நண்பனிடம் இருந்து திடீரென்று ஒரு கால், சீக்கிரம் வா, காக்கிச்சட்டை பார்க்கனும் என்று அவசர அழைப்பு. அந்த குறிப்பிட்ட பிரபலமான மாலுக்கு வரச்சொல்லி இருக்கிறான்... காக்கிச்சட்டை படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எகிற வைக்கும் எதிர்பார்ப்பிற்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா...? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திக்கேயன் தான் என்று பதிவர்கள் விமர்சனம் எழுதும் அளவிற்கு கலக்கி இருக்கிறார்கள் என்று பேச்சு வேறு.... எப்படியாவது படத்தை பார்த்துவிட வேண்டும் என்று என்னையும் முடிவு செய்ய வைத்திருந்தது, அந்த நேரத்தில்தான் நண்பனிடம் இருந்து அழைப்பு.
வேகமாக தயாராகி, சில பல நிமிடங்களில் அந்த மாலை சென்றடைந்தேன். இந்த காலத்தில் தான் எவ்வளவு வசதிகள்... மால்களுக்குள் நுழைந்தாலே போதும், படம் பார்த்து, பொருள் வாங்கி, உண்டு களித்து வெளியேறலாம், அத்தனையும் குளு குளு ஏசியில்....... கலர்புல் லைஃப்...... கொடுத்து வெச்ச கல்லூரி பசங்க. எந்தக்கடையிலும் எந்தப்பொருளும் வாங்க வேண்டியதில்லை, சும்மா ஏசியில் உலாவிக்கொண்டிருந்தாலே போதும் பொழுது போய்விடும்.
மால்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்களை தயார் செய்து அனுப்புவார்கள் போல. அதற்காகவே பையன்கள் கூட்டம் கூடுகிறது. எல்லா மால்களும் சொல்லி வைத்தது போல பெண்கள் கூட்டம் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஒருவேளை இது மால்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூட இருக்கலாம். பலநூறு கோடி முதலீடுகளில் மால்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இது எல்லாம் வியாபார யுக்திகள். எதுவும் சொல்வதற்கில்லை.
அங்கே நண்பன் காத்துக் கொண்டிருந்தான். வழக்கம் போல, ஏண்டா லேட்டு என்று கடிந்தபடி, வா போகலாம் என்று அழைத்துச் சென்றான். சில தளங்கள் மேலே ஏறினோம், பின்பு கீழே சென்றோம். அங்குதான் அந்த மல்டிப்ளக்ஸ் இருந்தது. அதில் ஒரு தியேட்டரில்தான் காக்கிச்சட்டை படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்தது. இன்னும் கூட்டம் வரத்தொடங்கி இருக்கவில்லை.
கும்பல் கும்பலாக ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர். சில ஜோடிகளும் இருந்தார்கள். கல்லூரி வகுப்புகளை கட் அடித்துவிட்டு வந்திருக்கலாம். டீன் ஏஜ் சிறுவர் கூட்டம் ஒன்றும் நின்று கொண்டிருந்தது. பள்ளி நேரத்தில் இவர்கள் எப்படி இங்கே என்று சிந்தித்தபடி, வேகமாக நடந்து கொண்டிருந்த நண்பனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தேன்.
நண்பன் தியேட்டர் பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தான். படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருப்பதால் சும்மா சுற்றலாம் என்று போகிறான் போல என்று நானும் பின்னே தொடர்ந்தேன். கீழே சென்றோம், அந்த பகுதியில்தான் பிரபல சூப்பர்மார்க்கெட் ஒன்று இருக்கிறது. அங்கே செல்ல வேண்டு என எனக்கு நீண்ட நாளா ஆசை. சும்மா சுத்துவதற்கு அந்த மார்க்கெட்டுக்குள் போய்ப் பார்க்கலாம் என்று எண்ணி நண்பனை, அழைத்தேன், அதற்குள் அவன் என்னையும் உள்ளே வரச்சொல்லி விட்டு கடைக்குள் நுழைந்துவிட்டான். நேராக துணிகள் இருந்த பகுதிக்குச் சென்றான். போய் சிலவினாடிகள் தேடிவிட்டு, மச்சி இது எப்படி இருக்கு, இத பாக்கத்தான் உன்னை வரச்சொன்னேன் என்று தூக்கிக் காட்டினான். அவன் கையில் இருந்தது, ஒரு காக்கிச்சட்டை!