Friday, October 28, 2016

பைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்

பைரவா... யார்ரா அவன்...?


அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உப்புமா என்று எழுதி வைத்தால் அதன் கீழே பைரவா என்று யாரோ கிறுக்கி விட்டு ஓடிவிடுகிறார்கள். ஒவ்வொரு ஹோட்டலிலும் இது நடக்கிறது ஹோட்டல் ஓனர்கள் கொதிப்படைந்து அதை கண்டுபிடிக்க அடியாள்களை வைக்கின்றனர். ஆனாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் ஊரே கூடி நின்று அதை பற்றி பேசுகின்றனர். அப்போது ஹோட்டல்கள் கூட்ட தலைவன் அது யார் என்று யாராவது தானா வந்து ஒத்துக்கொள்ளாவிட்டால் ஊரில் உள்ள எல்லா ஹோட்டல்களையும் அடைத்துவிடுவோம் என்று மிரட்டுகின்றான். ஊர் தலைவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். அப்போது அண்ணா வந்து அது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறார். அது ஏன் அப்படி எழுதினார் என்று எல்லாரும் கேக்கும் போது அவரது நண்பனின் தம்பி ரவா உப்புமா கேட்டு கெஞ்சியதாகவும், அது கிடைக்காமல் அதற்கு பதிலாக ரவா தோசை வாங்கி கொடுத்ததாகவும், அதனால் அவன் அந்த ரவா உப்புமா ஏக்கத்திலேயே செத்துப்போய் விட்டதாகவும் அதிலிருந்து எல்லா ஹோட்டல்களிலும் ரவா உப்புமா மட்டுமே செய்ய வேண்டும் என்றே அப்படி எழுதி போட்டதாக கண்ணீர்மல்க சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் நெகிழ்கின்றனர். இனி ஹோட்டல்களில் ரவா உப்புமா மட்டுமே சமைப்போம் என்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் சபதம் எடுக்கின்றனர். அன்றில் இருந்து அண்ணாவை பைரவா என்று அழைக்க ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் அமைதியாக ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு லாரி ஓனர், அண்ணாவின் ஃப்ளாஷ்பேக்கில் மிகவும் நெகிழ்ந்து போய் அண்ணாவை தனது லாரி கிளீனராக நியமனம் செய்து தனது லாரியை கண்ணீர் மல்க ஒப்படைக்கிறார் . அண்ணாவும் சந்தோசமாக வரலாம் வா வரலாம் வா என்றூ பாடிக்கொண்டே வேலை செய்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் ஆட்டோக்காரன் பாடலை ஆட்டோ ஸ்டேண்டுகளில் ஆயுத பூஜையன்று போடுவதைப் போல இனி இந்தியா முழுதும் லாரி ஸ்டேண்டுகளில் இந்த பாட்டுதான் ஒலிக்கப்போகிறது.

க்ளீனராக இருக்கும் அண்ணா படிப்படியாக முன்னேறி லாரி ஓட்டுனராக பதவியேற்கிறார். லாரி ஸ்டேண்டு முழுதும் அண்ணாவை தலைவராக கொண்டாடுகிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருக்கும் போது ஒருநாள் சென்னைக்கு சரக்கு கொண்டு செல்லவேண்டிய வேலை வருகிறது. கொண்டு செல்லும் வழியில் ஒரு ரவுடி கேங் சரக்கைக் கைப்பற்ற முயல்கிறது, ஆக்ரோசமாக சண்டை போட்டு சரக்கை மீட்டுக் கொண்டு சென்னை விரைகிறார். சென்னை சென்றதும்தான் தெரிகிறது லாரியில் இருக்கும் சரக்கு ஒரு சர்வதேச போதை கும்பல் கைக்கு செல்ல இருக்கிறது என்று. அண்ணா சரக்கை அவர்களிடம் ஒப்படைக்காமல் லாரியோடு தலைமறைவாகிறார். போதை கும்பல் தலைவனிடம் தெரிஞ்ச எதிரியவிட தெரியாத எதிரிக்குத்தான் அல்லு அதிகம் இருக்கனும் என்று சவால் விடுகிறார்.



இதற்கிடையில் எதிர் கேங் அண்ணாவிடம் சரக்கு இருப்பதை அறிந்து பேரம் பேச வருகிறது. அண்ணா அவர்களை சண்டை போட்டு விரட்டி விடுகிறார். கோபமடையும் அந்த கும்பல் அண்ணாவை போலீசிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறது. அதை அறிந்த அண்ணா  கன்னத்தில் மறு வைத்து, தாடையில் தாடி வைத்து, தலையில் விக் வைத்து மாறுவேடத்தில் தண்ணீர் லாரி ஓட்ட ஆரம்பிக்கிறார். வழியில் கீர்த்தி சுரேஷுக்கு லிஃப்ட் கொடுத்து, அண்ணா லாரி ஓட்டும் அழகை பார்த்து கீர்த்திக்கு காதல் வந்து என்று தனியே ஒரு ரொமாண்ட்டிக் ட்ராக்கும் அழகாக வந்து போகிறது. போலீசையும், ரவுடி கேங்கையும், போதை கும்பலையும் சமாளித்து இறுதியில் கீர்த்தியை எப்படி கைப்பிடிக்கிறார் என்பதையில் வெள்ளித்திரையில் காண்க......




Friday, October 14, 2016

ரெமோ என்னும் மாய யதார்த்தம்.....




ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பார்ப்போம்... 

இதுவர வந்த நிச்சயமான பொண்ண காதலிச்சு மனச மாத்துற படங்கள்ல அந்த மாப்பிள்ளைய கெட்டவனாக காட்டி, அது நியாயம்னு அழகா எடுத்து சொல்லி இருப்பாங்க... அதே மாதிரி ரெமோவுலயும் அந்த மாப்ள ஏற்கனவே ஓரு பொண்ண கழட்டிவிட்டுட்டு வர்ரதாதான் சொல்றாங்க... அதுவும் இல்லாம அவனை பாத்தா நமக்கே புடிக்கல... ஒரு புடவை விஷயத்துலயே அந்த பொண்ணு மனச நோகடிச்சிருக்கானே... அவனை கட்டிக்கிட்டா அந்த பொண்ணு நிம்மதியா வாழுமா...  க்ளைமேக்ஸ்ல கூட கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறான் அந்த மாப்ள. ஹீரோயினை காதலிச்சது மூலமா அவளுக்கு நல்லதுதான் பண்ணி இருக்கார் ஹீரோ. சோ படத்தை பத்தின நெகடிவ் விமர்சனங்கள் அர்த்தமற்றவை. 

படத்துல ஏகப்பட்ட லாஜீக் மீறல்கள் இருக்குன்னு எல்லாருமே சொன்னாங்க. படத்துல நடிக்க சான்ஸ் கேக்கிறதுக்காக பொம்பள வேஷம் போடுறாரு சிகா. மொதோநாளு ஒரு வெள்ளக்கார தொர வந்து பொம்பள மேக்கப் போட்டுவிட்டாப்புல..... ஆனா அடுத்த நாளும் பொம்பள வேஷத்துல ஹீரோயின பாக்க போறாரு.... அப்போ யாருய்யா போட்டுவிட்டது.... சினிமா ஷூட்டிங்ல டெய்லி மேக்கப் போட காசு குடுத்து ஆள் வெச்சிருக்கானுங்களே அவனுங்க எல்லாம் கேனையனுங்களா...... அதுவும் தனக்குத்தானே மேக்கப் எப்படி அந்தளவுக்கு போட முடியும்? இதாவது பரவால்ல..  பர்த்டே விஷ் பண்ணும் போதும், க்ளைமேக்ஸ் ஃபைட் சீன்லயும் 10 செகண்டுல பொம்பள வேஷத்துல இருந்து ஆம்பளையா மாறுறாரு... அது எப்படி சாத்தியம்..... சும்மா வெறும் தண்ணில மூஞ்சிய கழுவவே 30 செகண்டாவது ஆகுமே? 

அப்புறம் நர்ஸ்னா டாக்டர் பின்னாடி போறதுதான் வேலையா... ஊசி போடாம எத்தன நாள்யா சமாளிக்க முடியும்..... டெம்பரேச்சர் பாக்கனும், பல்ஸ் பாக்கனும், பிரெசர் செக் பண்ணனும், கட்டுப்போடனும்..... இதுல நர்சிங் சூபர்வைசருக்கே சந்தேகம் வருது.... கூடவே இருக்க டாக்டர் ஹீரோயினுக்கு சந்தேகம் வராதா...? அந்த நர்சிங் சூபர்வைசர் ரெமோ நர்ஸ்தானானு செக் வேற பண்ணுது, அதான் அப்பவே சொதப்புறான்ல, அதுக்கப்புறம் அத என்னன்னு பாக்கவே மாட்டாங்களா.... படத்துல லாஜிக் மீறல் இருக்கலாம்.... ஆனா படமே லாஜீக் மீறலா இருந்தா எப்படி...? 

இது காமெடிப்படம்னு பரவலா எல்லாரும் பேசிக்கிட்டாங்க... ஆனா படத்துல ஒரு காமெடி சீன் கூட இல்ல..... தியேட்டர்ல கூட யாரும் சிரிக்கிற சத்தம் கேக்கல..... பட் க்ளைமேக்ஸ்ல காவியா நோவியான்னு ஒரு சாங் வருது.... அது படத்துல பாத்தீங்கன்னா சிரிப்புக்கு 100% கேரண்டி. காமெடி சீன் இல்லாத குறைய இந்த பாட்டுதுதான் போக்குது, தேங்ஸ் அனிருத். 


அம்மாவ வர்ர சரண்யா..... பாவம்... சிகா பண்ற ப்ராடு வேலைய பாத்து திட்டுறவங்க, கீர்த்தி சுரேஷ் அழக(?) பாத்ததும் அப்படியே சேஞ்ச் ஆகிடுறாங்களாம்... என்ன பிராடுத்தனம் பண்ணாலும் பரவால்ல, இவளைத்தான் நீ கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க....  தியேட்டர்ல படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறதுக்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்....  சதீஷ் காமெடியனா வர்ராராம்... பட் படத்துல காமெடி சீனே இல்லாம எதுக்கு காமெடியனை போட்டிருக்காங்கன்னு புரியல... அவராவது பரவால்ல. மொட்டை ராஜேந்திரனும் கூடவே வர்ரார். அது அவருக்கே ஏன்னு புரிஞ்சிருக்காது. சோ அதை கேள்வி கேட்பது நியாயம் இல்லை. 

கல்யாணம் நிச்சயமான பொண்ண மனசை கெடுத்து காதலிக்கிறத புல்டைம் ஜாபா வெச்சிருக்கார் சிகான்னு கலாச்சார காவலர்கள் பலரும் இணையத்துல குரல் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி வெச்சிருக்கேன்... படத்துல ஹீரோயின் நிச்சயார்த்த மோதிரத்த கழட்டுற சீன்ல நச்னு வீணை மியூசிக் போட்டு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாத்தையும் தனியாளா தூக்கி நிறுத்தி இருக்கார் நம்ம அனிருத்...  நம் கலாச்சார காவலர்கள் என்னதான் படத்தை திட்டினாலும் அட்லீஸ்ட் அனிருத்தையாவது பாராட்டி இருக்கனும்... 

ஹீரோயினை பத்தி எதுவுமே சொல்லலியான்னு கேக்குறீங்க அதானே..... படத்துல வர்ர யதார்த்தமான ஒரே கேரக்டர் அதுதான். ஹீரோயின் கேரக்டர் டாக்டராவே இருந்தாலும் தமிழ் சினிமா இலக்கணத்தை மீறாம லூசுத்தனமாதான் காட்டி இருக்காங்க. அதுக்காக அவங்க கேரக்டரை டைரக்டர் பாத்து பாத்து செதுக்கி இருக்கார் போல. டாக்டருக்கு படிச்சிட்டு இப்படி கேனையா இருக்கேன்னு படத்துல ஒரு இடத்துல கூட நமக்கு தோனவே இல்ல... அதுவே இந்த கேரக்டரின் வெற்றி.... 

படத்துல இத்தனை லாஜிக்மீறல்கள், கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும் கிளைமேக்ஸ்ல ஹீரோ, வில்லன்கூட நேருக்கு நேர் கையால சண்டை போட்டு ஜெயிப்பதை பார்ப்பது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு..... கமர்சியல் சினிமாவுல கூட இப்படி வெகு யதார்த்தமான சீன் வைப்பது தமிழ்சினிமாவில் மட்டுமே சாத்தியம்....... 

மொத்தத்தில் ரெமோ ஒரு மாய யதார்த்த கலைப்படைப்பு...!



(படம் பார்த்துட்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ்களா போட்டத ஒருங்கிணைத்து பட்டி டிங்கரிங் பண்ணி விமர்சனமா மாத்தி இருக்கேன்.... ஹி....ஹி..... )

Friday, March 20, 2015

ஆப்பரேசன் சாணி....






நாங்க காலேஜ் படிக்கிறப்போ பக்கதுலயே ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தோம். அடுத்த தெருவுல ஒரு பிகர் இருந்துச்சு. அது ரொம்ப சுமார்தான்றதால ஆரம்பத்துல அத யாரும் கண்டுக்கல.  பிகர்களுக்கு கடும் வறட்சி(?) நிலவுன ஒரு காலகட்டத்துல இந்த பிகர் மேலயும் எங்க பார்வை விழுந்துச்சு, அந்த புள்ள சிட்டில பிரபலமா இருக்கும் ஒரு லேடீஸ் காலேஜ்ல படிச்சிட்டு இருந்துச்சு, சரி பஸ் ஸ்டாப்ல போய் பாத்துக்கலாம்னு காலைல போய் வெயிட் பண்ணா ஆள் வரவே இல்லை. சரி இன்னிக்கு பார்ட்டி லீவு போலன்னு பாத்தா காலேஜ் போயிட்டு ஈவ்னிங் பஸ் ஸ்டாப்ல இருந்து வந்துட்டு இருக்கு.

அடுத்த நாள்  பாத்தா மறுபடியும் அதே கதைதான் காலைல பஸ் ஸ்டாப்புக்கு ஆள் வரல, ஆனா ஈவ்னிங் காலேஜ்ல இருந்து ரிட்டன் வருது. என்னடா நடக்குதுன்னு நம்ம உளவுத்துறைய ரெடி பண்ணி அவங்க வீட்டுப்பக்கம் ஆள் போட்டோம். அடுத்த நாள் பாத்தா அவங்கப்பா டிவிஎஸ்ல கூட்டிட்டு போறாருன்னு தகவல் வந்துச்சு. அலார்ட்டா இருக்காங்களாம். ஆனா அந்த புள்ளயோட காலேஜ் ஏரியா மக்கள், அது காலைலயும் பஸ்லதான் வருதுன்னு தலைல அடிச்சு சத்தியம் பண்ணானுங்க. எல்லாருக்கும் ஒரே குழப்பம்.....


விவகாரம் ரொம்ப சிக்கலாகிட்டே போகுதுன்னு உடனடியா கண்டுபிடிக்க வேண்டிய  உளவுத்துறை பொறுப்ப என்கிட்ட ஒப்படைச்சானுங்க(!). முதல் வேலையா காலைல அவங்க வீட்டுல இருந்து அந்த டிவிஎஸ் எந்தப்பக்கமா போகுதுன்னு பார்த்தோம், பஸ்ஸ்டாப் பக்கமாத்தான் போச்சு, ஒண்ணும் பிடிபடலை,  அதுக்கிடைல அந்த புள்ள வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாடில ரெண்டு சீனியர் பசங்க புதுசா வாடகைக்கு வந்தாங்க. அவனுங்களுக்கு தண்ணியெல்லாம் வாங்கி கொடுத்து ஃப்ரெண்டு புடிச்சு, அவங்க வீட்டுக்கு ஒரு சண்டே போனோம்,  

அவனுங்களுக்கும் மேட்டர் வெளங்கிடுச்சி, இவனுங்க ஏதோ பிகர் மேட்டரா வந்திருக்கானுங்கன்னு, ஆனா பாவம் பசங்க ரொம்ப அம்மாஞ்சி போல, பக்கத்து வீட்டுல ஒரு பிகர் இருக்கறதே அவனுங்களுக்கு தெரியல. யாருடா அது எந்த பிகர் எங்களுக்கு தெரியாமன்னு கெஞ்ச ஆரம்பிச்சிட்டானுங்க. கரெக்டா அந்த டைம்பாத்து மொட்டமாடில வடகம் காயப்போட நம்ம பிகர் மேல வந்து நிக்குது. நாங்க உடனே பாஸ் பாஸ் இந்த பிகருதான், மாடில வந்து நிக்குது பாருங்கன்னு கூப்பிட்டோம். அவனுங்க ஆடி அசைஞ்சு வந்து பார்க்கிறதுக்குள்ள, இந்தப் புள்ள வடகத்த வெச்சிட்டு கீழ போயிடுச்சு போல, அவங்கம்மா வந்து வடகத்த எடுத்து வெச்சிட்டு இருந்துச்சு. இவனுங்க அத பாத்துட்டு, டேய் டேய் உங்க டேஸ்ட்டு ரொம்ப கேவலமா இருக்குடான்னு தலைல அடிச்சிக்கிட்டானுங்க. அதுவுமில்லாம காலேஜ் பூரா வேற மேட்டரை சொல்லிட்டானுங்க. அது காது மூக்கு வெச்சி பக்காவா டெவலப் ஆகி வேற ஆங்கிள்ல போக ஆரம்பிச்சிடுச்சு. டோட்டல் டேமேஜ். ஒரு அட்டுபிகருக்காக இவ்ளோ அடியான்னு இந்த ஐடியாவையும் கைவிட்டாச்சு.

அப்புறம் என்ன, வேற வழி இல்லாம மறுபடியும் பஸ்ஸ்டாப்புக்கே வந்தோம். அங்க இன்னும் அதே கதைதான் ஓடிட்டு இருந்துச்சு. கடைசியா ஒரு நல்ல நாள்ல எல்லாரும் நிதானமா (?) உக்காந்து பேசி எங்க ஏரியாவுல இருந்த எல்லா பஸ் ஸ்டாப்லயும் ஒவ்வொண்ணா செக் பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணி ஒவ்வொரு நாள் ஒரு ஸ்டாப்னு போனோம். கடைசில ஒருநாள் வசமா மாட்டிக்கிடுச்சி பிகரு.... என்னன்னு பாத்தா...  பொண்ண கூட்டிட்டு போயி ரெண்டு பஸ்ஸ்டாப் தள்ளி இருக்கும் பஸ்ஸ்டாப்ல போய் பஸ் ஏத்திவிடுறாரு அவங்கப்பா. ஏரியா பசங்க கண்ணுல காட்டாம பஸ் ஏத்துறாங்களாம்... பட் அடுத்த நாள் அதே ஸ்டாப்ல ஆஜராகுனா, மறுபடியும் பிகரைக் காணல.... நாங்க விடுவமா... ங்கொய்யால யாருகிட்ட.....  எங்க ஏரியாவுல இருந்த எல்லா பஸ்ஸ்டாப்லயும் ஆள் போட்டோம். பட் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்பா போயி தேடும்போது அதவிட நல்ல நல்ல பிகருகளா கண்ணுல பட்டதுனால, இந்த பிகரை கைவிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையா போச்சு... நம்ம உளவுத்துறை அவ்ளோ கஷ்டப்பட்டும் கடைசில எந்த பிரயோஜனமும் இல்லாம போயிடுச்சு.....

இதுல சாணி எங்க வந்துச்சின்றீங்களா.... அந்த பிகரு வீட்டுல ரெண்டு மாடு வெச்சிருந்தாங்க, அதுனால அதுக்கு நாங்க வெச்சிருந்த கோட் நேம் சாணி...!

ஆப்பரேசன் சாணி சக்சஸ்.... பட்.....

Saturday, February 28, 2015

காக்கிச்சட்டை...!




நண்பனிடம் இருந்து திடீரென்று ஒரு கால், சீக்கிரம் வா, காக்கிச்சட்டை பார்க்கனும் என்று அவசர அழைப்பு. அந்த குறிப்பிட்ட பிரபலமான மாலுக்கு வரச்சொல்லி இருக்கிறான்... காக்கிச்சட்டை படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எகிற வைக்கும் எதிர்பார்ப்பிற்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா...? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திக்கேயன் தான் என்று பதிவர்கள் விமர்சனம் எழுதும் அளவிற்கு கலக்கி இருக்கிறார்கள் என்று பேச்சு வேறு.... எப்படியாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்று என்னையும் முடிவு செய்ய வைத்திருந்தது, அந்த நேரத்தில்தான் நண்பனிடம் இருந்து அழைப்பு.

வேகமாக தயாராகி, சில பல நிமிடங்களில் அந்த மாலை சென்றடைந்தேன். இந்த காலத்தில் தான் எவ்வளவு வசதிகள்... மால்களுக்குள் நுழைந்தாலே போதும், படம் பார்த்து, பொருள் வாங்கி, உண்டு களித்து வெளியேறலாம், அத்தனையும் குளு குளு ஏசியில்....... கலர்புல் லைஃப்...... கொடுத்து வெச்ச கல்லூரி பசங்க. எந்தக்கடையிலும் எந்தப்பொருளும் வாங்க வேண்டியதில்லை, சும்மா ஏசியில் உலாவிக்கொண்டிருந்தாலே போதும் பொழுது போய்விடும்.


மால்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்களை தயார் செய்து அனுப்புவார்கள் போல. அதற்காகவே பையன்கள் கூட்டம் கூடுகிறது. எல்லா மால்களும் சொல்லி வைத்தது போல பெண்கள் கூட்டம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஒருவேளை இது மால்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூட இருக்கலாம். பலநூறு கோடி முதலீடுகளில் மால்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இது எல்லாம் வியாபார யுக்திகள். எதுவும் சொல்வதற்கில்லை.

அங்கே நண்பன் காத்துக் கொண்டிருந்தான். வழக்கம் போல, ஏண்டா லேட்டு என்று கடிந்தபடி, வா போகலாம் என்று அழைத்துச் சென்றான். சில தளங்கள் மேலே ஏறினோம், பின்பு கீழே சென்றோம். அங்குதான் அந்த மல்டிப்ளக்ஸ் இருந்தது. அதில் ஒரு தியேட்டரில்தான் காக்கிச்சட்டை படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்தது. இன்னும் கூட்டம் வரத்தொடங்கி இருக்கவில்லை.


கும்பல் கும்பலாக ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர். சில ஜோடிகளும் இருந்தார்கள். கல்லூரி வகுப்புகளை கட் அடித்துவிட்டு வந்திருக்கலாம். டீன் ஏஜ் சிறுவர் கூட்டம் ஒன்றும் நின்று கொண்டிருந்தது. பள்ளி நேரத்தில் இவர்கள் எப்படி இங்கே என்று சிந்தித்தபடி, வேகமாக நடந்து கொண்டிருந்த நண்பனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தேன்.

நண்பன் தியேட்டர் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தான். படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருப்பதால் சும்மா சுற்றலாம் என்று போகிறான் போல என்று நானும் பின்னே தொடர்ந்தேன். கீழே சென்றோம், அந்த பகுதியில்தான் பிரபல சூப்பர்மார்க்கெட் ஒன்று இருக்கிறது. அங்கே செல்ல வேண்டு என எனக்கு நீண்ட நாளா ஆசை. சும்மா சுத்துவதற்கு அந்த மார்க்கெட்டுக்குள் போய்ப் பார்க்கலாம் என்று எண்ணி நண்பனை, அழைத்தேன், அதற்குள் அவன் என்னையும் உள்ளே வரச்சொல்லி விட்டு கடைக்குள் நுழைந்துவிட்டான். நேராக துணிகள் இருந்த பகுதிக்குச் சென்றான். போய் சிலவினாடிகள் தேடிவிட்டு, மச்சி இது எப்படி இருக்கு, இத பாக்கத்தான் உன்னை வரச்சொன்னேன் என்று தூக்கிக் காட்டினான். அவன் கையில் இருந்தது, ஒரு காக்கிச்சட்டை!


Sunday, September 21, 2014

Friday, September 19, 2014

கத்தி: கதை(?) விமர்சனம்...!




கதைப்படி ஹீரோ நம்ம தற்காலிக சூப்பர்ஸ்டார்தான்.... எங்க பாத்தாலும் பவர்கட்டா இருக்கே, எல்லார் வாழ்க்கைலயும் வெளிச்சத்த ஏத்தலாம்னு ஒரு உயர்ந்த குறிக்கோளோட  ஊர்ல சின்னதா ஒரு கடை போட்டு பெட்ரோமேக்ஸ் லைட் வாடகைக்கு விட்டுட்டு இருக்கார். ஊர் திருவிழாவுக்கு புல் லைட் சப்பளையும் அவருதான். அத வெச்சே செமையா இண்ட்ரோ சாங் எடுத்திருக்காங்க. குரூப் டான்சர்ஸ் எல்லாரும் ஆளுக்கொரு பெட்ரோமேக்ஸ் லைட்ட தூக்கி பிடிச்சிட்டே ஆடுறது கண்ணைப் பறிக்குது. இப்படியே போய்ட்டு இருக்கும் போது ஒரு நாள் ஒரு பொம்பள கைல கூடையோட வந்து பெட்ரோமேக்ஸ் லைட்டு வேணும்னு கேக்குது... அந்த இடத்துல நம்ம டாகுடரோட ரியாக்சனை பார்க்கனுமே.... கண்ணு சிவக்குது, கை துடிக்குது, நாடி நரம்பெல்லாம் புடைக்குது, பின்னணி மியூசிக் அதிருது........ சான்சே இல்ல, அப்படி ஒரு பந்தாவான சீன்....! கூடை வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் கிடையாதுன்னு சொல்லிடுறார். அந்தம்மாவும் திட்டிக்கிட்டே போய்டுது.

ஆனா இத வில்லனோட அல்லக்கை ஒருத்தன் ஒளிஞ்சி நின்னு பாத்துடுறான். அவன் நேரா போய் வில்லன்கிட்ட சொல்லிடுறான். வில்லன் உடனே அல்லக்கைகள் எல்லார் கைலயும் ஆளுக்கொரு கூடைய கொடுத்து போய் பெட்ரோமேக்ஸ் லைட்டு வாங்கிட்டு வாங்கடான்னு அனுப்பி வைக்கிறான். டாகுடருக்கு கோவம் கோவமா வருது, என்னடா இது இன்னிக்குன்னு பாத்து பெட்ரோமேக்ஸ் லைட் வாங்க வர்ரவங்கள்லாம் கைல கூடையோடவே வர்ராங்கன்னு. அப்போ கூடவே சுத்திட்டு இருக்க காமெடியன் இது வில்லனோட வேலைன்னு சொல்லி புரியவைக்கிறான். அவ்வளவுதான் டாகுடருக்கு கோபம் கொப்பளிக்குது.

கூடைய வெச்சி ஆளனுப்புறவனை கூடைக்குள்ளயே வெச்சி அடிப்பேண்டான்னு பஞ்ச் டயலாக் பேசியபடி வில்லன்களை அடிச்சு துவம்சம் பண்றார். அப்போதான் அவருக்கு தெரியுது கூடைகள்லாம் இந்தியாவுல்ல செஞ்சது இல்லேன்னு. வில்லன்கள் பின்னாடியே ஃபாலோ பண்ணி, வெளிநாட்டுல இருந்து கூடைகளை கடத்திட்டு வர்ராங்கன்னு கண்டுபுடிக்கிறார். இருந்தாலும் அவருக்கு சந்தேகம், உள்நாட்டுலயே கூடை கிடைக்கும் போது வெளிநாட்டுல இருந்து ஏன் கடத்திட்டு வரனும்னு. இதை கண்டுபிடிச்சே ஆகனும்னு வில்லன்களை புடிச்சி ரகசியமா ட்ரைனேஜ் பைப் லைன்களுக்குள் அடைச்சு வைக்கிறார். அங்கேயே பெட்ரோமேக்ஸ் லைட்டோட இரவு பகலா காவலுக்கும் இருக்கார். அப்போ வில்லன் ஆள் ஒருத்தன் டாகுடரோட டெடிக்கேசனை பாத்துட்டு கண்கலங்குறான். ஏண்ணே கூடை மேல உங்களுக்கு இவ்ளோ கோவம்னு கேக்குறான்,

அதைப் பாத்து டாகுடரும் கண்கலங்குறார். உடனே ப்ளாஷ்பேக் தொடங்குது. டவுசர் போட்டபடி சமந்தா ஆடிக்கொண்டிருக்கிறார். கூடவே டாகுடரும், டூயட் சாங்காம். டாகுடர் இதிலும் ஹீரோயின் டவுசரில் கையை வைக்கும் மேனரிசத்தை தொடர்வது அல்டிமேட். ரசிகர்களுக்கு நல்ல தீனி. லவ் சீன்ஸ் இப்படியே நல்லா போய்ட்டு இருக்கு, அப்போ ஒருநாள் ஹீரோயினோட செல்ல நாயைக் காணலைன்னு பெட்ரோமேக்ஸ் லைட்ட எடுத்துட்டு ஊர் பூரா தேடுறார் டாகுடர். எங்கே தேடியும் கிடைக்கல. ஹீரோயின் ஒரே அழுகையா அழுகுது. இந்த காட்சில தியேட்டரே ஒப்பாரி வைக்க போவது உறுதி. அழகான பொண்ணுங்க அழுதா யார்தான் தாங்குவா? காலைல பாத்தா அந்த நாய் ஒரு கூடைக்குள்ள செத்துக் கெடக்குது, டாகுடர் பதறி போறார். அந்த கூடையை நாய் உள்ளெ இருக்குன்னு தெரியாம கவுத்தி போட்டதே அவர்தான். குற்ற உணர்ச்சில துடிக்கிறார். அப்பவே சபதம் செய்றார் இனி கூடை வெச்சிருக்கவங்களுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் கொடுக்கவே மாட்டேன்னு.... டக்னு ஃப்ளாஷ்பேக் முடியுது, எல்லா வில்லனுங்க கண்ணுலயும் கண்ணீர்...  டாகுடரும் கண்ண தொடச்சிக்கிட்டே பெட்ரோமேக்ஸ் லைட்ட தொடைக்கிறார்.

வில்லன்களைத் தேடி வெளிநாட்டு கூடை வியாபாரி (தொழிலதிபர்) வர்ரார். இதை கேள்விப்படும் டாகுடர் தலைய லைட்டா புளிச் பண்ணி மீசைய பெருசா வெச்சிக்கிட்டு இன்னொரு கெட்டப் போட்டு ரகசியமா அந்த ட்ரைனேஜ் பைப்ப விட்டு வெளில வர்ரார்.  வில்லன் கூட பயங்கர சண்டை நடக்கிறது. தொழிலதிபர் அடிதாங்க முடியாமல் உண்மைகளை சொல்லிவிடுகிறார். வெளிநாட்டுக் கூடைகளை கடத்திக் கொண்டுவந்து உள்நாட்டுக் கூடை தொழிலை நசுக்கி இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும் என்று சீன உளவுத்துறை சதித் திட்டம் தீட்டி இயங்குவதை கண்டுபிடிக்கிறார். பின்னணியில் இருக்கும் சீன சதிகாரர்களை சுற்றி வளைத்து சதித்திட்டத்தை முறியடித்து இந்திய பொருளாதாரத்தை டாகுடர் எப்படி காக்கிறார் என்பதே மீதிக்கதை...!  எந்த கெட்டப்பில் போய் இதை சாதிக்கிறார் என்பதை படு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களாம். அதனால் நாமும் அதை சொல்லப் போவதில்லை.

டாகுடருக்கு இந்த கதைக்களம் மிகவும் புதுசு. இருந்தாலும் ஜமாய்த்திருக்கிறார். இதுவரை உள்ளூர் ரவுடிகள், வெளியூர் தீவிரவாதிகள்னு பட்டைய கெளப்பிட்டு இருந்த டாகுடரை இந்த முறை வெளிநாட்டுல இருந்து வர்ர டான்களை இரண்டு கெட்டப்புகளில் அடித்து துவைக்கும் கடினமான பணியை ஒப்படைத்திருக்கிறார் முருகதாஸ். ஒரே மாதிரி கதையில் நடிக்கிறார் என்று இனி யாருமே சொல்லமுடியாத அளவுக்கு அவரை இரண்டு கெட்டப்பில் நடிக்க வைத்து சாதித்திருக்கிறார் முருகதாஸ். பெரிய முன்னேற்றம்தான். அது போல டிரைனேஜ் பைப்புக்குள் துணிச்சலாக நடித்திருக்கும் டாகுடரின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். பாதிக்கும் மேல் படம் அதற்குள்தான் வருகிறது என்பதால் மிகப்பிரம்மாண்டமாக ட்ரைனேஜ் செட் போட்டிருக்கிறார்கள். படம் வந்ததும் உங்கள் ஊரில் நல்ல தியேட்டரில் சென்று டிக்கட் எடுத்து பாருங்கள்!

Thursday, September 18, 2014

ஐ (ai): திரை விமர்சனம்...!


தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவில் கூட இப்படி ஒரு கதையுடன் இதுவரை எந்தப்படமும் வந்திருக்காது. அப்படிப்பட்ட கதை, திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது ஐ படம். கதைக்காகவே பல்வேறு தேசிய சர்வதேச விருதுகளை அள்ளிக் குவிக்க இருக்கிறது இப்படம்.

விக்ரம் கிராமத்தில் மாட்டுவண்டி வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஹீரோயின் எமி ஜாக்சன் சுற்றுலாவிற்காக வந்தவர் மாட்டுவண்டியில் சவாரி செய்கிறார். அவரைப்பார்த்த விக்ரம் காதல்வயப்பட்டு அங்கேயே காதலைச் சொல்கிறார். கோபமடைந்த எமி அர்னால்டின் போட்டோவை காட்டி இந்த மாதிரி ஒருத்தனைத்தான் லவ் பண்ணுவேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். இதைக்கேட்டு ஆவேசமடைகிறார் விக்ரம். அர்னால்டின் போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு பயங்கரமாக எக்சர்சைஸ் செய்கிறார், ஒன்றும் முன்னேற்றமில்லை. ஏதாவது லேகியம் சாப்பிட்டு பார் என்று நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். அவர்களை நம்பி சேலத்துக்கு செல்கிறார் விக்ரம். அங்கே வைத்தியரிடம் கிலோக் கணக்கில் லேகியம் வாங்கி வந்து உடல் முழுதும் பூசிக் கொண்டு படுக்கிறார். காலையில் பார்த்தால் அவரையே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பனிக்கரடி போன்ற தோற்றத்தில் பயங்கரமாக உருவம் மாறி இருக்கிறது.  காட்சியைப் பார்க்கும் நமக்கு இது என்ன சினிமாதானா என்ற பிரமிப்பு எழுகிறது. அவரைப் பார்த்த எல்லாரும் பயந்து ஓடுகிறார்கள். அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார். லேகீயத்தில் தான் ஏதோ கோளாறு என்று வைத்தியரை பார்க்கச் செல்கிறார். வைத்தியரை கட்டி வைத்து அடித்து மிரட்டியதில் அவர் வில்லன்கள் வந்து மிரட்டி லேகீயத்தை மாற்றி கொடுக்க சொன்னதை சொல்லி விடுகிறார்.

விக்ரம் ஆவேசத்துடன் வில்லன்களை தேட தொடங்குகிறார். ஆனால் பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறை வில்லனை நெருங்கும் போதும் அரசியல்வாதிகள் வந்து லஞ்சம் கேட்டுக்  குறுக்கிடுகிறார்கள். லஞ்சம் கேட்பவர்களை எல்லாம் கடித்து வைக்கிறார் விக்ரம். லஞ்சம் ஒழிந்து ஊரே செழிக்கிறது, அனைவரும் பாராட்டுகிறார்கள். இப்படியே போய் கொண்டிருக்கையில் ஒருநாள் டீவில் எமியின் பேட்டியை பார்த்துவிட்டு கண்கலங்குகிறார். பனிக்கரடி உருவத்துடன் விக்ரம் காதல் சோகத்தில் கண்கலங்குவது அருமை. அப்படியே கனவில் பாடல் காட்சி வருவது மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 2000 பனிக்கரடிகள் சூழ விக்ரம் எமியுடன் ஆடிப்பாடுகிறார். அண்டார்டிக்காவில் போய் ஐஸ் மலை செட் போட்டு எடுத்தார்களாம். ஒவ்வொரு ஐஸ்கட்டியும் ஒரு கலரில் மின்னுகிறது, எப்படி பெயிண்ட் அடித்தார்களோ தெரியவில்லை. டிக்கட்டிற்கு கொடுத்த காசு இதற்கே போதும். பாடல் முடிந்ததும் வில்லன்களை தேடிக் கண்டுபிடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகள் வழக்கம் போல பதற வைத்தாலும் ஹீரோவே ஜெயிப்பது வெகு யதார்த்தம்!

சண்டையில் மற்றவர்கள் தப்ப, ஒரே ஒரு வில்லன் மாட்டிக் கொள்கிறான். அவனும் வைத்தியர் கொடுத்தது லேகியம் இல்லை, பனிக்கரடி ஆயி என்று சொல்லிவிட்டு செத்துப்போகிறான். அதிர்ச்சியடைந்த விக்ரம், அதை சரி செய்வது எப்படி என்று குழம்புகிறார். துரத்திச் சென்று அடுத்த வில்லனை பிடிக்கிறார். அவன் இன்னொரு முறை பனிக்கரடி ஆயியை தடவினால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு செத்து விடுகிறான்.  பனிக்கரடி ஆயி வாங்க ஸ்காட்லாந்திற்கு கடலில் நீந்தியபடியே செல்கிறார் விக்ரம். பிரம்மாண்ட கப்பல்களை அவர் நீந்தியபடி கடந்துசெல்வது இதுவரை சினிமாவில் பார்த்தே இராத சீன். எப்படி செட் போட்டார்கள் என்றே தெரியவில்லை. அங்கு சென்று ஆய் வாங்கி தடவி, காலையில் பார்த்தால் முகமெல்லாம் கட்டிவந்த மனிதனாகி இருக்கிறார்.

இதனால் குழம்பிப் போன விக்ரம், வில்லன் தன்னை ஏமாற்றி இருக்கிறான் என்று புரிந்து கொள்கிறார். எமி அந்த ஊரில் இருப்பதை தெரிந்து கொண்டு அதே தோற்றத்தோடு பார்க்கச் செல்கிறார். அங்கே எமியை வில்லன்கள் கட்டிவைத்து இருக்கிறார்கள். சண்டையிட்டு மீட்கிறார் விக்ரம். அவரைப் பார்த்து எமி யார் நீ என்று கேட்கிறார், அதைக் கண்டு மனசுடைந்த விக்ரம், தப்பி ஓடிய வில்லன்களை துரத்தி பிடித்து அடித்து உதைத்து தனக்கு மாற்றுமருந்து என்ன என்று கேட்கிறார். அப்போது அந்த வில்லன் நான் சொன்னால் நீ கேட்கமாட்டியே என்று திரும்ப திரும்ப மறுப்பது பரபரப்பைக் கூட்டுகிறது. கடைசியில் நல்ல அழகான வாலிபனின் ஆயியை எடுத்து பூசிக் கொண்டால் பழைய உருவத்தை பெறலாம் என்று சொல்லிவிட்டு அவனும் செத்துப் போகிறான். அடுத்து விக்ரம் என்ன செய்ய போகிறார் என்று ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறார்கள்.

ஊருக்கு வந்த விக்ரம் வில்லன் சொன்னபடி செய்கிறார். எதுவும் ஆகவில்லை. அதிர்ந்து போய் மறுபடியும் மறுபடியும் செய்து பார்க்கிறார் ஒன்றும் ஆகவில்லை. நமக்கோ பரபரப்பு உச்ச கட்டத்தை அடைகிறது. வில்லன் கும்பலின் தலைவன் அந்த ஊர் சந்தைக்கு வந்திருப்பதை பார்த்து அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டு வந்து அடிக்கிறார் விக்ரம். இவ்வளவு நாளும் விக்ரமுக்கு  ஏற்பட்டது நிஜமான மாற்றம் அல்ல. அது வெறும் மேக்கப்தான் என்றும், இரவு நேரத்தில் தூங்கியவுடன் வந்து வில்லன் ஆட்கள் ரகசியமாக விக்ரமுக்கு அவருக்கே தெரியாமல் மேக்கப் போட்டு விட்டு போய்விடுவார்கள் என்றும் உண்மையை சொல்லி விட்டு செத்துப் போகிறான் அந்த வில்லன் கும்பல் தலைவன். சஸ்பென்ஸ் உடைந்ததும் தியேட்டரே ஆடிப்போகிறது. அடுத்த காட்சியில் விக்ரம் குளியறைக்குள் சென்று மேக்கப்பை களைத்து விட்டு ஸ்மார்ட்டாக கம்பீரமாக வெளியே வருவதை பார்த்து தியேட்டர் முழுதும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்..... எமி வெளியே விக்ரமுக்காக காத்திருக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு வெளியே வந்தும் படபடப்பு குறையவே இல்லை, பலநூறு படங்களை ஒரே நேரத்தில் பார்த்த எஃபக்ட்.......

ஸ்பெசல் எஃபக்ட்ஸ், சஸ்பென்ஸ் கதை, விக்ரம் நடிப்பு, ரஹ்மான் இசை, எமியின் அழகு..... இப்படி எல்லாத்துக்கும் ஒவ்வொரு வாட்டி படம் பார்க்கலாம்......!

ஆய்னு டைட்டில் வெச்சா கண்டுபுடிச்சிடுவாங்கன்னு ஐன்னு டைட்டில் வெச்சிருக்காங்க.... நாங்க சும்மா விடுவமா..... இங்கிலீஸ் டைட்டில் என்னான்னு செக் பண்ணி உண்மைய கண்டுபிடிச்சிட்டோம்ல....... ங்கொய்யால நாங்கள்லாம் யாரு.............!