கேப்டன்..... ராப்பகலா மக்களுக்கு உழைச்சது (?) போதும், கொஞ்ச நேரமாவது
தூங்குங்க கேப்டன்.........!
கருப்பு எம்ஜியார்னு சும்மா வாய்ல சொன்னா நம்ப மாட்டேங்கிறானுங்கய்யா......!
ஆளாளுக்கு திரும்பி பாக்கிறேன், திரும்பாம பாக்கிறேன்னு போட ஆரம்பிச்சிட்டாங்க, நானும் இதோ 2012-ம் ஆண்டின் முக்கிய விஷயங்களை நினைவு கூறும் விதமா திரும்பி பார்க்கிறேன்......
1. ஜனவரி
முதல் மாதம் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்திருப்பார்கள். கையெழுத்து (?) போடும் போது, தேதி போடும் போது 2011-ல் இருந்து 2012 ஆக மாற்றிக் கொள்ள சில நாட்கள் ஆனதை வைத்து எனக்கு 2011 மிகவும் பிடித்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மாதத்தில் வெறும் 31 நாட்களே இருந்தது என்பதை காலண்டரில் நாட்களை எண்ணிப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
2. பிப்ரவரி
ஜனவரி 31-க்கு பிறகு 1- தேதியில் இருந்து பிப்ரவரி என்று காலண்டரில் போட்டிருந்தார்கள். இந்த மாதத்தில் 29 நாட்களே இருந்ததை பார்த்து காலண்டர்காரன் என்னை ஏமாற்றியதை அறிந்து கொண்டேன். காலண்டர் வாங்கிய கடைக்கு சென்று காசை திரும்ப வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் இம்மாதத்தில் 1 நாள் கம்மியாக வேலை பார்க்கலாம் என்று நண்பர் சொன்னதைக் கேட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.
3. மார்ச்
மார்ச்சில் மறுபடியும் 31 நாட்கள். இந்த மாதத்திலும் நாட்கள் வழக்கம் போல 24 மணி நேரமாகவே இருந்தன என்று பலரும் கூற கேள்விப்பட்டேன். நல்லதுதான். திடீரென நேரம் கூடிவிட்டால் அப்புறம் எல்லாருக்கும் புது வாட்ச் யார் வாங்கி கொடுப்பது?
4. ஏப்ரல்
4-வது மாதம். முட்டாள்களின் நாளான ஏப்ரல் 1-ம் தேதியை வைத்திருப்பதால் அதையும் வைத்து கடலை போட பலருக்கும் உதவிய மாதம். வெறும் 30 நாட்கள், பிப்ரவரி தந்த அனுபவத்தில் நல்லவேளை இம்மாதத்தில் 31 இல்லை என்று ஆறுதல் அடைந்தேன்.
5. மே
ஆடுகளால் எளிதாக சொல்லக் கூடிய மாதம் என்று புகழ் பெற்ற மாதம். ஆடுகள் இம்மாதத்தை எப்படி உச்சரிக்கப் பழகின என்று கூகிளில் பலவிதமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
6. ஜூன்
இந்த மாதத்திலும் 30 நாட்களே இருந்தன. வழக்கம் போல் இரவு, பகல் என்று மாறி மாறி வந்தது நன்றாக இருந்தது. எல்லாரும் செய்வது போல் இரவில் தூங்கவும், பகலில் விழித்திருக்கவும் செய்தேன். அதுவும் நன்றாக இருந்தது.
7. ஜுலை
விடுமுறையே இல்லாத மாதம் இம்மாதம்தான் என்று பலரும் சொல்ல கேட்டேன். அடுத்த முறை காலண்டர் தயாரிப்பவரிடம் ஜூலை மாதத்தில் 2 நாட்கள் விடுமுறை வைத்து தயாரிக்க சொல்ல வேண்டும். காலண்டர் தயாரிப்பவர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளலாம்.
8. ஆகஸ்ட்
ஆகஸ்ட்டில் சுதந்திர தினம் வருவது சந்தோசமாக இருக்கிறது. 1947-லேயே சுதந்திரம் வாங்கி விட்டோம் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன். ஆனால் ஏன் வருடா வருடம் சுதந்திர தினம் வருகிறது என்று தெரியவில்லை. எப்படியோ ஒருநாள் விடுமுறை என்பதால் யாரும் இதைப்பற்றிக் கேட்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
9. செப்டம்பர்
மணிரத்னம் இந்த மாதத்தை வைத்து ஒரு பாடல் எடுத்தார். நல்ல கிக் நிறைந்த பாடல். ஆகையால் இது ஒரு நல்ல மாதமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த பாடலை இம்மாதத்தில் எந்த டீவியிலும் போடவில்லை என்று இங்கே பதிவு செய்கிறேன்.
10. அக்டோபர்
இரண்டு இலக்க மாதம். வருடம் முடியப் போவதை அறிவிக்கும் மாதம். விடுமுறைகள் நிறைந்திருப்பதால் எல்லாருக்கும் ஜாலியாக இருந்திருக்கும். இந்த மாதத்திலும் சாப்பிடும் நேரங்கள் காலை, மதியம், இரவு என்று அப்படியே இருந்தது நெகிழ்வு.
11. நவம்பர்
இது பதினொன்னாவது மாதம் என்று அறியப்படுகிறது. இதிலும் 30 நாட்கள் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. காலண்டர் தயாரித்தவனை சந்திக்கும் போது கேட்க வேண்டும்.
12. டிசம்பர்
கடைசி மாதம். நிஜமாக உலகின் கடைசி மாதமாகிவிடும் என்று பலரையும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டது. மாயி படத்தில் வந்த மாயிதான் மாயன் என்று அனைவரும் உடனடியாக தெரிந்து கொண்டது வியப்பாக இருந்தது. அந்த வகையில் பலவருடங்களுக்கு முன்பே மாயி படத்தை எடுத்த சரத்குமாருக்கு பாராட்டுகள்.
இந்த மாதத்தோடு வருடம் முடிவதாக பலரும் சொல்கிறார்கள். காலண்டரில் நன்றாக தேடிப்பார்த்துவிட்டேன், காலண்டர்தான் முடிகிறது. நம்மையெல்லாம் மறுபடியும் புதுக் காலண்டர் வாங்க வைப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆதிக்க சக்திகள் செய்யும் சதியாகவே இதைப் பார்க்கிறேன். அவர்களுக்கு என் கண்டனங்கள்.
இதான் நான் பார்த்த 2012.
அடுத்த வருசம், இதே மாசம், இதே நாள், இதே மாதிரி 2013-ஐ மீண்டும் பார்க்கலாம்..... ஓக்கேவா..........!
தண்ணி அடிச்சாலும் தெளிவா நியூ இயர் கொண்டாடனும்.... என்ன புரியுதா.....? ஆங்ங்ங்............ அப்ப வரட்டா...............
நன்றி: கூகிள் இமேஜஸ்....!