Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, February 28, 2011

எனது (முதல்) காதலர் தினம்...









காதலர் தினத்தன்று என்ன நடந்ததுன்னு என் அனுபவத்தை பதிவு செய்யனும்னு மக்கள்லாம் கொஞ்ச நாளா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுறாங்க, குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர், இதைப் பத்தி நான் எழுதியே ஆகனும்னு மிரட்டலே விடுத்திருக்கார். நான் வேற ரொம்ப பயந்த சுபாவம்கறதாலே வேற வழியே இல்லாம  அதை எழுத வேண்டியதாப் போச்சு. எந்த வருட காதலர் தினத்தைப் பத்தி எழுதனும்னு யாருமே சொல்லாததால, சில வருடங்களுக்கு முன்னாடி நடந்ததைப் பத்தி எழுதுறேன்.

மக்களே, இது உண்மையா நடந்த சம்பவம். சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன், பெயர்களைத் தவிர அனைத்துமே உண்மைங்க...!



அப்போ காதல் பண்ண ஆரம்பிச்சு கொஞ்சநாள் தான் ஆகியிருந்தது. நீண்ட முன்னோட்டத்திற்குப் பின் சந்தியாவும் நானும் காதலிக்க ஆரம்பித்து இருந்தோம். காதலர் தினத்திற்கு எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரி அரைநாள்தான். காலேஜ் முடிந்ததும் இருவரும் வெளிய செல்வதாகப் ப்ளான். காலேஜ் முடிந்ததும் எல்லோரும் ஒன்றாக வந்து பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தோம். செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லாத காலம், அதனால் எல்லாம் டைரக்ட் மெசேஜிங்தான்.


வீக்கென்டிற்கு மாணவர்கள் பலரும் சொந்த ஊருக்குச் செல்வார்கள், அதனால் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடையில் நாங்கள் மீட் பண்ணிக்கவே முடியவில்லை. சந்தியா, அவள் வகுப்புத் தோழிகளை ஊருக்கு அனுப்பி விட்டு, மத்தியப் பேருந்து நிலையத்தில் அவள் வழக்கமாக எனக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருப்பதாகக் கூறி இருந்தாள். அதனால் நான் தனியாகத்தான் மத்தியப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். என் நெருங்கிய நண்பர்கள் என்னை வழியனுப்ப (?) பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தார்கள். ஒரே கேலியும் கிண்டலுமாய் பஸ் வரும் வரை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒருவழியாக ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அங்குதான் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும். தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் தான் எப்போதும் சந்தியா காத்திருப்பாள். இன்று ஒரு நாளாவது நான் காத்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டு அங்கே சென்றேன், சிறிது தூரம் போவதற்குள் திடீரென மாலதி என் முன்னால் வந்து நின்றாள். இவள் எங்கிருந்து வந்தாள்....? அவளும் ஊருக்குச் செல்லத் தயாராக பேகுடன் வந்திருந்தாள். என் முன்னாள் வந்து நின்று வள வளவென உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள். எனக்கு எங்கே சந்தியா வந்துவிடப் போகிறாள் என பயம் தொற்றிக் கொண்டது. கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. 


மாலதி பேசி முடிப்பதாக இல்லை, நேரமாகிக் கொண்டிருந்தது. நான் திரும்பித் திரும்பி சந்தியா வந்துவிட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை சந்தியா இன்று வேறு பக்கத்தில் எங்கும் நின்று கொண்டிருக்கிறாளோ? இன்னும் காணோமே? 10 நிமிடத்திற்கு மேல் ஆகி விட்டிருந்தது.  மாலதி இன்னும் பேசிக்கொண்டு இருந்தாள். நானும் கிளம்பனும், போகனும், அவசரம் என பல்வேறுவிதமாக சொல்லியும், அஞ்சு நிமிசம் அஞ்சே நிமிசம் என்று நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். மறுபடியும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால், சந்தியா அங்கே நின்று கொண்டு இருந்தாள். எனக்கு மூச்சே நின்றுவிட்டது. எங்களைப் பார்க்கிறாளா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை. ஏதேதோ சொல்லி பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாளோ என்ற தோன்றியது. அப்போழுது அடுத்த சோதனையாக, என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.   எனக்கு மயக்கமே வந்துவிட்டது. சந்தியா சற்றுத் தொலைவில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும்,  அருகில் நானும் மாலதியும் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்த ப்ரியா வேக வேகமாக எங்கள் அருகே வந்து கடும் கோபத்துடன் சே... இப்படியா பண்ணுவீங்க... என்று சொல்லிவிட்டு விடு விடுவென போய்விட்டாள். இதைப் பார்த்து மாலதியும் நானும் கெளம்பறேன் என்று மெல்ல நழுவினாள். நான் அவசரம் அவசரமாக சந்தியா நின்றிருந்த இடத்தை நோக்கினால், அங்கே அவளைக் காணவில்லை. திடுக்கென்று இருந்தது. என்னாச்சு, என்னைக் கடுப்பேற்ற எங்காவது மறைந்து நிற்கிறாளா என்று எல்லாப் பகுதியிலும் தேடினேன். எங்கும் காணவில்லை. ஒருவேளை ப்ரியாவும் அவளும் பேசிக்கொண்டிருக்கிறார்களோ என்று ப்ரியா சென்ற திசையில் சென்றேன்.

ப்ரியா அவள் ஊருக்கு செல்லும் பஸ்சில் அமர்ந்திருந்தாள். நான் உள்ளே ஏறிச் சென்று, சந்தியா வந்தாளா என்று கேட்டதுதான் தாமதம். பொறிந்து தள்ளிவிட்டாள். எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் சந்தியா எங்கே சென்றாள் என்று தெரியாது என்று கூறிவிட்டாள். வேறுவழியில்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி, ஒருவேளை சந்தியா வந்திருக்கக் கூடும் என்று பழைய இடத்திற்கே வந்தேன். எப்படியும் வருவாள் என்று அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் கிட்டத்தட்ட 1 மணிநேரம் காத்திருந்தேன். மதியம் சாப்பிடவும் இல்லை. மிகுந்த சோர்வாக இருந்தது. உலகமே கைநழுவிப் போய்க் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். பின், ஒருவழியாக அங்கிருந்து கிளம்பிப் போனேன். பிரண்ட்ஸ் எல்லோரும்,  பன்னாடை ஒருத்தன் ரூமில் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அங்கே போய்ச் சேர்ந்தேன்..... 

இப்படியாக என் முதல் காதலர் தினம் முடிவுக்கு வந்தது.


உண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்
!

Saturday, January 29, 2011

இதயச்சாரலில்...


வலைப்பூக்களில் எழுதி பப்ளிஷ் செய்வது இலவசமாகவும், சுலபமாகவும் இருப்பதினாலேயே என்னைப் போன்றவர்கள் ஜாலியா எதையாவது எழுதி, கலாய்த்து விளையாடிக் கொண்டு இருக்கிறோம். நான் சீரியசாக ஒன்றும் எழுதவில்லையென்றாலும், தொடர்ந்து நல்ல தரமான பதிவுகளைப் படிக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன். 



அப்பிடித்தான் ஒருநாள் இதயச்சாரல் என்ற வலைப்பூவைப் படிக்க நேர்ந்தது. முழுக்க முழுக்க கவிதை மழை. சுத்தமான தமிழ் வார்த்தைப் பிரயோகம். படிப்பதற்கே ஒரு சுகானுபவம்.

தொடர்ந்து தரம் குறையாமல் எழுதுவது ரொம்ப சிரமம். வெகு சிலராலேயே அதை செய்ய முடிகிறது. அந்த வெகு சிலரில் நானும் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் அது முடியுமா என்று தெரியவில்லை. இதயச்சாரல் எழுதிவரும் தமிழ்க்காதலன் அனாயசமாக அதைச் செய்துவருகிறார். தரமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய இன்பத்தமிழ் இதயச்சாரல், பெருமழையாக மாறி உங்கள் இதயங்களைத் தமிழ்த்துளிகளால் நனைக்க ஏதோ எண்ணாலான ஒரு சிறிய முயற்சியாக அவரது வலைப்பூவை எனது பதிவில் அறிமுகம் செய்கிறேன். தமிழைக் காதலிப்பவர்களுக்கு அவரது தளம் அடுத்த தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மனச்சிதறல் என்ற கவிதையிலிருந்து,

கண்ணாடியில் தெரியும் உன் கண்களில்...

கசியும் என் காதல்...!

உன் எழில் கூட்டும்...!!

காற்றில் அலையும் கற்றைக் குழலை

ஒற்றைத் தலை அசைப்பில்...

சரி செய்யும் அழகில்..

சரிந்துப் போகிறேன்...!

செல்லமே...!!


இதயத்திற்கு அருகில் என்ற கவிதையில் இருந்து,

சோர்ந்துப் போகும் விழிகளில்

சொக்கி நிற்கும் உறக்கம்.

ஆயினும்,...

காத்திருக்கிறேன்.

கைப்பேசிக்கருகில்....

காதலுடன்...!

நீளும் இரவில்.....

 
இப்படி சுவராசியமான ரசனையோடு கவிதைகள் நிறைந்திருக்கின்றன, இதயச்சாரல் வலைப்பூவில். காதல் மட்டுமல்லாது பல்வேறு வகைகளில் கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. விரும்பும் நண்பர்கள் நேரம் கிடைக்கும் போது சென்று வாசிக்கலாம். இதைப் பார்த்துவிட்டு யாராவது ஒருவர் சென்று வாசித்தாலும் சந்தோசப்படுவேன்.

நன்றி (கலியுகம்) தினேஷ், நல்ல ஒரு ப்ளாக்கை அறிமுகம் செய்து வைத்ததற்கு.



முக்கிய அறிவிப்பு
ட்விட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் #tnfisherman என்பதை ட்வீட்களில் பேஸ்ட் செய்துகொள்ளவும்.

பெட்டிசன் ஆன்லைனில உங்களை கையொப்பங்களைப் பதிவு செய்யுங்கள் http://www.petitiononline.com/TNfisher/
 
!

Sunday, November 14, 2010

அறியாப் பூனைகளின் தெரியா விளையாட்டு!

ஒரு ஊர்ல ஒரு மன்னரு ரொம்ப இம்சையா ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு.  பல கேடிப்பசங்களும் மன்னருக்கு கொடுக்க வேண்டியதக் கொடுத்து நிம்மதியா தொழில் பண்ணிட்டு இருந்தாங்க. திடீருனு நாட்டுல எலித்தொல்ல ரொம்ப அதிகமாயிடுச்சு. அதுவும் ஒரே ஒரு எலியால!  கேடிப்பசங்களால வழக்கம் போல தொழில் பண்ண முடியாம  சிரமப்பட்டாங்க. உடனே மன்னருகிட்ட போயி முறையிட்டாங்க. மன்னரும் அமைச்சர கூப்புட்டு எலித்தொல்லைய உடனே ஒழிங்கன்னு உத்தரவு போட்டாரு. அப்போ அமைச்சருகிட்ட நாலு பூனைகள் வேல பாத்துக்கிட்டு இருந்துச்சு.  இந்த நாலு பூனைகள வெச்சித்தான் ஓட்டுமொத்த நாட்டு நிர்வாகத்தையும் (?) பண்ணிக்கிட்டு இருந்தாரு அமைச்சரு.

மன்னரோட உத்தரவக் கேட்டுப்புட்டு, ஒரே யோசனையா ரெண்டு நாளு சுத்துனவருக்கு திடிர்னு அந்த ஐடியா(?) வந்துச்சு.  நாமதான்  நாலு பூனைகள  தண்டமா வெச்சிருக்கோமே, அதுகள இதுக்கு பயன்படுத்திட்டா என்னன்னு!  உடனே மன்னர்கிட்டேயும் போயி சொன்னாரு. மன்னர் கேட்டுபுட்டு ரொம்ப ஆச்சர்யப் பட்டாரு. அந்தப் பூனைகள பார்க்கனும் உடனே ஏற்பாடு பண்ணுங்கன்னு  சொல்லிப்புட்டாரு!

இதக் கேட்டதும் அமைச்சருக்கு ரொம்ப பயமா போச்சு, பூனைங்க மன்னரு முன்னாடி ஏதாவது பண்ணி மானத்த வாங்கி பதவிக்கு வேட்டு வெச்சிட்டா என்ன பண்றதுன்னு! அதுனால பூனைகள தயார் பண்ண முடிவு பண்ணி எல்லாத்தையும் கூப்புட்டாரு, அதுங்க உடனே வராம அங்கே இங்கே துள்ளிக்கிட்டு இருந்துச்சுங்க. அமைச்சருக்கு பொசுக்குன்னு கோவம் வந்து சாட்டையத் தூக்குனாரு. உடனே எல்லாப் பூனையும் வரிசையா பம்மிக்கிட்டு வந்து உக்காந்துச்சு!



ஒரு எலி ரொம்ப நாளா தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கு, அத உங்கள்ல யாராவது போயி புடிச்சிக்கிட்டு வரனும் முடியுமான்னு பூனைகளப் பாத்து அமைச்சரு கேட்டாரு. பூனைங்களுக்கு ரொம்ப நாளு கழிச்சி நல்ல இரை கெடைக்கப் போவுதுன்னு ஒரெ சந்தோசம், நாந்தான் போவேன், நாந்தான் போவேன்னு ஒரே சண்டை, கூக்குரல்...! சைலன்ஸ்........... என்று அமைச்சர் கத்தியதும் பூனைகள் தத்தம் இடங்களில்  போய் பவ்யமாக அமர்ந்தன.  சரி உங்கள் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பேன்,  யாரு திறமைய நிரூபிக்கிறீங்களோ, அவங்களுக்குத்தான் எலி என்றார் அமைச்சர்.

அது கேட்டு பூனைகளுக்கு சிறிது தயக்கம். இருந்தாலும் சரி நாங்கள் தயார் என்றன. முதல்   பூனையை அழைத்து உன் திறமையக் காட்டு என்றார் அமைச்சர். உடனே அது சென்று பெரிய பேப்பர் ஒன்றை எடுத்து வந்து விதவிதமான கெட்ட வார்த்தைகளை எழுதியது. எலியை  நாராசாரமாகத்  திட்டி எழுதியது. அதைப்  பார்த்து  மற்ற  பூனைகளும்  சந்தோசமாகக் ஆரவாரமிட்டன.

அடுத்து என்றார் அமைச்சர். அடுத்த பூனை வந்தது, கிச்சனுக்குப் போயி 12 வடைகள எடுத்துக்கிட்டு வந்து சரியா நாலு நாலா, மூணு பங்கு வெச்சுச்சு, அமைச்சர் உதட்டைப் பிதுக்கினார். மூன்றாவது பூனை முன்னே வந்தது, அது மதுக்கூடத்துக்குப் போயி ஒரு புல் பாட்டில் ரம்மை தூக்கிட்டு வந்து அதை சரியாக ஒரு ஒரு லார்ஜாகப் பிரித்துக் கிளாசில் ஊற்றியது ஒரு துளி கூட சிந்தாமல்! அமைச்சர் முகத்தில் திருப்தியில்லை. அடுத்து என்று தலையசைத்தார். நான்காவது பூனை வந்தது, சுற்றும் முற்றும் பார்த்தது, ஓடிப்போயி, வடையை எடுத்துத் தின்றது, வடையைத்தின்று கொண்டே ஒவ்வொரு லார்ஜாக உள்ளே இறக்கியது, எல்லாம் முடிந்ததும், முதல் பூனை எழுதி வைத்த பேப்பர் மேல் கக்கா போனது. பின்பு அப்பிடியே ஒரமாகப் போயி படுத்துக்கிட்டு காலை ஆட்டியபடி அமைச்சரைப் பார்த்து கண்ணடித்தது.

அமைச்சருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!  இன்னும் சிறிது நேரத்தில் பூனைகளை பார்க்க மன்னர் வந்துவிடுவார். என்ன நடக்கப் போகிறதோ என்று அமைச்சர் தீவிர யோசனையில் ஆழ்ந்தார். பூனைகள் நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், வழக்கம்போல் துள்ளி ஓடியாடின. ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டு விளையாடின. இப்போ அமைச்சர் என்னதான் செய்யறது? யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!

பி.கு.: இது ஒரு பின்நவீனத்துவ கதை, அதுனால என்ன எழவுன்னு எனக்கே புரியல, யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லித் தொலைங்க சார்....!

!

Sunday, June 27, 2010

சமைப்பதற்குப் பாதுகாப்பான (நல்ல) எண்ணை எது?

சமீப காலமாகச் சந்தையில் பல புதிய சமையல் எண்ணைகள் வர ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான எண்ணைகளில் இதயதிற்குப் பாதுகாப்பானது என்ற வாசகம் இடம்பெறத் தவறுவதில்லை. இதயதிற்கு பாதுகாப்பான சமையல் எண்ணை என்று சூரியகாந்தி எண்ணைக்கு ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைக்குப் பெரும்பாலான நடுத்தர வீடுகளில் சூரியகாந்தி எண்ணைதான் உபயோகப்படுத்துகிறார்கள். இந்தச் சமையல் எண்ணைகளின் உண்மை நிலை என்று பார்ப்போமா?

கொழுப்புகளில் இரண்டு வகை உண்டு, திடக்கொழுப்பு மற்றும் திரவக் கொழுப்பு. திடக்கொழுப்பு என்பது கெட்டியாக இருக்கும் உருக்கினால்தான் திரவமாகும். உதாரணம், வெண்ணை, மிருகக் கொழுப்புகள். திரவக்கொழுப்பு சதாரணமாக திரவமாக்வே இருக்கும், உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.

பொதுவாகப் பார்க்கும்போது திரவக்கொழுப்பே நமக்குப் பாதுகாப்பானது. திரவக்கொழுப்புகள் புஃபா (PUFA என்று விளம்பரங்களில் பார்திருப்பீர்கள்) எனப்படும் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. விளம்பரங்களில் மேலோட்டமாக PUFA உள்ளது என்று சொல்லிவிடுகிறார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கவனிக்கவேண்டிய முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. PUFA விலும் இரண்டும் வகை உள்ளது, w-6 (ஒமேகா-6) மற்றும் w-3 (ஒமேகா-3). இதில் ஒமேகா-3 தான் உடலுக்கு நல்லது. ஆனால் தாவர எண்ணைகளில் இரண்டும் கலந்தேதான் இருக்கின்றன. எனவே சமையல் எண்ணைகளை மதிப்பிடுவதற்கு இரண்டு கொழுப்பு அமிலங்களும் (ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3) என்ன விகிதத்தில் உள்ளன என்பதைக் கணக்கிடுகிறார்கள். ஒமேகா-3 அதிகமாக இருந்தால் அது நல்லது. ஏனென்றால் ஒமேகா-6 உடலில் புகுந்த பின்பு சும்மா இருப்பதில்லை, அது சுயமாகக் கெட்ட விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லாமல், ஒமேகா-3 வின் நல்ல விளைவுகளையும் எதிர்க்கிறது. (நல்லதுக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க!)

இனி சமையல் எண்ணைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூரியகாந்தி எண்ணை:
திரவக்கொழுப்பு அதிகம் உள்ளது, அதனால் இதைப் பயன்படுத்துவதால் கெட்ட கொலஸ்ட்ரால் உயராது. எனவே இதய நோயாளிகளும் பயன்படுத்தலாம். ஆனால் இதில் ஒமேகா-3 அறவே இல்லை. வெறும் ஒமேகா-6 மட்டுமே உள்ளது. நீண்டகால உபயோகத்திற்கு இது பொறுத்தமானதா என்பது சந்தேகதிற்குரியது. ஒமேகா- 6 வின் கெட்ட விளைவுகளில் சில சூரியகாந்தி எண்ணையை நீண்ட நாள் பயன்படுத்தியவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

சோள எண்ணை (கார்ன் ஆயில்):
இது ஓரளவு சூரியகாந்தி எண்ணையைப் போன்றதே. இந்த எண்ணையில் ஒமேகா-3 உள்ளது, ஆனால் வெறும் 2% தான். மீதம் முழுவதும் ஒமேகா-6 தான். அதனால், ஒமேகா-6 வினால் ஏற்படும் கெட்ட விளைவுகளை இது தடுக்காது. எனவே சூரியகாந்தி எண்ணையைப் போன்றே நீண்டநாள் பயன்பாட்டிற்கு இதுவும் பொருத்தமானதல்ல.

கடலை எண்ணை:
முன்பு வெகு பிரபலமாக இருந்த எண்ணை. இது திரவ கொழுப்புகள் அதிகம் இருந்தாலும், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகவே ஆராய்ச்சிப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணையின் கொழுப்பு அமிலங்களைப் பார்க்கும் போது பாதுகாப்பானதாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் பரிசோதனை முடிவுகள் குழப்பும்படியாக உள்ளன. அதனால் எப்போவாவது பயன்படுத்துவதில் தப்பில்லை.

அரிசி உமி எண்ணை (ரைஸ் பிரான் ஆயில்):
இந்த எண்ணை ஜப்பான், சீனாவில் அதிகம் பயன்படுத்தபடுகின்றது. இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. அருமையான எண்ணை, அதிக நலன்களைக் கொண்டது. இதில் உள்ள ஒரைசெனோல் (Oryzanol) இதய நோயைத்தடுக்கும் சக்தி வாய்ந்தது (நீங்கள் விளம்பரங்களில் பார்ப்பது உண்மையே). மேலும் இந்த எண்ணை உணவுப் பொருட்களால் உறிஞ்சப்படுவது குறைவு. 5% ஒமேகா-3 உள்ளது.

நல்லெண்ணை:
இது நிஜமாகவே நல்ல எண்ணைதான். இந்த எண்ணையில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக் கூடிய தன்மை உள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் 1 சதவீததிற்கும் குறைவாகவே ஒமேகா-3 உள்ளது.


முடிவாக என்ன எண்ணைதான் பயன்படுத்துவது என்கிறீர்களா? மேலே படிங்க. பொதுவாக இந்தியச் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணைகளில் ஒமேகா- 3 மிகக்குறைவாகவே உள்ளது. ஆலிவ் எண்ணை மட்டுமே தேவையான அளவு ஒமேகா- 3 கொண்டுள்ளது, மிகச் சிறந்த சமையல் எண்ணையும் இதுவே. ஆனால் பொறிப்பதற்குப் பயன்படுத்த முடியாது (பொறிக்கும்போது வரும் கடும் வெப்பம் இந்த எண்ணையை சேதம் அடையச் செய்கிறது, அப்போது வெளியாகும் பொருள்கள் ஆரோக்கியமானவை அல்ல. இப்போது பொறிப்பதற்கேற்ற ஆலிவ் எண்ணையும் வருகின்றது). விலை அதிகம், கிடைப்பதும் கடினம் (இந்தியாவில்) போன்ற காரணங்களால் தினசரி பயன்பாட்டிற்கு இந்த எண்ணையை பயன்படுத்துவது சாத்தியமல்ல.

அடுத்த சிறந்த எண்ணை அரிசி உமி எண்ணையே (ரைஸ் பிரான் ஆயில்). இந்த எண்ணையே இந்தியப் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கிறது. சுமார் 450 டிகிரி வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சூடாக்கலாம் (சமையல் எண்ணைகளிலேயே இதற்குத்தான் அதிகம் வெப்பம் தாங்கும் சக்தி). அதனால் இந்த எண்ணையை தினந்தோறும் பயன்படுத்தலாம். ஆனாலும் இடைஇடையே சூரியகாந்தி எண்ணை, சோள எண்ணை, நல்லெண்ணை என்று மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதே நல்லது.
ஒருவேளை நீங்கள் வேறு எந்த எண்ணையைப் பயன்படுத்தினாலும், ஒரேவகை எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்.

தேங்காய் எண்ணை, பாம் ஆயில், வனஸ்பதி போன்றவை தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் (பெரும்பாலான பிஸ்கட்டுகளில் வனஸ்பதி உள்ளது, எனவே பிஸ்கட்டுகள் வாங்கும்போது கூட கவனம் தேவை, hydrogenated vegetable oils, shortened vegetable oils, margarine என்று பல பெயர்களில் போட்டிருப்பார்கள் எல்லாம் வனஸ்பதி வகையைச் சேர்ந்தவையே). வெளிநாடுகளில் இருப்பவர்கள் எண்ணை வாங்கும் போது பொறிப்பதற்கேற்றதா என்று பார்த்து வாங்கவேண்டும் (பாட்டிலின் மேலேயே குறிப்பிட்டு இருப்பார்கள்).


பி.கு.: செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்!

(சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான் இந்தப்பதிவு, மற்றபடி சமையலுக்கு நமக்கும் ரொம்ப....ரொம்ப..தூ...ரமுங்கோ!)