Friday, May 31, 2013

வாசக மொண்ணைகளின் கடித மொண்ணைகள்....


ஒருவழியாக ஜெயிலுக்குள் வந்து செட்டில் ஆகி 10 நாட்களாகி விட்டிருந்தன. மணியடித்த உடன் பசிக்க தொடங்கும் அளவிற்கு பக்குவம் அடைந்திருந்தேன். நான் எழுத்தாளன் என்பது சிறையில் இருந்த பலருக்கும் சவுகர்யமாக போய்விட்டது. வீட்டிற்கு, கள்ளக்காதலிகளுக்கு, அடியாட்களுக்கு கடிதம் எழுதுபவர்கள் அனைவரும் என்னிடமே வந்தனர். நானும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சளைக்காமல் எழுதி குவித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது எனக்கும் ஒரு லெட்டர் வந்திருந்தது. 


அன்புள்ள மொக்கைச்சாமி,
நீ சிறைக்கு சென்ற பின் நம்ம ஊரே நிம்மதியாக இருக்கிறது. டீக்கடையில் நீ வந்துவிடுவாய் என்ற பயம் இல்லாமல் எல்லாரும் சுகமாய் டீ குடிக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல வியாபாரம் என்று டீக்கடை நாயர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நீ எங்கேயோ திருடி விட்டு ஜெயிலுக்கு போய்விட்டாய் என்று கேள்விப்பட்டதும் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்று உன் பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார். மேலும் ஏதாவது செய்துவிட்டு உள்ளேயே இருக்குமாறு சில நண்பர்கள் உன்னிடம் தெரிவிக்க சொன்னார்கள். உன் முடிவு என்ன?

மொண்ணைச்சாமிஅன்புள்ள மொண்ணைச்சாமி
1. சிறைச்சாலையின் பதினைந்து கழிவறைகளை தினமும் சுத்தம் செய்யும் அருமையான பணி எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனக்கானவற்றை அன்றி வேறெதையும் கழுவுவது மட்டும் அல்ல, உள்ளே போகக்கூட என்னால் முடியாது. ஏனென்றால் அவ்வளவு கூட்டம் இங்கே. கக்கூசில் பினாயிலை ஊத்தி அது சுகந்தமாக உள்ளே பரவும் அற்புதக் காட்சியை கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். இத்தகைய மகிழ்ச்சிகளால் மட்டுமே நிறைந்திருக்கிறது இந்த சிறைச்சாலை. வெட்டியாக பேப்பர் படிக்கும் அந்த டீக்கடை கூட்டத்தால் நிறைந்தது அல்ல எனது உலகம்.

2. நாள் முழுதும் டீக்கடையில் உக்கார்ந்து பேசும் எழுத்தாளர்கள் நம்மிடம் மிகச்சிலரே இருக்கிறார்கள். அத்தகைய ஆளுமைகளின் மீது என்றைக்கு இப்படி பேச ஆரம்பித்து விட்டார்களே இனி அந்த டீக்கடை எனக்கானது அல்ல. வெளியில் வந்ததும் அடுத்த தெரிவில் இருக்கும் அண்ணாச்சி டீக்கடைக்கு செல்வதை வழக்கமாக்கிக்  கொள்வேன். அதுவே என்னைப் போன்ற மாட்சிமைமிக்க எழுத்தாளர்களுக்கு இயல்பு

3. நான் எப்பொழுதும் எனக்கான டீக்கு காசு கொடுத்தே வந்திருக்கிறேன். பிரச்சனை என்று வரும் போது அதுவே பாதுகாப்பு. ஆனால் எப்போதும் ஒரு டீயைவிட அதிகமாக காசை சுமந்தலைவதில்லை.  யாரும் புதிதாக வந்து டீ வாங்கிக் கேட்டால் கடனுக்கு வாங்கிக் கொடுப்பதே என் வழக்கம். (அப்போதுதான் மறுபடி வாங்கி கேட்க மாட்டார்கள்)

4. இந்த டீக்கடை விவகாரம் பற்றி பேசுபவர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள்? காலையில் எழுந்த உடன் பல்லு கூட விளக்காமல் டீக்கடைக்கு சென்று எவனாவது ஓசி டீ வாங்கித்தருவானா என்று காத்திருக்க வேண்டியது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இவர்களுக்குத் தெரியுமா? இவர்கள் மக்களைச் சந்தித்து எத்தனை நாட்களாகிறது? நான் மக்களோடு மக்களாக வாழ்பவன். பக்கத்து வீட்டுக்காரனுக்கு நான் ஒரு பக்கத்து வீட்டுக்காரன். இதை யாரும் எனக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட வக்கில்லாதவர்கள் இன்று டீக்கடையில் டீ குடிப்பதைப் பற்றி விவாதிக்கிறார்கள். நான் பிச்சைக்காரனோடு பிச்சைக்காரனாக பிச்சை எடுத்து அவர்களோடு சேர்ந்து பல்லாயிரக்கணக்கான முறை டீக்குடித்திருக்கிறேன். எனக்கு இந்த அரைவேக்காடுகள் எப்படி டீ குடிக்க வேண்டும் அறிவுரை சொல்கிறார்கள். பாண்டிச்சேரிக்காரனுக்கு சரக்கு அடிக்க சொல்லித்தருவதை போல. அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.  டீக்குடிப்பவர்களுக்கு மூளையில்லை என்று டீ மாஸ்டருக்கு தெரிந்தாலும் டீ போடுகிறார். அதுதான் வியாபார நுண்ணரசியல். ஆனால் அதற்காக யாரும் டீ குடிக்காமல் இருக்க மாட்டார்கள் என்று ஆய்ந்தறிவதுதான் ஒரு தரித்திர எழுத்தாளனின் இயல்பு.

5. எழுத்தாளனும், டீ மாஸ்டரும் ஒன்று என்று எந்த நல்ல டீக்கடைக்காரனும் சொல்ல மாட்டான். ஏனென்றால் எழுத்தாளர்களால் டீக்கடை வருமானம் பாதிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். நம்மூர் டீக்கடை ஜந்துகளுக்கு சுயமாக டீயும் குடிக்க முடியாது, வருபவனுக்கு வாங்கி கொடுக்கவும் முடியாது எபோதும்.

நான் ஜெயிலுக்கு போனபின் என்ன பேசுவார்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். ஜெயிலுக்கு போவதற்கும், சிறைக்கு போவதற்கும் வேறுபாடு தெரியாத கும்பல் அது அவர்களால் டீக்கடை அரசியலில் இருக்கும் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு டீ மாஸ்டரை அங்கே டீ குடிக்க வருபவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்ற மொள்ளமாரித்தனத்தைத்தானே எழுதி இருக்கிறேன். அதனால் அவர்கள் திட்டுவது அத்தனையும் அவர்களுக்கேதான்.

இவர்கள் இப்படி சொல்லி அனுப்பியதன் மூலம் டீக்கடையில் என்னால் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள். என்னால் எதுவுமே விளங்காது என்றிருந்ததை இப்போது இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
மொக்கைச்சாமி


Tuesday, May 28, 2013

நானும் எனது வாசகரும்.....என்னுடைய தீவிர (?) வாசகர் ஒருவர் என்னை பார்க்க வேண்டும் என்று நெடுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் கேட்பதற்காகவே நிறைய கேள்விகளை தயாரித்து வைத்திருப்பதாக வேறு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் அவர் ஊர் பக்கமாக வேலை இருந்தது. அந்த ஊர்ப்பக்கம் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லுவார்கள். அன்று மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வருகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். எல்லாம் திட்டமிட்டபடி சரியாகவே நடந்தது. சரியாக 1 மணிக்கு சென்று விட்டேன். அப்போதுதானே கண்டதையும் பேசாமல் உடனே சாப்பிட முடியும்? முகவரியை கண்டுபிடித்து அவர் வீட்டிற்கு சென்றேன். அங்கே வீட்டு வாசலில் அசிங்கமான பன்னாடை ஒருவன் வழியை மறித்தபடி நின்று கொண்டிருந்தான். எனக்கு கோபம் வந்து விட்டது. ராஸ்கல் ஒரு எழுத்தாளன் வரும் வழியில் நிற்பதா என்று ஓங்கி ஒரு அப்பு விட்டேன். அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை போல, அதிர்ச்சியுடன் என்னை முறைத்து பார்த்தபடி நின்றான். போடா என்று குச்சியை எடுத்து அடித்து விரட்டினேன். ஒருவழியாக தயக்கத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான். 

வீட்டிற்குள் நுழைந்தேன். யாரையும் காணவில்லை. அங்கே ஒரு விருந்து சாப்பாடு நடக்க இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வியப்பாக இருந்தது. ஏதாவது அறைகளுக்குள் யாரும் இருப்பார்கள் என்று எண்ணி குரல் கொடுத்தேன். ஒரு தாட்டியான பெண்மணி வெளியே எட்டிப்பார்த்தார். யார் நீங்க என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான், நான் பெரிய எழுத்தாளர், மதியம் விருந்திற்காக வந்திருக்கிறேன் என்றேன். உடனே அந்த பெண்மணி அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாதே, எழுத்தாளர்னா நீங்க பத்திரம் எழுதுறவரா என்று கேட்டார். எனக்கு இதில் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் எனது வாசகர்கள் தங்கள் மனைவிக்குத் தெரியாமல் தான் எப்போழுதும் என் எழுத்தை படிப்பார்கள். நானும் அவரிடம் நான் அந்த எழுத்தாளர் இல்லைங்க  வலைப்பதிவு எழுத்தாளர் என்றேன்.

குழப்பத்துடன் அப்படியா என்று கேட்டு விட்டு உள்ளே போய்விட்டார். சற்று நேரம் கழிந்தது. வெளிப்புறமாக கதவுகள் சாத்தப்படும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று பார்த்தேன். அதற்குள் அனைத்து கதவு, ஜன்னல்களும் பூட்டப்பட்டு விட்டன. என்ன நடக்கின்றது என்றே எனக்கு புரியவில்லை. மறுபடியும் குரல் கொடுத்தேன். ஒருவேளை அந்த தாட்டியான பெண்மணிக்கு நம்மை பிடித்து போய் விட்டதோ என்ற கிளுகிளுப்பும் வந்து போக தவறவில்லை. அப்படியே மெய்மறந்து நின்ற போது திடீரென பின்புறமாக வந்து யாரோ பிடித்தார்கள். இரும்புப்பிடியாக இருந்தது, ஒரு வினாடி அது அந்த தாட்டியாக இருக்குமோ என்று தாமதித்தேன். அதற்குள் பிடி இறுகியது. இது அந்த தாட்டியாக இருக்க வாய்ப்பில்லை. கத்தினேன். என்னவென்று பார்ப்பதற்குள் பின்மண்டையில் அடிவிழுந்தது. கண்விழித்துப் பார்த்தால் லாக்கப்பிற்குள் இருக்கிறேன். என்ன நடந்தது என்று அருகில் இருந்த சக கைதி சொன்னார். திருடன் என்று எண்ணி என்னை பிடித்து வைத்திருக்கிறார்களாம். ஒரு எழுத்தாளனுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்? எனது வாசகர்கள் பலர் அந்த ஊர்ப்பக்கம்தான், எனவே யாரும் அங்கே இருப்பார்களோ என்று அங்கிருந்த லாக்கப்புகளில் உத்துப் பார்த்தேன். யாரும் இல்லை என்று வருத்தமாக இருந்தது. நமது வாசகர்களுக்கு இன்னும் பயிற்சி போதாது போல. ஒருவேளை இந்த ஏட்டு நம் வாசகராக இருக்க போகிறார் என்று சார் நீங்க ஃபேஸ்புக் பார்ப்பீங்களா என்று கேட்டேன். பளார் என்று அறை விழுந்தது கெட்ட வார்த்தைகளுடன். அவ்வளவுதான் ஃபேஸ்புக்கிற்கே இந்த அடி இனி எழுத்தாளன் என்று சொன்னால் விடிய விடிய லாடம் கட்டிவிடுவார்கள் என்று மூடிக்கொண்டேன் எல்லாவற்றையும். 

அந்த சக கைதி வந்து வாஞ்சையாக தட்டி கொடுத்தான். நீங்க எழுத்தாளரா என்று கேட்டான். எழுத்தாளனை மதிக்க ஒருவனாவது இங்கே இருக்கிறான் என்று நிம்மதியாக இருந்தது. ஆமாம் என்றேன். அதற்கு அவன் நானும் எழுத்தாளன் தான், எழுதுபவர்களுக்கு இது கெட்ட நேரம் என்றான். தமிழ்நாட்டில் எனக்குத் தெரியாமல் ஒரு எழுத்தாளரா என்று எனக்கு வியப்பாக போய்விட்டது. அவனிடமே கேட்டேன். அவன் பெண் ஐடியில் ஃபேஸ்புக்கில் எழுதுபவனாம். அவனை காதலிப்பதாக கூறி சிலர் அவர்களாக அவனுக்கு பணம் அனுப்பினார்களாம், அதனால் அவனை கைது செய்துவிட்டார்கள் என்று கூறினான். வருத்தமாக இருந்தது. எழுதுபவனுக்கும் சுதந்திரமில்லை, காதலிப்பவனுக்கும் சுதந்திரமில்லை. 

அப்போது ஒருவனை அடித்து உதைத்து இழுத்து வந்தார்கள். அவன் முகம் எங்கோ பார்த்த முகமாக இருந்தது. அடேய் அவன் இன்று என்னிடம் அறை வாங்கிய அந்த பன்னாடை அல்லவா? அவனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பஸ்ஸ்டாண்டில் பிச்சை எடுக்கும் சாக்கில் பிக்பாக்கெட் அடித்ததாக சொன்னார்கள். அடப்பாவி அப்போ அவனுக்கு பதிலாகத்தான் என்னை பிடித்துக் கொண்டு வந்தார்களா? சரிதான், உண்மையை விளக்கமாக எடுத்துச் சொல்லி எளிதாக வெளியே வந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டேன். 

அதற்குள் அவன் என்னருகில் வந்தான். நான் தான்யா உன்னை வர சொன்ன ஆளு. மதியம் சாப்பாடு வாங்கி கொடுப்பேன்னுதானேயா உன்னை அங்கே வரச்சொல்லி வெயிட் பண்ணேன், நீ பாட்டுக்கு அடிச்சி தெரத்திட்டு ஜெயிலுக்கு வந்துட்டே? அதான் பிக்பாக்கெட் அடிச்சு, நானும் இங்க வர வேண்டியதா போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்துதான் அடிச்சோம்னு சொல்லிடுறேன்,செண்ட்ரல் ஜெயில்ல ரெண்டு மாசம் போடுவாங்க, உள்ளே போய் நிம்மதியா இலக்கிய விவாதம் பண்ணலாம், நான் உன்கிட்ட நிறைய கேள்விகள் கேட்க வேண்டி இருக்கு என்றான். எனக்கு தலை சுற்றியது. ஏட்டு லத்தியுடன் கோபமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். 


Wednesday, May 15, 2013

பட்டா போய்விட்டார்....

பட்டா போய்விட்டார்....
நக்கல் நையாண்டிகள் முடிந்தது.
பின்னூட்ட போர்கள் ஓய்ந்தன.

இதுவரை முகம் தெரியாமலே இருந்துவிட்டு,
நீ இறந்துவிட்ட பின்பு பார்த்த உன் முகம்
இனி வதைத்துக் கொண்டே இருக்க போகிறது
அதையும் பார்க்காமலேயே இருந்திருக்கலாம்.....

என்றாவது ஒருநாள் பழையபடி பதிவுகளில்
ஒன்றாக களம் இறங்கி கலக்குவோம் என்று
காத்திருந்தது கானல் நீராகிவிட்டது...
அத்தனை ஆக்ரோஷமாக அரசியல் பதிவுகள்
எழுதினாலும், எத்தனை எத்தனை நட்புகளை
சம்பாதித்து வைத்திருக்கிறாய்?

எத்தனை பதிவுகள், எத்தனை அஞ்சலிகள்....
உனக்காக சிந்தும் கண்ணீரின் துளியோரம்
கொஞ்சம் பெருமிதமும் எட்டிப் பார்க்கிறது....
உன்னோடு இன்னும் கொஞ்சம் நன்றாக பேசி பழகி
இருக்கலாமோ என்று காலம் கடந்த
ஞானம் வருகிறது இன்று....

இருந்தாலும்...
உன் முகத்தை பார்க்காமலேயே
இருந்திருக்கலாம் கடைசிவரை....

Monday, May 13, 2013

நண்பனே...

இரண்டு மாதங்களாக ப்ளாக்கில் எதுவும் எழுதவில்லை. ஏதாவது எழுதலாம் என்று அவ்வப்போது எண்ணம் வந்து போனாலும் உக்காந்து எழுத முடியாத அளவுக்கு நேரப்பற்றாக்குறையாக இருந்து வருகையில், இன்று இப்படி ஒரு விஷயத்திற்காக எழுத நேர்ந்திருக்கிருக்கிறது என்பதை மிகுந்த வருத்ததுடன் எண்ணிப்பார்க்கிறேன். 

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு முன்னால் ஏதேச்சையாக எதையோ கூகிளில் தேடிய போது வந்து மாட்டியது வெளியூர்க்காரன் ப்ளாக். அங்கே பின்னூட்டம் இடும் போதுதான் அவர் பழக்கமானார். பழக்கம் என்பதைவிட அறிமுகம் என்று சொல்லலாம். யார் இவர் என்று அவருடைய ப்ளாக்கிற்கு சென்று பார்த்துவிட்டு ஆடிப்போனேன். அசாத்திய துணிச்சல், நகைச்சுவை, நக்கல், சமூக பொறுப்பும் கலந்துகட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.மிக எளிமையான வார்த்தைகளில் எழுதுவார். இன்று வரை அவர் எழுதுவது போல் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் அதன் அருகில் கூட செல்ல முடியவில்லை. ப்ளாக்கில் கும்மியடிப்பது என்றால் என்னவென்று தெரிந்து கொண்டது அங்கேதான். அந்த உந்துதலில் தான் இந்த ப்ளாக்கை ஆரம்பிக்கும் எண்ணமே ஏற்பட்டது. எங்கள் டெரர்கும்மி நண்பர் குழுவே அவரது ப்ளாக்கில் பின்னூட்டம் இடுபவர்களுக்குள் ஏற்பட்ட நட்பில் உண்டானதுதான். 

அவரை பிடித்துப் போனவர்களே எனது நண்பர்கள் வட்டமாக அமைந்தது தற்செயலானது அல்ல என்றே இப்போது தோன்றுகிறது. அவருடன் வழமையாக சாட்டோ, போன் காலோ செய்ததில்லை. இருப்பினும் நல்ல புரிதல் இருந்தது.  சமீபகாலமாக அவரும் மிக பிசியாக இருந்ததால் முன்பு போல் அவருடன் தொடர்பில் இருக்க முடியவில்லை.  இன்று காலை திடீரென வந்த இந்த செய்தி வெறும் வதந்தியாக இருக்கும் என்றே நினைத்தேன். செய்தி உறுதிப்படுத்தப்பட்ட போதும் நம்ப முடியாமல் அது வதந்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கவே விரும்புகிறது மனது.  அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் விரைவிலேயே மீண்டு வர வேண்டும். அதைத்தான் அவரும் விரும்புவார். 

எங்கள் அருமை நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி