பதிவர்களுக்காக பழைய டாகுடர் படங்களைத் தீவிர ஆய்வு செய்து டாகுடரின் புதுப்பட விமர்சனங்களை நாம் முன்கூட்டியே தருவது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இப்போது உங்களுக்காக டுப்பாக்கி.
இப்படம் நிறுத்தப்பட்டதாக திடீரென்று தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என்ன நடந்ததென்று டைரக்டருக்கும் டாகுடருக்கும் மட்டுமே தெரியும். இருந்தாலும் ரசிகப் பெருமக்களுக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சியை போக்கவும், ஒருவேளை படம் தடைபட்டாலும் ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தினாலும் இந்த விமர்சனத்தை உடனடியாக வெளியிடுகிறோம். பரபரப்பான இக்கதையை சஸ்பென்சாக திரையரங்கில் சென்று கண்டுகளிக்க விரும்புபவர்கள் உடனே ப்ளாக்கை விட்டு அப்பீட் ஆகிக் கொள்ளவும்.
ஓப்பனிங் சீன். அது ஒரு அழகான கிராமம். திருவிழா நேரம். முக்கியமான நிகழ்வாக பன் சாப்பிடும் போட்டி ஆரம்பிக்க இருக்கிறது. டாகுடரின் தங்கை, நண்பர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நேரம் கடந்து கொண்டிருக்கிறது. பஞ்சாயத்து பெருசுகள் பொறுமையிழக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெருசு என்னய்யா டைம் ஆகிட்டே இருக்கு, இன்னுமா பூமி வர்ராரு? சீக்கிரம் ஆரம்பிங்கய்யா என்று அங்கலாய்க்கிறது. எல்லோரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் நமக்கும் படபடப்பாக இருக்கிறது. வழக்கமான டாகுடர் படங்கள் போல் இல்லாமல் மிகவும் பரபரப்பாகவும் வித்தியாசமாகவும் இந்த ஓப்பனிங் காட்சியை எடுத்ததற்கு இயக்குனருக்குப் பாராட்டுக்கள். ஹேட்ஸ் ஆஃப்...!
அப்போது திடீரென புலி உறுமும் சத்தம் கேட்கிறது. எல்லாரும் பதறிப்போய் திரும்பி பார்க்கிறார்கள். நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. பயங்கரமான உறுமலுடன் ஒண்டிப் புலி கெட்டப்பில் டாகுடர் எங்கிருந்தோ பறந்து வந்து நடுவில் குதித்து, அப்படியே சைடில் திரும்பி கேமராவை பார்த்து புன்னகைக்கிறார். உடனே தடதடவென ஓப்பனிங் சாங் ஆரம்பிக்கிறது. பாடல் முடியும் வரை நம்மால் சீட்டில் உக்காரவே முடியவில்லை. அட, நாமும் நம்மையறியாமல் டான்ஸ் ஆடி விடுகிறோம் என்று சொல்கிறேன்.
பாடல் முடிந்ததும் வழக்கம் போல் இல்லாமல் மிக வித்தியாசமாக டாகுடர் வெட்டி நண்பர்களுடன் சேர்ந்து கிராமத்து குறும்புச் சேட்டைகளில் ஈடுபடுவது, தங்கையுடன் செல்லமாக சண்டை போடுவது என்று காட்சிகள் வைத்தது நல்ல ஐடியா. குறிப்பாக தங்கையுடன் வரும் பாச காட்சிகளில் டாகுடரின் நடிப்பில் புதிய பரிமாணம் மின்னுகிறது. தங்கை சாப்பிடாமல் இருக்கும் போது தானும் சாப்பிடாமல் இருப்பது ஹைலைட்.
தங்கை பாசமுடன் வாங்கிக் கேட்ட ரிப்பனை காசு கொடுத்து வாங்க முடியாமல் திருடிக் கொண்டு வருவதும், மாட்டிக் கொண்டு அடிவாங்குவதும் அற்புதம். அந்தக் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது. அதிலும் அடிவாங்கியதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்த ரிப்பனை தங்கச்சிக்கு கொடுக்க முடியவில்லையே என்று அவர் அழுவது பிரமாதமான நடிப்பு. ஒரு ஆக்சன் ஹீரோ செண்டிமெண்ட் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று பாடமே நடத்தி இருக்கிறார் டாகுடர். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இந்த வருடம் சிறந்த நடிகருக்கான அனைத்து விருதுகளையும் அள்ளப் போவது டாகுடர் தான். பாராட்டுக்கள்.
இப்படி பாசமாக இருந்த தங்கை டவுனில் இருந்து வந்த ஒருவனை விரும்புகிறாள். டாகுடருக்கு இது தெரிய வந்ததும், தங்கச்சிக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்து அவன் ஒரு தீவிரவாதி என்று கண்டுபிடிக்கிறார். குளத்தங்கரை, சந்தை, தென்னந்தோப்பு, பஸ் ஸ்டாப்பு என்று மிக ஆபத்தான இடங்களில் ஒளிந்திருந்து வில்லனைப் பற்றி கண்டுபிடிக்கும் காட்சிகளை மிக மிகத் திரில்லிங்காக படமாக்கி இருக்கிறார்கள். டாகுடரும் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அந்தக் காட்சியை படமாக்கிய விதமும், கேமரா கோணங்களும் தமிழ் சினிமாவுக்கே புதுசு. வழக்கமாக டாகுடர் படங்களில் வருவது போல இல்லாமல் தனியாகவே சென்று வில்லனுக்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதையும், அவர்கள் சென்னையில் ஒரு பெரிய பேங்கை கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டுவதையும் கண்டுபிடிப்பது, அதை போலீசிடம் சொல்வது என்று டாகுடர் கலக்கியெடுத்திருக்கிறார். இப்படம் டாகுடர் ரசிகர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே கொண்டாட்டம் தான்.

போலீஸ் வழக்கம் போல் மெத்தனமாக இருந்து விடுகிறது. அந்த ஸ்டேசனில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி இருக்கிறார். அவர் டாகுடரை தனியாக தாய்லாந்தில் இருக்கும் ஒரு பாரில் சந்திக்கிறார். வில்லனிடம் இருக்கும் அரசியல் பேக்ரவுண்ட் பற்றி சொல்லி போலீசால் வில்லனையும் அவன் கும்பலையும் எதுவும் முடியாது என்பதையும் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். வில்லனை ஒழித்துக் கட்டும் வேலையை டாகுடர் தான் செய்ய முடியும் என்று அந்த போலீஸ் ஆபீசர் கெஞ்சுகிறார். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு டாகுடரும் சம்மதிக்கிறார். போலீஸ் ஆபீசர் தன்னிடம் உள்ள ஸ்பெசல் ராசி டுப்பாக்கியை எடுத்து டாகுடரிடம் கொடுத்து சென்னை சென்று எல்லாவற்றையும் முடித்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கிறார். போலீஸ் வரும் காட்சிகள் அனைத்தும் யதார்த்தமாக தத்ரூபமாக அமைந்திருப்பது படத்திற்கு கை கொடுக்கிறது.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் நடிப்பில் பின்னியெடுத்திருக்கிறார். இவர் இனி தமிழ் சினிமாவில் போலீசாக ஒரு ரவுண்டு வருவார் எனலாம். அந்த பார் சீன் முழுவதும் கழுதை கத்துவது போன்று வரும் பின்னணி இசையில் இசையமைப்பாளரின் உழைப்பு தெரிகிறது. நல்ல ஒலிசேர்ப்பு.
இடைவேளைக்குப் பின்னர் டாகுடர் சென்னைக்குச் சென்று தீவிரவாத கும்பலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்கான காட்சிகளின் நீளத்தை இயக்குனர் சற்றுக் குறைத்திருக்கலாம். சென்னைக்கு வந்து முதல் நாளே டாகுடர் வில்லனை பின்பற்றிச் சென்று உடனே அவர்களின் இடத்தை தெரிந்து கொள்கிறார். ஆனால் பின் ஏன் எதுவும் செய்யாமல் சவால் விட்டுவிட்டு திரும்பி விடுகிறார் என்றுதான் புரியவில்லை. பின்னர் வரும் காட்சிகளில் டாகுடரும் வில்லன் ஆட்களும் சந்தித்துக் கொள்ளும் இடங்கள் எல்லாம் தீப்பொறி பறக்கிறது. ஆனால் சண்டையைத் தொடங்காமல் ஏய்ய் ஏய்ய் என்று சிறிது நேரம் மாறி மாறி கத்திவிட்டு சென்றுவிடுவது பரபரப்பின் உச்சகட்டம். அனைத்துமே பார்ப்பதற்கு திகிலாக மிகவும் அருமையாக வந்திருக்கிறது.
டாகுடர் போலீஸ் ஆபீசர் கொடுத்த அந்த ஸ்பெசல் டுப்பாக்கியை அடிக்கடி எடுத்துப் பார்த்துவிட்டு வைத்துக் கொள்ளும் காட்சி ஏ ஒன் ரகம். நடுவே டெல்லியில் இருந்து வரும் ஒரு உளவுத்துறை அதிகாரி டாகுடரை வந்து பார்த்து சென்னையை தீவிரவாதிகளிடம் இருந்து டாகுடர்தான் காப்பாற்ற வேண்டும் உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார். இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் சொதப்பி இருக்கிறார். பரபரப்பான காட்சியாக வந்திருக்க வேண்டியது, செண்டிமெண்ட் காட்சியாகிவிட்டது, ஆனால் டாகுடரின் நடிப்பில் அதுவும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.
ஹீரோயின் சைடு வில்லனின் தங்கையாக வருகிறார். சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார். டிக்கட்டே எடுக்காமல் பஸ்சில் சென்று வரும் அவரை டாகுடர் எதேச்சையாக டிக்கட் செக்கிங்கில் இருந்து காப்பாற்றுகிறார். டிக்கட் செக்கர்களுக்கும் அவருக்கும் நடக்கும் சேசிங் விறு விறு ரகம். பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் சீட் நுனிக்கே வந்துவிடுகிறார்கள். அங்கிருந்து உடனடியாக ஹீரோவும் ஹீரோயினும் டூயட்டுக்கு சென்றுவிடுவது நம்மை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறது.
அதன்பிறகு டாகுடர் எவ்வாறு வில்லன்களை ஒழித்துக்கட்டி சென்னையை காப்பாற்றுகிறார் என்பதையெல்லாம் வெண் திரையில் காண்க. படம் எப்படியும் 2012-ல் வந்துவிடும். உங்கள் ஊரில் உள்ள ஏதாவது நல்ல தியேட்டரில் சொந்தக்காசில் டிக்கட் எடுத்துப் பார்க்கவும்.
படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று சொல்ல வேண்டும் என்றால் டாகுடரின் தங்கைக்கும் வில்லனுக்குமான காதல் என்னாகிறது என்று கடைசிவரை காட்டாததுதான். கிளைமாக்சிலாவது டாகுடர் வில்லனை பேசி திருத்தி தங்கச்சியுடன் சேர்த்து வைப்பது போல் காட்சி வைத்திருக்கலாம். வில்லன் கும்பல் நவீனரக மெசின் கன்கள் வைத்திருந்தும், அதை கடைசிவரை அவர்கள் பயன்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் டாகுடரிடம் இருக்கும் அந்த டுப்பாக்கியைப் பார்த்து அனைவருமே பயப்படுவது போன்று வைத்திருப்பதற்கு இயக்குனருக்கு ஒரு ஸ்பெசல் பாராட்டு. அதே போல் இடைவேளைக்குப் பிறகு ஹீரோ கழுத்தில் ஒரு கேமராவை தொங்க விட்டபடியே வருவது இயக்குனரின் தனித்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
டுப்பாக்கி என்று பெயர் வைத்திருப்பதாலோ என்னவோ படம் நெடுக ஒரு டுப்பாக்கியை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் கடைசிவரை அது பயன்படுத்தப்படவே இல்லை. இயக்குனர் டுப்பாக்கியை பின்நவீனத்துவ குறியீடாக பயன்படுத்தி அதன் மூலம் ரசிகர்களுக்கு எதையோ உணர்த்த முயன்றிருக்கிறார். நல்ல முயற்சி. இப்படியான முயற்சிகள் தமிழ்சினிமாவில் வருவதை அனைவரும் வரவேற்க வேண்டும்.
பாடல்கள் அனைத்துமே நன்றாக வந்திருக்கின்றன. டாகுடர் ரசிகர்கள் அனைவருக்குமே பிடிக்கும். அந்த ஓப்பனிங் சாங்தான் இன்னும் ஒரு வருடத்திற்கு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப் போகிறது. படம் நெடுக வரும் டாகுடரின் பஞ்ச் வசனங்கள் நெஞ்சில் இடியாய் இறங்குகிறது. வசனகர்த்தா தன் பொறுப்பை உணர்ந்து எழுதி இருக்கிறார். டாகுடர் இந்தப் படத்திலும் வாயில் கோலிக்குண்டை உருட்டியபடியே வருவது உலகத்தரம்.
சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவும், இசையும், டாகுடரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு கலக்குகிறார்கள். படம் பார்க்கும் நாமும் நிஜமாவே கலங்கித்தான் போகிறோம். படம் முடிவதற்குள் மூன்று, நான்கு முறை வயிற்றையும் கலக்கி விடுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இப்படம் வரப்பிரசாதம். சுலபமாக தினமும் ரெண்டு ஷோ பார்த்து விடலாம். ஏற்கனவே நிற்காமல் போய்க் கொண்டிருப்பவர்கள் செலவு பார்க்காமல் நல்ல டயாப்பர் ஒன்றை வாங்கி அணிந்து கொண்டு தியேட்டருக்குச் செல்வது உத்தமம்.
மொத்தத்தில் டுப்பாக்கி தமிழில் வந்திருக்கும் ஒரு உலகப்படம். அனைவரும் தவறாமல் பார்த்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுங்கள்.
நன்றி: கூகிள் இமேஜஸ், சினி சவுத்