டேய்.... ஒரு அரசு அதிகாரிகிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாது....?
காலை 6.15. அது ஜனவரி மாதமாகையால் கொஞ்சம் சிலுசிலுவென்றிருந்தது. தெருவில் ஒன்றிரண்டு பேர் சென்று கொண்டிருந்தார்கள். பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அலுவலகம் செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போதும் சீக்கிரமே கிளம்பிவிடுவார், ஏனென்றால் அப்போதுதான் பக்கத்து டீக்கடையில் பழைய ஊசிப்போன வடை போண்டாக்களை தூக்கி வீசுவார்கள், அதை யாருக்கும் தெரியாமல் நைசாக எடுத்துக் கொள்வது ரமேசின் வழக்கம். வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் தான் பஸ் ஸ்டாப். தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சி கடை இன்னும் திறந்திருக்கவில்லை. அண்ணாச்சி 8 மணிக்குத்தான் கடை திறப்பார். அண்ணாச்சி கடைமுன்பாகவும் ஏதாவது கிடந்தால் யாரும் பார்க்காதவாறு எடுத்துக் கொள்வார்.
ஆனால் இன்று கடைமுன்பாக யாரோ ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். புதிதாக இருந்தார். ஆள் பார்ப்பதற்கு ஷங்கர் படங்களில் வரும் அரசு உயர் அதிகாரி போல் இருந்தார். தலையில் ஒரு உல்லன் தொப்பி. அலுவலகத்திற்குச் செல்ல தயாராக இருப்பது போல் நின்று கொண்டிருந்தார். புதிதாக இந்த ஏரியாவிற்கு குடிவந்திருக்கலாம். கம்பெனி வண்டிக்காகவோ நண்பருக்காகவோ காத்துக் கொண்டிருக்கிறார் போல. இப்படி எண்ணிக் கொண்டவாரே பஸ்ஸ்டாப்பை அடைந்தார்.
மறுநாள் காலையும் அவர் அதே இடத்தில் நின்றிருந்தார். இப்போது கொஞ்சம் பழகிய(?) முகமாகி விட்டதால் மெலிதாக புன்னகைக்க முயற்சித்தார் சிரிப்பு போலீஸ், ஆனால் அவர் பதில் ரியாக்சன் கொடுக்காமல் ரொம்ப சீரியசான பாவனையுடன் இருந்ததால், முகத்தில் வந்த சினேகமான புன்னகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் அசடு வழிந்தவாறு தன்பாட்டுக்குச் செல்லத் தொடங்கினார். என்ன மனிதர் இவர், சும்மா பதிலுக்கு ஒரு சின்ன புன்னகை செய்தால் என்ன? காசா, பணமா? இப்படியும் இருக்கிறார்களே என்று திட்டிக் கொண்டே அலுவலகம் சென்றடைந்தார். ஒரு புன்னகை வீணாகிவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு!
அலுவலகத்தில் ரமேசால் அன்று வழக்கம்போல் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அந்த புதுமனிதரைப் பற்றி சிந்தனை அவ்வப்போது வந்து போனது. யாராக இருக்கும், பார்க்க வேறு பெரிய அதிகாரி போல் இருக்கிறார், உண்மையிலேயே உயர் அதிகாரியாக இருப்பாரோ? என்று பலவாறாக மண்டையைக் குடைந்து கொண்டு யோசித்துக் கொண்டே தாமதமாக சாப்பிட்டதில் கேண்டீனில் வடை காலியானதுதான் மிச்சம். அதையும் நினைத்து இன்னும் அதிகமாக புலம்பியவாறே அன்றைய பொழுதைக் கழித்தார்.
மறுநாள் காலை எழுந்ததில் இருந்தே மறுபடியும் அவர் பற்றிய எண்ணங்கள் சிரிப்பு போலீஸ் மனதில் ஓடத் தொடங்கியது. போன் பேச முடியவில்லை, எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியவில்லை, ஆசையாக இட்டிலியும் சட்டினியும் சாப்பிட முடியவில்லை... என்று எங்கு சென்றாலும் அதே நெனப்பு... ரொம்பவே வெறுத்துப் போனார் போலீஸ். கொஞ்சம் அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை இன்று எப்படியும் அவரிடம் பேசி இதை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவு செய்தார்.
அரசு உயர் அதிகாரி மாதிரி இருக்கிறார், நம் ஏரியாவில் வேறு வசிக்கிறார், பழகி வைத்துக் கொண்டால் பின்னர் எப்போதாவது ஓசி சாப்பாடு கிடைக்கக்கூடும் என்று அவரது உள்மனது பக்காவாக கணக்குப் போட்டது. இன்று நம் பேச்சுத் திறமை முழுதையும் காட்டி அவரை நம்வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டியதுதான் என்று எண்ணிக் கொண்டு 10 நிமிடம் முன்னதாகவே கிளம்பினார்.
அதே அண்ணாச்சி கடை முன்பாக அந்த அதிகாரி நின்று கொண்டிருந்தார். ரமேஷ் சட்டென்று ஒரு ரெடிமேட் புன்னகையை வரவழைத்துக் கொண்டு அவர் அருகில் சென்று சார் வணக்கம் என்றார். பதிலுக்கு அவர் கையை நீட்டினார். கைகுலுக்கலாம் என்று ரமேசும் கையை நீட்டினார், பார்த்தால் அவர் கையில் கத்தி இருந்தது.. ரமேஷ் சற்று குழம்பியவராக அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தார்... உடனே அதிகாரி டேய்.. பணத்த எட்ரா..... என்றார்.