மணியண்ணன் கடல் படத்த வழக்கம் போல படுசீக்ரட்டா (?) எடுத்திட்டிருக்காராம். அதுக்காக சும்மா விட்ர முடியுங்களா.....? உக்காந்து தோண்டி துருவி கதைய கிண்டி எடுத்துட்டோம்ல.......
கதைப்படி ஹீரோ ஒரு மீனவர். பார்ட் டைம் ரவுடியாவும் இருக்கார். ஓப்பனிங் சீன்... விடிஞ்சும் விடியாமயும் இருட்டா இருக்கு, கடல்ல ஹீரோ கட்டுமரத்துல அன்னிக்கு கெடச்ச மீனை வெச்சிட்டு வந்துட்டு இருக்கார். அங்கங்க சக மீனவர்களும் வந்துட்டு இருக்காங்க. ஹீரோவுடைய நண்பனும் அருகில் தன் கட்டுமரத்தில வந்துட்டு இருக்கான். அப்போ அவனை ரெண்டு பேர் தாக்குறாங்க. ஹீரோ உதவிக்கு போறார். ஹீரோ ஏற்கனவே ரவுடின்றதால (?) எல்லாரையும் அடிச்சி துவம்சம் பண்றார். கடல் தண்ணிலயே ஃபைட்டு தண்ணி சிதற சிதற நடக்குது. ஒருவழியா நண்பனை காப்பாத்தி கரைக்கு கூட்டிட்டு வர்ரார். கரைல மெயின் வில்லன்...... நேரா நின்னுட்டு இருக்கான். ஹீரோவ பாத்து கேட்கிறான்.
வில்லன்: வந்துடு.. என்கூட வந்துடு
ஹீரோ: ஏன்?
வில்லன்: உனக்கு தெரியல..
ஹீரோ: அதான் ஏன்?
வில்லன்: எனக்கும் தெரியல....
ஹீரோ: வரலேன்னா....?
வில்லன்: அடிப்பேன்....
ஹீரோ: யாரை.....?
வில்லன்: அவனை...
ஹீரோ பதில் சொல்லாமல் திரும்பி போறார். ஒருநாள் கடற்கரையில் சண்டை நடக்கிறது. ஹீரோ யாரையோ போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் குடைபிடித்தபடி அந்த வழியாக வந்தவர் சண்டையை பார்த்து திகைத்துப் போய் நிற்கிறார். சண்டையின் நடுவே ஹீரோ, ஹீரோயினை பார்க்கிறார். கண்ணும் கண்ணும் நோக்குகின்றன. நோக்கு வர்மம் வேலை செய்கிறது. சண்டை நிற்கிறது. ஹீரோ திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கும் போதே ஹீரோயின் தலையை குனிந்தபடி சென்று விடுகிறார். ஹீரோவும் பின்னாடியே சென்று ஹீரோயின் அந்த ஊரில் உள்ள ஸ்கூலில் வந்திருக்கும் புது டீச்சர் என்பதை கண்டுபிடிக்கிறார்.
மாலை நேரம், இருட்டியும் இருட்டாமலும் இருக்கிறது. டீச்சரை பார்த்ததில் இருந்து அவர் ஞாபகமாவே இருக்கும் ஹீரோ எப்படியாவது டீச்சரை பார்த்துவிட வேண்டும் என்று இருட்டு சந்தில் இருக்கும் டீச்சர் வீட்டுப் பக்கமாக செல்கிறார். வீட்டுக்குள் இருந்து குடைபிடித்தபடி டீச்சர் வெளியே வருகிறார். வெளியில் நின்று கொண்டிருக்கும் ஹீரோவைப் பார்த்த டீச்சர் ஹீரோவை அருகில் அழைக்கிறார்.
டீச்சர்: எனக்கு வேணும்...
ஹீரோ: என்ன வேணும்..?
டீச்சர்: மீன்...
ஹீரோ: என்ன மீன்?
டீச்சர்: வஞ்சிரம்...
ஹீரோ: எடுத்துக்கோ... எல்லாம் உனக்குத்தான் எடுத்துக்கோ.....
டீச்சர்: எதை?
ஹீரோ: நான் புடிக்கிற மீன் எல்லாமே உனக்குத்தான்.... அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது?
டீச்சர் கண்கலங்கி நிற்க பாடல் ஆரம்பமாகிறது. பாடல் முடிந்ததும் பார்த்தால் கடற்கரை மணலில் மறுபடியும் சண்டை. உக்கிரமாக நடக்கிறது. ஹீரோ சுற்றிச் சுற்றி எல்லோரையும் போட்டு அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் குடைபிடித்தபடி கடற்கரை மணலில் அலைகள் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருக்கிறார். அலைகள் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறன. சண்டையை பார்க்கிறார். மௌனமாக நிற்கிறார். க்ளோசப் ஷாட். டீச்சர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. உதடுகள் விம்முகின்றன. ஹீரோ இதைக் கவனித்து விட்டு மறுபடியும் ஃப்ரீஸ் ஆகி நிற்கிறார். டீச்சர் அருகில் வருகிறார்.
டீச்சர்: நிறுத்தனும்... எல்லாத்தையும் நிறுத்தனும்....
ஹீரோ: மொதல்ல அவங்கள நிறுத்த சொல்லுங்க....
டீச்சர்: நீங்கதான் மொதல்ல நிறுத்தனும்....
ஹீரோ: ஏன்?
டீச்சர்: ஏன்னா நீங்கதான் அடிக்கிறீங்க, அவங்க அடிவாங்குறாங்க....
ஹீரோ: முடியாது....
டீச்சர்: ஏன்?
ஹீரோ: எனக்கு என்னோட பங்கு வேணும்...
டீச்சர்: எதுல...?
ஹீரோ: அவங்க பண்ண சுண்டக்கஞ்சில....
டீச்சர்: அது வேணாம்....
ஹீரோ: ஏன்?
டீச்சர்: நான் காய்ச்சி தாரேன்.....
இதைக் கேட்டு ஹீரோ சிரிக்கிறார். ஹீரோயினும் சிரிக்கிறார். மாறி மாறி சிரிக்கிறார்கள். மறுபடியும் பாடல் தொடங்குகிறது........ பாடல் முடிந்த உடன் பார்த்தால் ஹீரோவும் ஹீரோயினும் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். பின்னால் ஏற்கனவே அடிவாங்கி ஓடியவன் கத்தியோடு ஓடி வந்து ஹீரோவை குத்தி விடுகிறான். ஹீரோ மயங்கிச் சரிகிறார். டீச்சரின் கதறலோடு ஷாட் முடிகிறது.
ஹீரோயின் வீடு. டீச்சருக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்து அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டீச்சர் உள்ளே அறையில் சோகம் அப்பிய முகத்துடன் மௌனமாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது திடீரென சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் வருகிறது. டீச்சர் அதிர்ந்து போய் நிற்கிறார்...... டீச்சரின் குடும்பத்தினரும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.
ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தார்களா இல்லையா என்று வெண் திரையில் கண்டு மகிழ்க......
நன்றி: கூகிள் இமேஜஸ்