்பட்டதுதான். அதுவேறு அவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஏதாவது பெரிய இடத்து வில்லங்கமான சமாச்சாரமாக இருக்குமோ என்று தோன்றியது.
அவனுக்கு திடீரென விக்கியின் ஞாபகம் வந்தது. விக்கியும் சந்திரனும் பள்ளி செல்லும் காலத்தில் இருந்தே தோழர்கள். விக்கி நன்றாக பேசும் திறமை உடையவன் யாரையும் எளிதில் கவர்ந்து விடுவான். அவன் இருக்கும் இடம் எப்போதும் நண்பர்கள் சூழ கலகலப்பாக இருக்கும், இப்போது விக்கி பெரிய அரசியல்வாதி. சந்திரனுக்கு இந்த அரசியல், பரபரப்பு எதுவும் பிடிக்காது அதனால் அவனிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தான். ஆனால் இப்போது வேறு வழியில்லை, விக்கியைத்தான் உதவி கேட்க வேண்டும் போல. உடனே செல்போனை எடுத்து விக்கியை அழைத்தான். விபரத்தைச் சொன்னான். விக்கி உடனே அன்று மாலை வந்து பார்ப்பதாகச் சொல்லி போனை கட் செய்தான்.
மாலை வரை என்ன செய்வது? அதற்குள் தன்னால் முடிந்தவரை தகவல் சேகரிக்கலாம் என்று முடிவு செய்தான். முதலில் ஒரு செல்போன் ஷோரூமிற்குச் சென்று அது என்னவகை செல்போன் என்று கண்டுபிடிக்க வேண்டும். அருகில் இருந்த கடைக்குச் சென்றான். போட்டோவை அங்கே அவர்களிடம் காண்பிக்க தயக்கமாக இருந்தது. கடையில் இருந்த ஒவ்வொரு போன் மாடலாகத் தேடினான். ஒன்றும் சிக்கவில்லை. நேரம் வேறு ஆகிக் கொண்டிருந்தது. வேறு என்ன செய்யலாம்?
அந்த குறீயீடுகளை வைத்து கூகிளில் தேடலாமா? ஆகா நல்ல யோசனை உடனே செயல்படுத்த வேண்டியதுதான் என்று அவசரமாக வீட்டுக்கு வந்தான். அங்கே மின்சாரம் இல்லை. எப்போது வரும் என்றும் தெரியாது. வீணாப்போன லேப்டாப் பேட்டரி முடிந்து போய் பலமாதங்களாகிறது. எரிச்சலுடன் வெளியில் வந்தான். டீக்கடைக்கு சென்றான். ஒரு டீ சொல்லிவிட்டு தினத்தந்தியை எடுத்துக் கொண்டு பெஞ்சில் உக்கார்ந்தான். என்ன செய்யலாம். ராகினி வேறு மிக அவசரம் இன்றே கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாள். இந்த விக்கி வேறு மாலைதான் வருவேன் என்றூ சொல்லிவிட்டான். அதற்குள் ராகினிக்கு எதுவும் ஆகிவிடுமோ....? அந்த நினைப்பே பயங்கரமாக இருந்தது. ராகினி கொஞ்சம் துடிப்பான பெண், ஏதாவது சமுதாயம், பிரச்சனை என்று பேசிக் கொண்டிருப்பவள். இப்போது நினைத்தவுடன் அவளுக்கு போன் செய்யவும் முடியாது. ஏற்கனவே அவர்கள் வீட்டில் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நானாக மேசேஜ் கொடுக்கும் வரை எனக்கு போன் பண்ணவே கூடாது என்று வேறு கண்டிப்பாகச் சொல்லி இருந்தாள் ராகினி.
ஆனால் சந்திரனால் அமைதியாக இருக்க முடியவில்லை. டீயைக் கேன்சல் செய்து வசவுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வேகமாக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான். காதல் என்ன ஆனாலும் பரவாயில்லை அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று முடிவு செய்து அவளை அழைத்தான். இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தாள். இரு அப்புறம் கூப்பிடுகிறேன் என்று கிசுகிசு குரலில் கூறிவிட்டு கட் பண்ணிவிட்டாள். எரிச்சலாக வந்தது. நீண்ட பெருமூச்சுவிட்டபடி அயர்ந்து போய் பெட்டில் சாய்ந்தான். இரவு சரியான தூக்கம் இல்லாததால் அப்படியே கண்ணயர்ந்தான்.
எவ்வளவு நேரம் அப்படியே தூங்கினானோ திடீரென போன் அடித்தது. பதறித் துடித்து எழுந்து எடுத்தால் விக்கி லைனில் இருந்தான். அந்த எஸ்பி பெயர், ஏரியா கேட்டான். ஏரியா தெரியாது என்று சந்திரன் சொன்னதும் கொஞ்சம் எரிச்சல் பட்டான் விக்கி. யார், என்னவென்று கண்டுபிடிக்க கொஞ்சம் தாமதமாகும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டான். பாவம் சந்திரன் எஸ்.பி கோகுல் எந்த ஏரியா என்று அவனுக்கு தெரிந்தால்தானே சொல்லுவான். இப்போது எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டது போ இருந்தது. இனி அவனால் செய்ய இன்றுமில்லை. சற்று அமைதியாக அம்ர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் மின்சாரம் வந்தது. உடனே பாய்ந்து சென்று லேப்டாப்பை உயிர்ப்பித்தான். படபடவென கூகிளில் S W H2 6F என்று அடித்தான். அதற்குள் மறுபடியும் செல்போன் கதறியது. எடுத்தால் ராகினி. ராகினி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். அந்த போட்டோவை வைத்து ஏதாவது விஷயம் கண்டு புடிச்சியா என்று கேட்டாள். இதுவரை ஒன்றும் தேறவில்லை என்றான் சந்திரன். செல்லமாகத் திட்டினாள் ராகினி. அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இப்போது அவன் இல்லை. எரிச்சலோடு, அந்த போட்டோவில் என்னதான் பிரச்சனை, ஏன் பெரிய இடத்து பிரச்சனைகளில் தலையிடுகிறாய்? உனக்கு ஒன்றுமில்லையே என்று படபடவென கேட்டான். ராகினி உடனே அந்த போட்டோவை வைத்து உடான்ஸ் திரட்டியும் பதிவர் பரிசல்காரனும் இணைந்து சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறார்கள், நானும் ஒரு கதை எழுதலாம் என்று இருக்கிறேன் அதற்குத்தான் உன்னிடம் க்ளூ கேட்டேன் என்றாள். சந்திரனுக்கு சுர்ரென கோபம் வந்தது. இதை முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே என்றான். முதலில் சொல்லி இருந்தால் வித்தியாசமான சிந்தனைகள் வராது என்றுதான் சொல்லவில்லை என்றாள் ராகினி.
சந்திரன் கடுப்படைந்து கண்டபடி. திட்ட ஆரம்பித்தான். அதற்கிடையில் பீப் பீப் என்று இன்னொரு கால் வந்தது. பார்த்தால் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான். ராகினியை ஹோல்டில் வைத்து விட்டு விக்கியின் அழைப்பை எடுத்தான்.
”ஹலோ சந்திரா, எஸ்.பி. கோகுலை கண்டுபிடிச்சிட்டேன், நம்ம பக்கத்து ஏரியாதான், இப்போ அவர் ஸ்டேசன்லதான் இருக்கேன், சீக்கிரம் கிளம்பி வா...”
சந்திரனுக்கு தலை சுற்றியது... நா வறண்டது பேச வாய் வரவில்லை...
”ஹலோ...”
”ஹலொ...”
சந்திரன் மயங்கி விழுந்து கொண்டிருந்தான்.