Friday, December 30, 2011

உங்களுக்கு என்ன பிரச்சனை?

உங்களுக்கு முடி உதிர்கிறதா...? தலை வழுக்கையாகிறதா....? முடி அடர்த்தியே இல்லாமல் காணப்படுகிறதா...? அல்லது தலையில் முடியே இல்லையா....?

இனி கவலையே படவேண்டாம். எங்கள் எருமை மாட்டின் ஆயில் தேய்த்தால் எல்லா பிரச்சனையும் தீரும். உலகப்புகழ் பெற்ற அமேசன் காட்டு புதரில் வாழும் எருமை மாடுகளின் சாணியில் இருந்து எங்கள் ஆராய்ச்சியாளர்களால் பல்லாண்டு காலம் ஆய்ந்து கண்டறியப்பட்டு அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது இந்த எருமை மாட்டின் ஆயில்.

தேய்க்க ஆரம்பித்து மூன்றே மணிநேரத்தில் கொத்துக் கொத்தாக முடி முளைத்துவிடும். என்ன அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், இது அதிசயம் ஆனால் உண்மை. எங்கள் வாடிக்கையாளர்கள் பலர் பயன்படுத்தி பயனடைந்ததைப் பாருங்கள்!

எண்ணை உபயோகிக்கும் முன்எங்கள் எருமை மாட்டின் எண்ணையை உபயோகித்து மூன்றே நாட்களில்


15999 ரூபாய் மதிப்புள்ள இந்த அற்புதமான எண்ணை உங்களுக்காக வெறும் 5999 ரூபாய்க்கே.

போனை எடுங்க உடனே அழைங்க, இந்தச் சலுகை இன்று மட்டுமே.

அழைக்க வேண்டிய எண்: 1800-ங்கொக்காமக்கா-1234 
(இண்டர்நேசனல் ஹாட்லைன்)


**************


ஜிம்முக்கு போகாமல் இடையை ச்சீ எடையை குறைக்க வேண்டுமா? தினமும் 20 நிமிடம் வீட்டிலேயே இருந்து எங்கள் கார்ப்பிட் சைக்கிளிங் மெசினில் எக்சர்சைஸ் செய்தால், இரண்டே நாளில் சிக்ஸ் பேக், எய்ட் பேக் அனைத்தும் கரைந்து சிங்கிள் மூட்டையாகிவிடும். பின் உங்கள் கவர்ச்சி எக்கச்சக்கமாக அதிகரித்து நீங்கள் ஒரு சினிமா கதாநாயகன் ஆவது உறுதி. 


கார்ப்பிட் சைக்கிள்


இந்த கார்ப்பிட் சைக்கிளை உபயோகிப்பது மிகவும் எளிதானது. ஸ்டாண்டு போட்டு நிறுத்தி ஏறி உக்கார்ந்து பெடலை அழுத்தினால் போதும். அந்த நாள் முதல் இந்த நாள் வரை பாடலை உங்கள் லேப்டாப்பில் போட்டுக்கொண்டு பெடலை அழுத்த ஆரம்பித்தால் பாடல் முடிவதற்குள் நீங்கள் ஆளே மாறிப்போய்விடுவது உறுதி!

கார்ப்பிட் சைக்கிளை உபயோகித்து அழகான தோற்றம் பெற்று சினிமாவில் கதாநாயகனாகிய எங்கள் வாடிக்கையாளர்


59, 999 ரூபாய் மதிப்புள்ளே இந்த கார்ப்பிட் சைக்கிள் உங்களுக்காக வெறும் 9,999 ரூபாய்க்கே....!
உடனே அழைப்பீர். சலுகை இன்று மட்டுமே.


அழைக்க வேண்டிய எண்: 1800-ங்கொக்காமக்கா-1234 
(இண்டர்நேசனல் ஹாட்லைன்)


***********தெரிந்தோ தெரியாமல் சிறுவயதில் செய்த தவறுகளினால் உங்களால் எதுவுமே முடியலியா? உடல் சிறுத்துப் போய் சோர்வாக தோற்றமளிக்கிறீர்களா? உற்சாகமே இல்லாமல் இருக்கிறதா? சாப்பாடு உடலில் ஒட்டவில்லையா? கை நடுங்குகிறதா? பயமாக இருக்கிறதா? வேதனைகளும் சோதனைகளும் கைகோர்த்து வருகிறதா?

கவலையே வேண்டாம், ஆறு தலைமுறைகளாக சேலத்திலேயே இருந்து ஆராய்ச்சி செய்து கண்டறிந்த வைத்தியமுறையால் உங்கள் அனைத்து பிரச்சனைகளும் ஐந்தே நிமிடத்தில் குணமடையும். 

எங்கள் வைத்தியமுறையின் படி உங்களுக்கென சிறப்பாக தயாரித்துக் கொடுக்கப்படும் கயிறை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டு தொங்கினீர்கள் என்றால் ஐந்தே நிமிடத்தில் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்வது உறுதி. 

சாதா ட்ரீட்மெண்ட்: ரூ 5999ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 9,999

சூப்பர் ஸ்பெசல் ட்ரீட்மெண்ட்: ரூ 15,999


அடுத்த விளம்பரத்தில் எங்களிடம் கயிறு வாங்கி தொங்கியவர்களின் பேட்டி எடுத்துப் போடப்படும், தவற விடாதீடாமல் பார்த்து மகிழுங்கள்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012!

நன்றி: கூகிள் இமேஜஸ், பவர் ஸ்டார்
!

Monday, December 26, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - இன்றுமுதல் பதிவுகளை இணைக்கலாம்!

அனைவருக்கும் வணக்கம்,
சுனாமி என்ற ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடி 7 அண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இயற்கையின் ஆக்ரோஷ சக்தியை முழுமையாக உணர்ந்த தருணங்கள் அவை. சுனாமியால் வந்த பேரிழப்புகளும், துயர் துடைக்க நீண்ட ஆதரவுக்கரங்களும் என்றென்றும் மறக்கமுடியாதவை. 

இனி நம் டெரர் கும்மி விருதுகள் பற்றிய இன்றைய அறிவிப்பினைக் காண்போம்.

முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் ) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளுங்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளை இணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி.

                                                                                      
நன்றி..!

Wednesday, December 21, 2011

மாங்கா மரத்துல ஆப்பிள்....!

பாபுவும் ரமேசும், போன நூற்றாண்டுல சின்னப்பசங்களா இருந்தப்ப நடந்தது இது. ரமேசு அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த ஒரு மாங்கா மரத்துல வேக வேகமா ஏறுனான்..... அங்க ஏற்கனவே பாபு ஏறி மாங்கா களவாண்டுக்கிட்டு இருந்தாரு. ரமேசைப் பார்த்துட்டு

பாபு: டேய்.. டேய்ய்... இங்க ஏன்டா வந்தே?

ரமேஷ்: ஆப்பிள் சாப்பிட.......

பாபு: அடிங்க...... இது மாமரம், இதுல மாங்கா தான் இருக்கும்....

ரமேஷ்: பரவால்ல.... இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் நான் கையோட ஆப்பிள் கொண்டு வந்திருக்கேன்.....

பாபு: ??!!**???

**********


டெரர் பாண்டியன் அப்போ ஸ்கூல் (!)  படிச்சிட்டு இருந்தார்.

டீச்சர்: கிபி 1773 ல தான் ஆக்சிஜனை கண்டுபுடிச்சாங்க தெரியுமா?

டெரர்: நல்ல வேள நான் அதுக்கு முன்னாடி பிறக்கலை, இல்லேன்னா மூச்சு முட்டி செத்திருப்பேன்...

டீச்சர்: ?*?

**********


வைகை கணக்குப்பாடம் படிச்சிட்டு இருந்தாரு. அப்போ

டீச்சர்: டேய் ஏன் தரைல உக்காந்து கணக்கு போடுறே?

வைகை: நீங்கதானே டீச்சர் டேபிள்ஸ் யூஸ் பண்ணாம கணக்கு போட சொன்னீங்க?


**********


டீச்சர்: டேய் ரமேஷ்... ஏன் இங்க வந்தே, உன்னை லைன் கடைசில தானே நிக்க சொன்னேன்?

ரமேஷ்: லைன் கடைசில ஏற்கனவே ஒருத்தன் நிக்கிறான் டீச்சர்........

டீச்சர்: ??!!??**!


**********


டெரரும் செல்வாவும் காட்டுப்பக்கமா நடந்து போய்ட்டு இருந்தாங்க, அப்போ அந்தப்பக்கமா வந்த ஒரு சிங்கம் அவங்களைப் பாத்து உறுமுச்சு. பார்த்தா சிங்கம் ரொம்ப பசியாவும், கோபமாவும் அவங்களை தாக்க தயாராகிட்டு இருந்துச்சு. உடனே செல்வா வேக வேகமா பேக்ல வெச்சிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை எடுத்து மாட்டிக்கிட்டான்.

டெரர்: டேய்.. செல்வா.. ஏன்டா இந்த டைம்லேயும் இப்படி காமெடி பண்றே... ஷூவ போட்டுக்கிட்டா சிங்கத்தவிட வேகமா ஓடிடுவியா?

செல்வா: இல்லண்ணா... சிங்கத்த விட வேகமா ஏன் ஓடனும்... உங்களைவிட வேகமா ஓடுனா போதும்ல....?


**********


வைகை: என்னடா உன் சாக்ஸ் ரொம்ப வித்தியாசமா இருக்கு, அந்தக் காலு செகப்பாவும் இந்தக்காலு பச்சை கலராவும் இருக்கு?

ரமேஷ்: ஆமாடா எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு, புதுசா இப்படி வந்திருக்கு போல, இது மட்டுமில்ல, இதே மாதிரி இன்னொரு ஜோடி சாக்ஸ் வீட்ல இருக்கு, அதுவும் இதே மாதிரி ஒண்ணு செகப்பும் ஒண்ணு பச்சையுமாத்தான் இருக்கு....!


**********
இதுல தொங்குறது வேற யாருமில்ல, நம்ம சிரிப்பு போலீசுதான், அவருக்கு தப்பிக்க ஒரு வழி சொல்லுங்க பார்ப்போம்....?


நன்றி: ஜோக்குகளும் படமும் மெயிலில் வந்தவையே.....!

Monday, December 19, 2011

இதெல்லாம் நல்லதுக்குங்கிறே....?


ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...பார்த்தீங்களா என் பவரை....?இது எத்தன நாளைக்குன்னு பார்க்கிறேன்....!இதுக்கு என்னய்யா அறிக்கை விடுறது...?யாரும் எதையும் பண்ணட்டும், நாம நம்ம வேலைய பார்ப்போம்...!இப்போ போய் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்கலாமா வேணாமா?பயப்படாதீங்க ரசிகர்களே, லத்திகா தொடர்ந்து ஓடும்...மாப்பி.. இதெல்லாம் நல்லதுக்குங்கிறே....?


புகைப்படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்...!

Monday, December 12, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011
நண்பர்கள் அனைவரும் டெரர்கும்மி என்ற எங்கள் குழுவை அறிந்திருப்பீர்கள். இணையத்தில் பதிவர்களாக அறிமுகமாகி, பழகி, நட்பால் இணைந்து உருவான குழு அது. டெரர்கும்மி குழுவின் வலைப்பூ தொடங்கப்பட்டு நண்பர்கள், வாசகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒரு ஆண்டினை நிறைவு செய்ததைக் கொண்டாடும் முகமாக இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதாக முடிவு செய்திருக்கிறோம். 

பதிவுகளை பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும்  உங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தேர்ந்தெடுத்து வையுங்கள். எப்படி எங்களுக்கு அனுப்புவது என்று அறிவிப்பு வந்தவுடன் அதன்படி அனுப்புங்கள். 

ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்  அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு (ஒவ்வொரு பிரிவிலும்) டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும்! அனைத்துப் பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்த பரிசுத்தொகை  RS 10000/-
1 . நகைச்சுவைப்  பதிவுகள்.
இந்த பிரிவின் கீழ் உங்கள் ஆகச்சிறந்த நகைச்சுவை படைப்பு என்று கருதும் எந்த படைப்பையும் இணைக்கலாம்! உங்கள் பதிவுகளை தேர்ந்தெடுக்க இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் தயாராக இருக்கின்றனர்! இன்னும் என்ன தாமதம்? கிளப்புங்கள் பட்டையை :-)

2 . கவிதைகள்
இந்த பிரிவின்கீழ் உங்கள் கவிதைகளை இணைக்கலாம். கவிதை என்றால் அது எந்த வடிவமாக இருந்தாலும் கவலை வேண்டாம் மரபுக் கவிதை, புதுக்கவிதை இப்படி தனித்தனிப் பிரிவுகள் இல்லை.  எப்படிப்பட்ட கவிதையையும் எங்களிடம் தாருங்கள். அதில் இருந்து சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுக்க எங்கள் கவிஞர்கள் தயாராக உள்ளனர்!

3 . விழிப்புணர்வு
இந்தப் பிரிவின் கீழ் உங்கள் விழிப்புணர்வு பதிவுகளை இணைக்கலாம்.. விழிப்புணர்வு என்றால் அது சமூகம், சுற்றுச்சூழல், கல்வி, மொழி இப்படி எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம்! உங்கள் பதிவு சமூக மாற்றத்திற்கு சின்ன விதையை விதைக்கும் என்று கருதினால் அதை தயங்காமல் எங்களிடம் இணையுங்கள்! சிறந்ததை தேர்ந்தெடுக்க எங்கள் நடுவர்கள் தயாராக உள்ளனர்!

4 . கதைகள்
இந்தப் பிரிவின் கீழ் சிறந்த கதை என்று நீங்கள் நினைக்கும்  உங்கள் கதைகளை இணைக்கலாம்! கதைக்களன் எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்... சமூகம், குடும்பம், க்ரைம், த்ரில்லர் இப்படி.. அப்பறம் என்ன தயக்கம்? உடனே தயாராகுங்கள்! (தொடர்கதைகளுக்கு அனுமதி இல்லை, மன்னிக்கவும்)

5 . அனுபவம்/பயணக்கட்டுரை
இரண்டு பெயர் கொண்ட தலைப்பை பார்த்து குழம்ப வேண்டாம்.. சிலர் ஒரு கடைக்குச் சென்று வந்த அனுபவத்தைக் கூட அழகாகச் சொல்லியிருப்பார்கள்... சிலர் ஒரு இடத்திற்கு போய் வந்தால் அவர்களின் கட்டுரையின் வாயிலாக நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் செல்வார்கள்! உங்கள் பதிவுக்கு இப்படி ஒரு தகுதி உண்டென்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் பதிகளை இந்த பிரிவின்கீழ் இணைக்கலாம்!

6 . அரசியல் கட்டுரை
கடந்த கால அரசியல் ஆகட்டும் சம கால அரசியல் ஆகட்டும், இரண்டைப் பற்றியும் திறம்பட எழுதக்கூடிய பதிவர்கள் நம் பதிவுலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். இப்படி ஒரு பதிவாக உங்கள் பதிவு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்!

7 . திரை விமர்சனம்
இன்று இயக்குனர்கள் கூட நம் பதிவர்களுக்கு சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யும் நிலைக்கு நம் பதிவர்களின் விமர்சனம் தரமாகவும் நடுநிலையாகவும் இருக்கின்றது! மோசமான திரைப்படத்தின் விமர்சனத்தைக் கூட நல்ல விமர்சனம் என்று சொல்ல வைக்கும் வகையில் எழுதக்கூடியவர்கள் இங்கு அதிகம். இப்படி ஒரு விமர்சனத்தை நீங்கள் எழுதியிருந்தால் இந்த பிரிவின்கீழ் இணைத்துவிடுங்கள்!

8 . தொழில்நுட்பம்
தொழில்நுட்ப பிரிவில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் சம்பந்தமான பதிவுகள் மட்டுமல்லாது, அறிவியல், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் இணைக்கலாம். கணினி சம்பந்தமான அனைவருக்கும் தெரிந்த விளக்கம் அளிக்கும் பதிவுகளாக அல்லாமல் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் புதிதாக அறிமுகமாகும் கணினி மென்பொருள்களை பற்றி விளக்குவதாகவும்,  அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சம்பந்தமான எல்லோருக்கும் புரியும்படியான கட்டுரைகளாகவும் இருத்தல் நலம்.

9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
நீங்கள் இந்தவருடம் ( 2011 )  ஜனவரி முதல் தேதிக்கு பிறகு பதிவுலகிற்கு வந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை அல்லது அவர்களால் கவனிக்கப்படாமல் போன நல்ல பதிவுகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தால் தயங்காமல் இந்த பிரிவின் கீழ் இணைத்துவிடுங்கள்! உங்களை அங்கீகரிக்க நாங்கள் தயாராக உள்ளோம்! இதற்கு நீங்கள் எந்தக் குறிப்பிட்ட இடுகையையும் இணைக்க வேண்டாம். உங்கள் தளத்தின் முகவரியை மட்டும் இணைத்தால் போதுமானது. மற்றதை எங்கள் நடுவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!

10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.
இந்த பிரிவில் நீங்கள் இணைக்கமுடியாது. இது இந்த வருடம் முழுவதும் தொடர்ச்சியாக பல துறைகளிலும் படிக்க சுவாரஸ்யமான பதிவுகள் தந்த பதிவர் ஒருவரை அடையாளம்  காட்டும்  முயற்சி!  இது முழுக்க முழுக்க டெரர் கும்மி நண்பர்கள் நாங்கள் பதினாறு பேரும் ஒவ்வொருவரை நாமினேட் செய்து அதில் இருந்து ஒரு சிறந்த பதிவரை  தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளோம். இதில் எங்களுக்கு என்று சில விதிகளை வகுத்துள்ளோம். இந்த பிரிவு மட்டும் முழுக்க டெரர் கும்மி முடிவு சார்ந்தது!  

மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது பிரிவான ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது விடைபெறுகிறோம்!

நன்றியுடன்
டெரர் கும்மிக்காக,
பன்னிக்குட்டி ராம்சாமி