Sunday, November 14, 2010

அறியாப் பூனைகளின் தெரியா விளையாட்டு!

ஒரு ஊர்ல ஒரு மன்னரு ரொம்ப இம்சையா ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாரு.  பல கேடிப்பசங்களும் மன்னருக்கு கொடுக்க வேண்டியதக் கொடுத்து நிம்மதியா தொழில் பண்ணிட்டு இருந்தாங்க. திடீருனு நாட்டுல எலித்தொல்ல ரொம்ப அதிகமாயிடுச்சு. அதுவும் ஒரே ஒரு எலியால!  கேடிப்பசங்களால வழக்கம் போல தொழில் பண்ண முடியாம  சிரமப்பட்டாங்க. உடனே மன்னருகிட்ட போயி முறையிட்டாங்க. மன்னரும் அமைச்சர கூப்புட்டு எலித்தொல்லைய உடனே ஒழிங்கன்னு உத்தரவு போட்டாரு. அப்போ அமைச்சருகிட்ட நாலு பூனைகள் வேல பாத்துக்கிட்டு இருந்துச்சு.  இந்த நாலு பூனைகள வெச்சித்தான் ஓட்டுமொத்த நாட்டு நிர்வாகத்தையும் (?) பண்ணிக்கிட்டு இருந்தாரு அமைச்சரு.

மன்னரோட உத்தரவக் கேட்டுப்புட்டு, ஒரே யோசனையா ரெண்டு நாளு சுத்துனவருக்கு திடிர்னு அந்த ஐடியா(?) வந்துச்சு.  நாமதான்  நாலு பூனைகள  தண்டமா வெச்சிருக்கோமே, அதுகள இதுக்கு பயன்படுத்திட்டா என்னன்னு!  உடனே மன்னர்கிட்டேயும் போயி சொன்னாரு. மன்னர் கேட்டுபுட்டு ரொம்ப ஆச்சர்யப் பட்டாரு. அந்தப் பூனைகள பார்க்கனும் உடனே ஏற்பாடு பண்ணுங்கன்னு  சொல்லிப்புட்டாரு!

இதக் கேட்டதும் அமைச்சருக்கு ரொம்ப பயமா போச்சு, பூனைங்க மன்னரு முன்னாடி ஏதாவது பண்ணி மானத்த வாங்கி பதவிக்கு வேட்டு வெச்சிட்டா என்ன பண்றதுன்னு! அதுனால பூனைகள தயார் பண்ண முடிவு பண்ணி எல்லாத்தையும் கூப்புட்டாரு, அதுங்க உடனே வராம அங்கே இங்கே துள்ளிக்கிட்டு இருந்துச்சுங்க. அமைச்சருக்கு பொசுக்குன்னு கோவம் வந்து சாட்டையத் தூக்குனாரு. உடனே எல்லாப் பூனையும் வரிசையா பம்மிக்கிட்டு வந்து உக்காந்துச்சு!



ஒரு எலி ரொம்ப நாளா தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கு, அத உங்கள்ல யாராவது போயி புடிச்சிக்கிட்டு வரனும் முடியுமான்னு பூனைகளப் பாத்து அமைச்சரு கேட்டாரு. பூனைங்களுக்கு ரொம்ப நாளு கழிச்சி நல்ல இரை கெடைக்கப் போவுதுன்னு ஒரெ சந்தோசம், நாந்தான் போவேன், நாந்தான் போவேன்னு ஒரே சண்டை, கூக்குரல்...! சைலன்ஸ்........... என்று அமைச்சர் கத்தியதும் பூனைகள் தத்தம் இடங்களில்  போய் பவ்யமாக அமர்ந்தன.  சரி உங்கள் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பேன்,  யாரு திறமைய நிரூபிக்கிறீங்களோ, அவங்களுக்குத்தான் எலி என்றார் அமைச்சர்.

அது கேட்டு பூனைகளுக்கு சிறிது தயக்கம். இருந்தாலும் சரி நாங்கள் தயார் என்றன. முதல்   பூனையை அழைத்து உன் திறமையக் காட்டு என்றார் அமைச்சர். உடனே அது சென்று பெரிய பேப்பர் ஒன்றை எடுத்து வந்து விதவிதமான கெட்ட வார்த்தைகளை எழுதியது. எலியை  நாராசாரமாகத்  திட்டி எழுதியது. அதைப்  பார்த்து  மற்ற  பூனைகளும்  சந்தோசமாகக் ஆரவாரமிட்டன.

அடுத்து என்றார் அமைச்சர். அடுத்த பூனை வந்தது, கிச்சனுக்குப் போயி 12 வடைகள எடுத்துக்கிட்டு வந்து சரியா நாலு நாலா, மூணு பங்கு வெச்சுச்சு, அமைச்சர் உதட்டைப் பிதுக்கினார். மூன்றாவது பூனை முன்னே வந்தது, அது மதுக்கூடத்துக்குப் போயி ஒரு புல் பாட்டில் ரம்மை தூக்கிட்டு வந்து அதை சரியாக ஒரு ஒரு லார்ஜாகப் பிரித்துக் கிளாசில் ஊற்றியது ஒரு துளி கூட சிந்தாமல்! அமைச்சர் முகத்தில் திருப்தியில்லை. அடுத்து என்று தலையசைத்தார். நான்காவது பூனை வந்தது, சுற்றும் முற்றும் பார்த்தது, ஓடிப்போயி, வடையை எடுத்துத் தின்றது, வடையைத்தின்று கொண்டே ஒவ்வொரு லார்ஜாக உள்ளே இறக்கியது, எல்லாம் முடிந்ததும், முதல் பூனை எழுதி வைத்த பேப்பர் மேல் கக்கா போனது. பின்பு அப்பிடியே ஒரமாகப் போயி படுத்துக்கிட்டு காலை ஆட்டியபடி அமைச்சரைப் பார்த்து கண்ணடித்தது.

அமைச்சருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி!  இன்னும் சிறிது நேரத்தில் பூனைகளை பார்க்க மன்னர் வந்துவிடுவார். என்ன நடக்கப் போகிறதோ என்று அமைச்சர் தீவிர யோசனையில் ஆழ்ந்தார். பூனைகள் நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல், வழக்கம்போல் துள்ளி ஓடியாடின. ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டு விளையாடின. இப்போ அமைச்சர் என்னதான் செய்யறது? யாராவது உடனே ஐடியா கொடுங்களேன்!

பி.கு.: இது ஒரு பின்நவீனத்துவ கதை, அதுனால என்ன எழவுன்னு எனக்கே புரியல, யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லித் தொலைங்க சார்....!

!

Saturday, November 13, 2010

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்ஸ்.......தொடர் பதிவு!

 சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் என்றாலே, முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்ப்பது, கட் அவுட்டிற்கு பால் ஊற்றுவது, சூப்பர் ஸ்டாரின்  முதல்  சீனுக்கு  விசிலடித்து பேப்பர் தூவுவது போன்றவைதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால் எங்களைபோன்று, வாய்ப்புக் கிடைக்கும்போது படம் பார்த்து, விசிலடிக்காமல், பால் ஊற்றாமல் அமைதியாக, சூப்பர் ஸ்டாரை ரசித்த ரசிகர்களும் இருக்கிறார்கள்.  சூப்பர் ஸ்டாரின் படங்களைத் தரவரிசைப் படுத்தும் அளவுக்கு சினிமா ஞானம் எனக்கில்லை. இருந்தாலும், நண்பர்களின் தொடர்பதிவுகளில் ஒரு சங்கிலியாக என்னையும் இணைத்துவிட்ட நண்பர் தேவா அவர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க,  இதோ என்னுடைய வரிசைப்படுத்தல்........


10. பில்லா
ரஜினியின் ஸ்பெசல்களில் ஒன்று அவருடைய வில்லத்தனம் கலந்த நடிப்பு. ஸ்டைலிசான வில்லத்தனம் சூப்பர் ஸ்டாருக்கு அற்புதமாக வரும். அது இதுவரை வெகுசில படங்களிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  அவற்றில் பில்லாவும் ஒன்று. இப்படத்தில் ரஜினி பெட்ரோல் பங்கிலிருந்து தப்பும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.





9. மூன்று முகம்
மறக்க முடியுமா எந்தப் பக்கம் உரசினாலும் பற்றிக்கொள்ளும் அலெக்ஸ் பாண்டியன் டிஎஸ்பியை! இந்தக் காட்சிகள் படத்தில் சிறிது நேரமே வந்தாலும், பார்ப்பவர்களுக்கு, திடீரென முழுவேகத்தில் சென்று கொண்டிருக்கும் புல்லட் டிரெய்னில் ஏறிவிட்ட உணர்வை ஏற்படுத்தும். காதுகளில் இன்னமும் ரீங்காரமிடும்... மந்தாரச் செடி ஓரம்.........




8. ஜானி
இந்தப்படத்தில் ரஜினி-ஸ்ரீதேவி கெமிஸ்ட்ரி வெகு அற்புதமாக இருக்கும்.
முடிவெட்டும் ரஜினி கேரக்டரின் ஓப்பனிங் சீன் சான்சே இல்ல, (அந்த கெட்டப்புக்கே ஒரு தனி விருது கொடுக்கலாம்) சோபாவில் படுத்து தூங்கிட்டு இருப்பார். வீடுமுழுக்க கோழிகள் அது இதுவென நிறைந்திருக்கும். அப்போது ஒரு கோழி முட்டையிடும். தலைவர் அப்பிடியே கேசுவலாக எடுத்து உடைத்துக் குடிப்பார்.  வேறு யார் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு ஃபீல் வருமா என்பது தெரியவில்லை.

இந்த கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரின்னு சொல்றாங்களே அப்பின்னா  என்னான்னு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தீங்களே மக்கா, இந்த வீடியொவ பாருங்க, அதப் பத்தி பாடமே எடுத்திருக்காங்க!





7. தளபதி
ரஜினியும் மணிரத்தினமும் இணைந்த படம். இப்போது எந்திரன் படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பிற்கு கொஞ்சமும் குறைந்ததில்லை, தளபதிக்கு அப்போது ஏற்பட்ட எதிர்பார்ப்பு! தாய் என்று  தெரியாமலே  ஸ்ரீவித்யாவைச்  சந்திக்கும் நேரங்களில் ஏற்படும் ஒரு இனம் புரியாத வலியயை, உணர்வை   அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் சூப்பர் ஸ்டார்.  சின்னத்தாயவள் தந்த ராசாவே......




6. எஜமான்
நாட்டாமை என்றாலே தொள தொள சட்டை, முதிர்ச்சியான தோற்றம், கோயம்புத்தூர் பேச்சு என்று இருந்த வழக்கத்திற்கு முற்றிலும் நேர் மாறாக சிம்பிளாக நடித்துக் கலக்கியிருப்பார் ரஜினி. வெறும் துண்டை வைத்துக்கூட ஸ்டைல் பண்ண ரஜினியால் மட்டுமே முடியும். வானவராயனின் கம்பீரத்தில் எஜமான்!


5. ஆறிலிருந்து அறுபது வரை
அனைத்து ரஜினி ரசிகர்களும், விமர்சகர்களும் பார்த்தே தீர வேண்டிய படம்! ரஜினி வெகு இயல்பான நடிப்பால் படத்தை தூக்கி சுமந்திருப்பார். இப்படியும் சூப்பர் ஸ்டார் நடிப்பாரா என்று பார்த்துப் பார்த்து வியந்த படம் இது.


4. படையப்பா
வழக்கமாக வில்லன் கேங், அடியாட்கள் சண்டை என்று இல்லாமல், நீலாம்பரி என்ற ரஜினியை விரும்பும் கேரக்டர் மூலமாகவே படம் நகர்வதும், ரஜினியின் ஸ்டெயிலிஷான பதிலடிகளும்  படத்தையும்  ரஜினியையும்  ரொம்பவே ரசிக்க வைத்தது. 


3. தம்பிக்கு எந்த ஊரு
காதலின் தீபம் ஒன்று பாட்டில் வரும் ரஜினிக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். வெகு இயல்பான, எளிமையான நடிப்பால் பார்ப்பவர்களைக் கட்டிப் போட்டுவிடுவார் சூப்பர்ஸ்டார். எப்போதும் ரசித்துப் பார்க்க  உகந்த அருமையான காதல் படம்!


2. சந்திரமுகி
வேட்டைய மகாராஜா..... மிக மிகக் குறைவான நேரமே வந்தாலும், மறக்க  முடியாத கேரக்டர், ரஜினியால் மட்டுமே சாத்தியம்! கேரக்டரை மீறாமல்  டாக்டராக வரும் ரஜினி, இக்கால டாகுடர் நடிகர்களுக்கு ஒரு பாடம்! இப்படத்தில் வரும் காட்சிகள் ரஜினியும் துப்பறியும் கேரக்டரில் நடித்தால் என்ன என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது! ரஜினி ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்பது என் கோரிக்கை, என்ன சொல்றிங்க நண்பர்களே?




1. பாட்ஷா
ரஜினி இனி எத்தனை படத்தில் நடித்தாலும் பாட்ஷா போல வருமா என்று தெரியவில்லை. பாட்ஷாவுக்கு நிகர் பாட்ஷாதான். அதிலும் அந்த பர்ஸ்ட் பைட் காட்சியை எத்தனை தடவை வேணுமென்றாலும் பார்க்கலாம். பர்ஸ்ட் பைட் ஆரம்பிக்கும் முன் ரஜினி பாட்சாவாக மாறுவாரே அப்போது முகத்தைப் பார்க்கனும்.... சான்சே இல்லை.....
நான் ஒருதடவ சொன்னா......





போனசாக (?) சூப்பர் ஸ்டாரின் பாடல்களையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

10. மாசி மாசம்தான் (ஊர்க்காவலன்)
9. அடி ஆடு பூங்கொடியே (காளி)/மீனம்மா மீனம்மா (ராஜாதிராஜா)
8. உன்னைத்தானே (நல்லவனுக்கு நல்லவன்)
7. காதலின் தீபம் ஒன்று (தம்பிக்கு எந்த ஊரு)
6. பொன்னோவியம் (கழுகு)/மலைகோவில் வாசலிலே (வீரா)
5. ஒருநாளும் உனை மறவாத (எஜமான்)
4. கண்மணியே காதல் என்பது (6லிருந்து 60வரை)
3. சினோரிட்டா ஐ லவ் யூ (ஜானி)
2. தென்மதுரை வைகை நதி (தர்மத்தின் தலைவன்)
1. அக்கரைச் சீமை அழகினிலே (ப்ரியா)
.

பெஸ்ட் வில்லன்
ரகுவரன் அண்டு ரகுவரன் ஒன்லி!


ரஜினியின் பெஸ்ட் ஹீரோயின்
இத உங்க சாய்சுகு விட்டுடுறேன்!

இதைத் தொடர நான் அழைக்கும் இரு நண்பர்கள்
1. பனங்காட்டு நரி
2. நாகராஜசோழன் M.A
(என்னோட வேண்டுகோளை ஏத்துக்குங்க மக்கா..... உங்களுக்கு ஒருவாரம் தான் டைம்! வேண்டுகோள ஏத்துக்கிறதுக்கில்ல, தொடர்பதிவு போடுறதுக்கு!)

இந்தத் தொடர்பதிவில் ஏற்கனவே பதிவிட்ட நண்பர்கள்
1. அருண் பிரசாத்
2. சிரிப்பு போலீஸ் ரமேஷ் ரொம்ப கெட்டவன் (சாரி ஒரு ஃப்ளோவுல வந்துடுச்சி) ரமேஷ் ரொம்ப நல்லவன் (சத்தியமா)
3. LK
4. தேவா
தகவல் தந்து உதவிய விக்கிபீடியா, வீடியோ தந்த யூ டியூப், மற்றும் வீடீயோ அப்லோட் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

!

Tuesday, November 9, 2010

ஆவியோடு எனது அனுபவங்கள்.....!

ஆவின்னாலே எல்லாருக்கும் ஒரு பயம், திகில். சண்டைக்கு பயப்படாதவங்க  கூட பேய்க்கு பயப்படுவாங்க. நம்மில் பலருக்கும் ஏதோ ஒரு அமானுஷ்ய அனுபவம் கண்டிப்பாக இருக்கும். விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆவியோடு பேசுவது பற்றி பல புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார். ஒரு மாதப் பத்திரிக்கையும் நடத்தி வருகிறார்.  ஆவிகளை பற்றிய என்னுடைய அனுபவங்கள இங்கே பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பதிவு.
நண்பர்கள் எஸ்.கே வும் மாதவனும் ஆவிகளைப்பத்தி பதிவு போட்டிருந்தாங்க, அதப்படிச்சிட்டு எனக்கு சில சம்பவங்கள் ஞாபகம் வந்தது.  அதப்பத்திதான் எழுதியிருக்கேன். இவை நேரடியாக நான் கேட்டு அறிந்தவை.

முதல் அனுபவம் எனது பெரியப்பாவிற்கு நேர்ந்தது. அவர் இளைஞராக இருக்கும் போது நடந்த சம்பவம் எப்படியும் 35 வருடங்களூக்கு முன்பு இருக்கலாம். அப்போது இரவில், வீட்டின் ஹாலில் அவரும் தாத்தாவும் தூங்கிக் கொண்டிருந்து இருக்கிறார்கள். திடீரென எழுந்து கொண்ட பெரியப்பா எதோ தெரிவதைப் போல தோன்ற என்னவெனக் கவனித்து இருக்கிறார். அது அங்கே இருந்த மேசையின் மேல் தோன்றிய ஒரு போர்ட்ரெயிட் அளவிற்கான மனித உருவம். அதிலிருந்து வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு முக்காடு போட்டிருந்தது. மேலும் அது தாத்தாவையே உற்று நோக்கியபடி இருந்திருக்கிறது. அதன் பார்வையின் வீச்சு தாங்கமுடியாமலோ என்னவோ தாத்தா உசும்பி புரண்டு, புரண்டு, பின்னர் எழுந்து வெளீயே சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது சற்று மறைந்த அவ்வுருவம், அவர் வெளியே சென்றவுடன் மீண்டும் தோன்றியிருக்கிறது. அது கண்டு, அது தாத்தாவைத் தாக்கக்கூடும் என்று அஞ்சிய பெரியப்பா, டேய்..என்று கத்தியபடி அதன்மேல் பாய்ந்திருக்கிறார். அது உடனே மறைந்து விட்டது.  பின்பு அவரும் தாத்தாவின் பின்னாலேயே சென்று  எங்கும்  பார்த்து  விட்டு  வந்தாராம்.

அப்புறம் வேறு எங்கும் அது தென்படவில்லை. அது பற்றி பலதடவை என்னிடம் கூறியிருக்கிறார்.  இத்தனைக்கும் என் பெரியப்பா ஒரு கடுமையான நாத்ததிகவாதி.  அறிவியல்  ஆர்வம்  மிகுந்தவர்.  ஐன்ஸ்டைன்  தியரிகளை கை தேர்ந்த விஞஞானிகள்  போல விளக்கும்  திறன் படைத்தவர் (இன்றும் எனக்குப் பல விஷயங்களில் ரோல் மாடலாக இருப்பவர்!).  அந்த ஆவியைப் பார்த்த போது அவர் செய்த பரிசோதனைகள் பற்றி சொல்லச் சொல்ல வியப்பாக இருக்கும். என் தாத்தாவும் அவரும் படுத்திருந்தது 90 டிகிரி ஆங்கிளில். இவர் அந்த உருவத்தை பார்த்தது அதன் இடது பக்கதில் இருந்து. எனவே அந்த உருவத்தால் இவரை நேருக்கு நேராகப் பார்க்க முடிந்திருக்காது. அந்த உருவத்தால் ஒருவர் விழித்துக் கொண்டு இருப்பதையும் அதைக் கவனித்துக் கொண்டிருப்பதையும் உணர (பார்க்க முடியவில்லை என்றாலும்)  முடிகிறதா என்று அறிய,  அவர் படுத்துக் கொண்டே காலையும் பின்னர் கையையும்  மெல்ல ஆட்டியிருக்கிறார். ஆனால் அந்த உருவம் அவர் டேய் என்று சத்தமிடும் வரைக்கும் அவரை உணரவில்லை! அது மறைந்த பின்பு அது நின்ற இடத்தில் ஏதும் சூடு அல்லது குளிர்ச்சி தெரிகிறதா என்று தடவிப் பார்த்திருக்கிறார். அந்த நள்ளிரவிலும் வீட்டைச் சுற்றி  (வெளியே  தெருவிலும்)  வந்து ஏதேனும் தெரிகிறதா என்று தேடியும் இருக்கிறார். எந்த ஒரு அடையாளமோ தடையங்களோ  கிடைக்கவில்லை. இதுவரைக்கும் அதன் மர்மமும் விளங்கவில்லை....!

இரண்டாவது அனுபவம் என் மாமாவின் நண்பருக்கு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு நேர்ந்தது.  அப்போது அவர் வெளியூரில் வேலை செய்து கொண்டு இருந்தார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வருவார். அப்படி ஒருமுறை வரும்போது தாமதமாகி இரவு பதினொரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவர் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு வீட்டுத் திண்ணையில் வழக்கமாக ஒரு வயதான் பெண் படுத்திருப்பார் (அந்தப் பாட்டி வழக்கமாக அங்கே தான் தூங்குவார்). அன்றும் அந்த்ப் பாட்டி திண்ணையில் இருந்து கொண்டு இவரைப் பார்த்து என்ன இப்போதான் வரீங்களான்னு கேட்டிருக்காங்க! இவரும் ஆமா பஸ்ஸு கொஞ்சம் லேட்டு என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மனைவியிடம் எதேச்சையாக அந்தப் பாட்டி கேட்டதைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் அவர் மனைவி அம்மாடி என்று அலறியபடி மயங்கி விழுந்துவிட்டார். அந்தத் பாட்டி இறந்து போய் இரண்டு நாட்கள் ஆகிவிட்டதாம்! அந்த நபருக்கு அடுத்த இரண்டு நாட்களுக்குக் காய்ச்சல்!

இப்பிடி இரண்டு மறுக்க முடியாத அனபவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தாலும் எனக்கு ஆவிகள் பற்றி பெரிதாக நம்பிக்கை இல்லை. இப்படித்தான் ஒரு நண்பனிடம் ஆவிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் வந்துவிட்டது.  தானும் ஆவியைப் பார்த்திருப்பதாக நண்பன் கூறீனான். நானோ  ஆவியயை நானே பார்த்தால்தான் நம்புவேன் என்று  சொல்லிவிட்டேன்.  நண்பன் சற்று யோசித்துவிட்டு அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.  அடுத்த வாரமே போவோம், நான் போன் பண்ணிக் கூப்பிடும் போது வந்தால் போதும் என்றான்.

வீம்புக்காக சரி பாத்துடுவோம் என்று சொல்லிவிட்டாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருக்கவே செய்தது. அந்த வாரம் முழுவதும் நண்பன் எப்போது கூப்பிடுவானோ என்று நடுக்கத்திலேயே கழிந்தது. சரியாக 8வது நாள், இரவு 9 மணி இருக்கும், நண்பனின் தொலைபேசி அழைப்பு. பயந்து கொண்டே எடுத்தேன். உடனே கெளம்பி வா என்றான். நான் இந்த நேரத்திலேயா என்று தயக்கத்துடன் கேட்டேன். அவன் இதான் சரியான நேரம் என்று கூறிவிட்டான்.

அவன் என்னை மார்க்கெட் பகுதிக்கு அழைத்துச் சென்றான். கொஞ்சம் இங்கேயே இரரு வந்திடுறேன்னுட்டுப் போயிட்டான். எனக்கு திக்கு திக்குன்னு இருந்தது. சரி கூட நண்பந்தான் இருக்கானே, ஆவி ஒருவேளை இருந்தாலும் அது அவனுக்குத் தெரிந்த ஆவியாகத்தான் இருக்கும் அதனால் பிரச்சனை ஒன்றும் வந்துவிடாது என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். அதற்குள் அவனும் வந்து விட்டான். கையில் என்னமோ வைத்திருந்தான்.

அதை என் கையில் கொடுத்து ஆவி பாக்கனும்னியே இந்தா பாரு என்றான். வாங்கிப் பார்த்தால்.....
..
..
அது...............


ஆனந்த விகடன்........!



(மக்கா..... இதுக்கே ஒருவாரம் ரூம் போட்டு அழுதிருக்கேன், அதுனால நோ கெட்ட வார்த்தை ப்ளீஸ்........   மீ பாவம்ல?)

!

Monday, November 8, 2010

இந்தி கத்துக்குங்க சார்... இந்தி...!

எல்லாரும் நல்லபடியா தீபாவளி கொண்டாடி இருப்பிங்க. நெறையப் பேரு பலகாரம், பட்சணங்கற பேருல வீட்டுக்கார அம்மணியோட பல பரிசோதனை முயற்சிக்கு ஆளாகி இன்னும் தெளிஞ்சிருக்க மாட்டீங்க. சரி சரி.....  சின்ன விசயத்துக்குலாம் இப்பிடி கவலப்பட்டா எப்பிடி? கண்ணத் தொடைங்க! நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க, இப்போ நாம இந்தி கத்துக்கப் போறோம். கத்துக்கிட்டு எங்கேயோ போகப் போறோம், இனி நம்ம ரேஞ்சே வேற!

இந்திதான் தேசிய மொழின்னு 80 கோடி இந்திவாலாக்கள் நம்புறாங்க, சொல்றாங்க. ஒரு ஜனநாயக நாட்டுல, மெஜாரிட்டி கருத்துக்கு மரியாத கொடுக்குறதுதானே முறை? ஆகவே நம்ம ஜனநாயகத்தக் கட்டிக் காக்க நாமலும் இந்தி கத்துக்கப் போறோம் மக்கா. இந்தியக் கத்துக்கிட்டுப் போயி நாமல்லாம் யாருன்னு இந்திவாலாக்களுக்குக் காட்டறோம், சென்ட்டர்ல ஆச்சியப் புடிக்கிறோம்.

இவ்வளவு சொல்லியும் இந்தி கத்துக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றவங்களுக்காக, நாம எல்லோரும் இந்தி கத்துக்கறதுனால என்னென்ன நன்மைகள்னு வெளக்கமா ஒரு பட்டியல் போட்ருக்கேன். அதப் பாத்தாவது திருந்ததுற வழியப் பாருங்கப்பு!

  1. தமிழ்நாடுங்கற பேர டமில் ப்ரதேஷ் அப்படின்னு மாத்தி உடனடியா தேசிய நீரோட்டத்துல ஓடிப்போயி தொபுக்கடீர்னு குதிச்சிடலாம்!
  2. ஒரு தமிழன் பிரதமரா வர்ரதுக்கு உடனடி வாய்ப்பு (அது அஞ்சாநெஞ்சனான்னு முந்திரிக்கொட்ட மாதிரிக் கேக்கப்படாது!)
  3. இனி நம்ம மீனவர்கள இலங்க்கை கடற்படை தாக்குனா, நம்ம இந்தியக் கடற்படை பெரும் போர் நடத்தி காப்பாத்தும்  (ஏன்னா இதுவரைக்கும், மாட்டிக்கிட்ட நம்ம மீனவர்கள், தமிழ்ல காப்பாதுங்கன்னு கத்தினது நம்ம கடற்படைக்குப் புரியல, இப்போ இந்தி கத்துக்கிட்டு, இந்தில காப்பாத்துங்கன்னு கத்தலாம், உடனடி உதவி நிச்சயம்!)
  4. காவிரில தண்ணி தினந்தோறும் திறந்துவிடப்படும், திறக்க மறுக்கும் கர்னாடக அரசு உடனே டிஸ்மிஸ் செய்யப்பட்டு, கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும்! (இதப்பத்தி நம்ம மொதல்வரு, தமிழ்ல கடிதம் எழுதுனதுதான் தப்பு! என்ன எழுதியிருக்குன்னு புரியாம, பிரதமர் அய்யா, நடவடிக்கை எடுக்க முடியாமப் போச்சு! இனி இந்தில கடிதம் எழுதி காரியத்த கச்சிதமா முடிப்போம்ல?)
  5. கேரளாவில் முல்லைப்பெரியார் அணைகட்டும் முயற்சியை மத்திய அரசு தடை செய்து இருக்கும் அணையைத் தமிழகத்திடம் ஒப்படைக்கும்! அதே போல் அந்திராவிலும் பாலாற்று அணைக்குத்தடை!
  6. சுப்ரீம் கோர்ட் கிளை உடனடியாக சென்னைக்குக் கொண்டுவரப்படும் (இனி தைரியமா டெல்லில இருந்து வந்து இந்திலயே வாதாடலாம்ல?)
  7. தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வை முழுக்க முழுக்க இந்தியிலேயே நடத்தி சாதனை படைப்பார் தமிழினத் தலைவர்!
  8. சன் டிவி ஒரு முழுநேர இந்திச் சேனல் ஆரம்பித்து நமக்குப் பேரானந்தம் அளிக்கும்! (சன்டிவியே பாத்துப் பாத்துப் பழகியவர்கள், இனி இந்தி சன்டிவியைப் பார்த்து பெருமிதம் அடையலாம்!)
  9. தமிழ்ப் படங்களுக்கு குறைந்தது 10 தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும்! அதைப்பத்தி கமல் இந்தியிலேயே பேட்டி அளிப்பார் (பயப்படாதீங்க, வழக்கம்போல யாருக்கும் புரியாத மாதிரிதான்!)
  10. டாகுடர் விஜய்யின் ஐம்பெருங்காப்பியங்களான ஆதி, வில்லு, குருவி, வேட்டைக்காரன், சுறா படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு சரித்திரம் படைக்கும், அதைத் தொடர்ந்து டாகுடர் மும்பை ஜூஹூவில் பெரிய பங்களா வாங்குவார் (உடனே ரியல் எஸ்டேட் விலைகள் சரிந்து எல்லோரும் மும்பையில் வீடு வாங்கும் நல்ல நிலை(?) ஏற்படும்!)
  11. அது கண்டு மிரளும் அமிதாப்பும், ஷாருக்கானும் சென்னைக்கு ஓடிவந்து ஆளுக்கொரு பங்களா வாங்கிவிடுவார்கள் (தமிழர்கள் இனி தினமும் அவர்களைக் கண்டு மனமாறத் தரிசித்து இன்புறலாம்!)
  12. தமிழ் சினிமாவின் அழகுப் பதுமைகள் இனி சௌகர்யமாக இந்தியிலேயே பேட்டி கொடுத்து நம்மை மகிழ்விப்பார்கள் (ரொம்ப முக்கியம்! நமீதா மச்சான்ஸ்... ரசிகர்கள் சாரி வெறியர்கள் மன்னிப்பார்களாக!)
  13. அம்பானிகள், டாட்டாக்கள் சென்னையில் பாதிக் கம்பெனிகளை (பாதிச் சென்னையையும்தான்) வாங்கிவிடுவார்கள். நாமும் அவர்களுக்கு நம் புது விசுவாசத்தை இந்தியில் காட்டி மகிழலாம்!
  14. மாறன் அன் கோ, இனி அமிதாப்பை வைத்து எந்திரன் - 2 எடுக்கும்! (அப்போ எந்திரன் -3 கோவிந்தாவ வெச்சான்னுலாம் சின்னப்புள்ளத்தனமா கேக்கப்படாது!)
  15. அன்பு அண்ணன் அஞ்சாநெஞ்சர் தலைமையில் மதுரையில் மாபெரும் ஒலிம்பிக்ஸ் நடத்தி சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் (அதையும் கல்மாடி அண்ணனே நடத்திக் கொடுப்பாரு!)
  16. தமிழகம் இந்தியாவின் 37வது மாநிலமாக இணைக்க்படும் (என்னது ஏற்கனவே அங்கேதான் இருக்கோமா, சாரி சாரி, டங்க்... சே.... கையி...ஸ்லிப்பு ஆய்டுச்சி, இத யாரும் படிக்காதீங்க!).

பாத்திங்களா மக்களே எம்புட்டு நன்மைகள் நம்மத் தேடி வருதுன்னு? இதுக்கு மேலேயும் இந்தி கத்துக்காம இருக்கலாமா? அது தப்பில்லையா? அநியாயமில்லையா?

சரி, ஏழுகழுத வயசாயிடுச்சு இதுக்கு மேல எங்கே போயி இந்தி கத்துக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா? நான் இருக்கும் போது நீங்க இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்குலாம் தயங்கலாமா? பயப்படாம வாங்க நான் கத்துதரேன், அதுவும் இலவசமா!

ஓக்கே, ஸ்டார்ட்!

பர்ஸ்ட்டு, நம்பர் சொல்றது,
கையில ஏதாவது கர்லாக் கட்ட இருந்தா தூக்கிகிடுங்க (ஏதாவது உருட்டுக்கட்டயா இருந்தாலும் பரவால்ல! ) இப்போ வரிசையா சொல்லுங்க பாப்போம்!
ஏக்கு, தோவ்வு, தீனு, சாரு (பிச்சிபுடுவேன், இது அந்தச் சாரு இல்ல!), பாஞ்ச்சு.....!
அட என்ன சார் நீங்க இதக் கூட சரியா சொல்ல மாட்டேங்கிறீங்க? சரி சரி, கோச்சுக்காதீங்க, கக்கூசுல கக்கா போவும்போது இன்னொரு வாட்டி சொல்லிப் பாத்துக்கிடுங்க போதும்! இனி நாம அடுத்த பாடத்துக்குப் போவோம்!


ஒருவழியா நம்பர் சொல்லக் கத்துக்கிட்டீங்க, அதே மாதிரி இனி பேசுறது எப்படின்னு பாப்போம். பக்கத்துல ஏதாவது மிக்சர், பக்கோடா, காராச்சேவு ஏதாவது வெச்சுக்குங்க! (எதுக்குன்னு வெளக்கெண்ண கேள்வியெல்லாம் கேக்கப்படாது!)

மிக்சர கைநெறைய அள்ளி வாயில போட்டுக்குங்க, இப்ப நான் சொல்லச் சொல்ல நீங்க திருப்பி சொல்லனும் (இது பார்த்திபன் மாதிரி திருப்பி இல்ல!)

ஏக் காவுன் மே....... (கவுனு இல்ல காவுன்...    கா....   வு....    ன்.....!)


ஏக் கிஸான்......


ரக தாதா.....!


எங்க இன்னொரு வாட்டி சொல்லுங்க

ஏக் காவுன் மே..............    ஏக் கிஸான்................    ரக தாதா...... ரக.,... ரக..... ரக தாதா......

என்ன சார் இப்பிடி சொதப்புறீங்க, இது சரிப்படாது, இன்னும் கொஞ்சம் மிக்சர் வாய்ல அள்ளிப் போட்டுக்கிட்டு, இன்னொரு வாட்டி இந்த வீடியோவப் பாத்து அதே மாதிரி டிரை பண்ணுங்க!




சரி பாடம் படிச்சாச்சு, இனி டெஸ்ட்டு. கீழே இருக்க கேள்விகளுக்கு பதில் சொன்னா அதிரடி பரிசுகள் உண்டு!


1. "ஏக் மார் தோ துக்கடா" என்றால் என்ன?


2. "கலத் காம் மத் கர்": சிறு குறிப்பு வரைக.


சரியாக விடையளிக்கும் முதல் மூன்று அதிர்ஷ்டசாலிகளுக்கு,

முதல் பரிசு:
மங்குனி அமைச்சர் ராப்பகலாக எழுதிக்கொண்டிருக்கும் 'இந்தி டிக்சனரி' என்ற அதிர வைக்கும் திரில்லர் நாவல்!

இரண்டாம் பரிசு:
பட்டாஜி அவர்கள் இத்தாலி மொழியில் எழுதியுள்ள 'அன்னையின் ஆணை' குணச்சித்திர நாவல்!

மூன்றாம் பரிசு:
சிரிப்பு போலீஸ் சிங்கை லக்கி பிளாசாவில் தோழிகளுடன் அமர்ந்து கொலம்பியா மொழியில் எழுதிய 'பழைய காதலி' என்ற மனதை மயக்கும் காதல்கதை!

போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நம்ம டீஆர் இந்தியில் நடித்துக்கொண்டிருக்கும் புதிய தமிழ்ப்படத்தின் DVDக்கள் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்!

Wednesday, November 3, 2010

எங்கே போறீங்க? (கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டும்!)


ஒரு பிரபல பதிவரு வேலை விசயமா சிங்கப்பூரு கெளம்புனாரு (சிரிப்பு போலீசு இல்லீங்கோ!). ஆபீசுல இருந்து வந்து அவசரம் அவசரமா எல்லாத்தையும் பேக் பண்ணி ஆரம்பிச்சாரு. அப்பிடியே வீட்டுக்கார அம்மாகிட்ட, போயிட்டு வர்ரேன், பாத்து பத்தரமா இருந்துக்கோன்னு சென்டிமென்ட்டா மூஞ்சிய சோகமா (?) வெச்சுக்கிட்டே  சொன்னாரு . அப்போ அதே சென்டிமென்ட்டோட வீட்டுக்காரம்மாவும்  சில கேள்விகளைக் (?)கேட்டாங்க. அதக் கேட்டவருதான்.......டோட்டல் புரோகிராமையும் கேன்சல் பண்ணிட்டாரு. இனி அவரு பக்கத்து பெட்டிக்கடைக்குகூட போகமாட்டாரு போல.... நெலம அம்புட்டு மோசமா இருக்கு!

எச்சூஸ் மி, எங்கே எஸ்கேப் ஆகுறீங்க? அவரு வீட்டுக்காரம்மா என்ன கேட்டாங்கன்னு தெரிஞ்ச்சுக்க வேணாமா? (அப்போதானே நாளப் பின்ன உங்களுக்கும் உபயோகமா இருக்கும்?)

  1.  எங்க போறிங்க?
  2. யாருகூட போறிங்க?
  3. ஏன் போறிங்க?
  4. எப்படிப் போறிங்க?
  5. எங்க தங்குவீங்க?
  6. அங்க போயி என்ன பண்ன போறிங்க?
  7. ஏன், நீங்க போறீங்க?
  8. எப்ப திரும்ப வருவீங்க?
  9. நைட்டு சாப்புட வந்துடுவீங்களா?
  10. நான் குடுக்குற சாப்பாடத்தான் கொண்டு போயி சாப்புடனும்!
  11. என்ன வாங்கிட்டு வருவீங்க?
  12. நீங்க வேணும்னே இப்படி கெளம்பிப் போறிங்க?
  13. ஏன் பொய் சொல்றிங்க?
  14. என்னையும் கூட்டிட்டுப் போகனும்?
  15. போனவாட்டியும் இப்பிடித்தான் பண்ணிங்க?
  16. ஏன் இந்த மாதிரி டூர் புரோகிராம் ஏற்பாடு பண்ணீங்க?
  17. அடிக்கடி இந்த மாதிரி கெளம்பிடுறிங்க?
  18. அப்பிடி என்ன ஆபிஸ் வேல இருக்கு அங்க?
  19. அந்த வேலைய இங்கேயே பாக்க வேண்டியதுதானே?
  20. நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்!
  21. திரும்ப வர மாட்டேன்!
  22. என்னைத் தடுக்கக் கூட மாட்டீங்கிறீங்களே?

  1. எங்கே போறிங்க? (ஒண்ணுமில்ல அடுத்த செசன் ஸ்டார்ட் அவ்வளவுதான்!)


படிக்கிற நமக்கே இப்பிடி இருக்கே, பாவம்யா அந்தப் பிரபலப் பதிவரு!


எச்சரிக்கை: ஆகவே மெஸேஜ் என்னன்னா, கல்யாணம் ஆகாத பசங்கள்லாம் (தலைப்புல என்ன போட்டாலும் நீங்கதான் மொத வருவீங்கன்னு தெரியும்!) ) எங்கெங்கே ஊரு சுத்தனுமோ, சுத்திப் பாக்கனுமோ எல்லாத்தையும் இப்பவே எஞ்சாய் பண்ணிடுங்க! அப்புறம் பொட்டிக்கடைக்குப் போகனும்னாலும் ஒரு நீயா நானா நடத்த வேண்டி வரும்!


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

லீவு கெடச்சிடுச்சுன்னு எங்கேயும் ஊர் சுத்தாம,குடும்பத்தோட சந்தோசமா கொண்டாடுங்கப்பு!

Tuesday, November 2, 2010

நினைவுகளின் விளைவுகள்! ஒரு டைரிக் குறிப்பிலிருந்து.......!

நான் நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு இப்போ சொல்லுங்க என்றேன். அவர் ஆரம்பித்தார். எனக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டிருந்தது வேறு, கண்ணைத் திறக்கவே முடியவில்லை. இந்த ஆளை ஏன் இன்னேரத்தில் அழைத்தோம் என்று என்னையே கடிந்து கொண்டேன். நான் யார் என்று என்னைப் பற்றி நானே கூறிக் கொள்வது சரியாக இருக்காது என்றாலும், இங்கே அதைக் கூறுவது அவசியமாகிறது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு அழகான இளம் வாலிபன். நான் எப்போதும் மிகவும் கலகலப்பாக இருப்பேன், அதனால் என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நானும் அவர்களுக்குத் தாராளமாக டீ, சிகரெட், தண்ணி என்று செலவு செய்வேன். இதனால் என்ன பயன் என்கிறீர்களா, ஓசியில் ஏதாவது கிடைக்குமே என்று தினமும் அவர்கள் செய்யும் காரியங்கள்தான். அதெல்லாம் இங்கு சொல்லி மாளாது, சில சமயங்களில் நானே கண்கலங்கியிருக்கிறேன்.



இப்போது அவளைப்பற்றியும் சொல்லியாக வேண்டும். அவளை நான் பார்க்கும் வரை யாருக்கும், அவள் யாரென்றே தெரியாது. ஏனென்றால் அவள் வெகு சுமாராக பக்கத்து வீட்டுப் பெண் போலத்தான் இருப்பாள். கூட்டத்தில் நிற்பாளேயானால் தேடினாலும் அவளைக் கண்டுகொள்ள முடியாது. ஆனால் நான் அப்படி அல்ல. நேர்மாறானவன். ஆர்ப்பாட்டமானவன். நான் எங்கு சென்றாலும் ஒரு அதிர்வு இருக்கும். நான் நடந்து வரும் போது என் ஷூக்களில் இருந்து தீப்பொறி கிளம்புவதாக நண்பர்கள் கூறுவார்கள். சில நேரம் சுழல் காற்று அடிப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். என் கண்ணில் ஒருவித காந்த சக்தி வெளிப்படுவதாகக் கூட சில நண்பர்கள் சொல்வதுண்டு. ஒரு சமயம் நான் கல்லூரிக்குள் வந்தபோது அந்த சுழல் காற்று அதிகமாகி சாலையில் கிடந்த குப்பைகளை கல்லூரி முழுதும் பரப்பிவிட்டது. அதற்காக எங்கள் கல்லூரி முதல்வருக்கும், துப்புரவு தொழிளாருக்கும் ஒருநாள் முழுதும் தண்ணீர் விருந்து வைக்கவேண்டியது ஆகிவிட்டது. என் பார்வையில் இருக்கும் லேசர் கூர்மையைப் பார்த்து பலரும் வியந்துள்ளனர். ஒரு நாள் அப்படித்தான், ஒரு பெண்ணின் மோதிரம் கழன்று திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து விட்டது. எனது லேசர் பார்வையை வைத்தே அதைக் கண்டுபிடித்து, பின்பு அத்தொட்டிக்குள் இறங்கி அந்த மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன்.

இப்படி என்னுடைய பல திறமைகளைப் பார்த்தே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எந்தப் பேருந்தையும், டிரைனையும் நான் மிஸ் பண்ணியதே கிடையாது. ஒருமுறை நண்பர்களோடு சினிமாவிற்குச் செல்லும்போது, பேருந்தில் கால்சுண்டுவிரல் கூட வைக்க முடியாத அளவிற்குக் கூட்டம், அப்போது நான் செய்த டெக்னிக்கைப் பார்த்து கல்லூரியில் எனக்கு பெரிய ரசிகர் மன்றமே உருவாகிவிட்டது. என்ன செய்தேன் என்கிறீர்களா? பேருந்தில் ஏற முடியவில்லை என்றதும், பேருந்தின் வேகத்திலேயே அதனோடு ஓடி வந்து மூன்று ரூபாயை மிச்சப்படுத்தியதுடன், சரியான நேரத்தில் தியேட்டருக்கும் சென்றடைந்தேன்.

அதன் பின்பு நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று வாங்கி விட்டேன். அதை வைத்தே நிறைய பெண் நண்பர்களுடன் ஊர் சுற்றினேன். எல்லோரும் அது என் அப்பா வாங்கிக் கொடுத்தது என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது என் ஆருயிர் நண்பன் கொண்டித்தோப்பு குமார், மும்பையிலிருந்து எனக்காக லவட்டிக் கொண்டு வந்தது. அந்த பைக்கில் எப்போதும் பெண் நண்பர்களை மட்டுமே ஏற்றுவது என் வழக்கம். அவர்கள் எல்லோரும் என்கூட ஊர் சுற்ற, சினிமா பார்க்க விரும்புவார்கள். நானும் சென்று சினிமா, ஐஸ்க்ரீம் என்று எஞ்சாய் பண்ணுவதுண்டு. சிலநேரம் ஓட்டலுக்குப் போவோம். அப்போதெல்லாம் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டு மட்டையாகிவிடுவேன். இப்படி போய்க் கொண்டு இருந்த சமயத்தில் தான் அவளைப் பார்த்தேன்.

அவளை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. எப்படியாவது மடக்கிவிடலாம் என்று முயற்சி செய்ய ஆரம்பித்தேன். நண்பர்கள் வேறு நன்றாக ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்த்து என் நண்பன் ஒருவன் வெகுநாட்களாக ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் திடீர் தைரியம் வந்து காதலைச் சொல்லி செருப்படி வாங்கினான். அது வேறு அடிக்கடி ஞாபகம் வந்து என் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஒருமுறை லேப் கிளீன் பண்ணும் பெண்ணிடம் விளக்குமாற்று அடிவாங்கியிருந்தாலும் அதை யாருக்கும் தெரியாமல், அப்படியே பணம் கொடுத்து மறைத்து விட்டேன். அந்தப் பயம் வேறு. எனவே இப்பெணிற்கு நான் வழக்கமாகக் கையாளும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் டெக்னிக்கை பயன்படுத்த முடிவு செய்தேன்.


திடீரென்று ஒருநாள் என் நண்பனின் போன்கால், ரொம்ப அவசரமாக ரிஜிஸ்டர் ஆபீசுக்கு வரச் சொன்னான். சரி யாராவது பிரெண்டுக்குக் கடத்தல் கல்யாணமாக இருக்கும் என்று ஒரு கிளைமாக்ஸ் பைட்டிற்கு ஏற்ற மாதிரி லெதர் ஜாக்கெட், கிளவுஸ், தொப்பி எல்லாம் அணிந்து கொண்டு கிளம்பிப் போனேன். அங்கு பாத்தால் என் நண்பனுக்குத் தான் திருமணம். ஏன் முன்பே சொல்லவில்லை என்று திட்டினேன். அவன் அதற்கு அவங்க வீட்ல ப்ராப்ளம் அதான் என்றான். இவ்வளவு நாள் ஒண்ணா சுத்திட்டு இருந்துட்டு பாவி, எனக்கே தெரியாம லவ் பண்ணியிருக்கான். மச்சி நீயும் இப்படி லவ் பண்றேன்னே எனக்கு இப்பத்தாண்டா தெரியும், ஏண்டா இப்பிடிப் பண்ணே, அப்படின்னு கேட்டேன். அவன், மாப்ள உன்ன மாதிரி ஆளுகள பக்கத்துல வெச்சிக்கிட்டு எப்படிடா லவ் பண்ணமுடியும், நீதான் பொண்ணுக மனச கலைச்சி நாசம் பண்ணீடுவியேடா என்று மூஞ்ச்சியில் அடித்தால் போல் சொல்லிவிட்டான். எனக்கு ஒருமாதிரியாகப் போய் விட்டது. நல்லவேளை வேறு யாரும் பார்க்கவில்லை. சரி சரி டென்சனாகாத விடு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தம்மைப் பற்ற வைத்தேன்.


அப்போது ஆட்டோவில் ஒரு பெண் மணக்கோலத்தில் வந்து இறங்கினாள். யார் என்று பார்த்தால், அடிப்பாவி நீயா? அவள் என் காதலி, இவளையா நம் நண்பன் காதலித்து இருக்கிறான். ...எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அடக்க முடியவில்லை. பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று திரும்பி நின்று கொண்டு குலுங்கி குலுங்கி அழுதேன். கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டு அழுதேன். சே... இவர்கள் காதல் நமக்கு முன்பே தெரியாமல் போய் விட்டதே? தெரிந்திருந்தால் பேசியே அவர்களைக் கலைத்து அவளை நாம லவட்டிக் கொண்டு போயிருக்கலாமே.... சரி இனி அழுகக் கூடாது இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை, இவளை இப்போதே கடத்திச் சென்று கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தேன். திரும்பிப் பார்த்தால் யாரையும் காணோம். டேய் மச்சி எங்கேடா போனே? சீக்கிரம் வந்து கையெழுத்துப் போடுடா வெண்ணை....என்று அழைத்தது நண்பனின் குரல்...........!



திடுக்கிட்டு விழித்துப் பார்க்கிறேன்..... ......................!

...

...

இயக்குனர் பேரரசு ஆவேசமாக அடுத்த படத்திற்குக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்........!

...

...

...


டாக்டர் விஜயின் டைரிக் குறிப்பிலிருந்து......!



!

Monday, November 1, 2010

பிரபல பதிவர்களும் பிரச்சனைகளும்! வழிதான் என்ன?

பதிவர்கள் ஆயிட்டாலே பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்கள், அதிலும் பிரபல பதிவர்னா சொல்லவே வேணாம், கல்யாணம் காதுகுத்து எல்லாமே பிரச்சனைதான். பதிவர்கள்னாலே தியாகிகள்தானே, இதெல்லாம் அனுசரிச்சுக்கிட்டு போகவேண்டியதுதான் என்றாலும், அப்பிடியே விட்ற முடியுமா? இனிமே இந்த மாதிரி பிரச்சனை வராம எப்படி ஒரு பங்க்சன் நடத்துறதுன்னு நம்ம ஐடியா மணி அண்ணன் கிட்ட கேட்டோம், மனுசன் பிச்சி உதறிட்டாரு! உங்களுக்காக கீழே அதை கொடுத்திருக்கேன், பாத்து, படிச்சு, பக்குவமா நடந்துக்குங்க, ஆமா!




மொதல்ல இன்விட்டேசன்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுவோம், இன்விட்டேசன் அடிக்கும்போது, மறந்துடாம அதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு, யாரு காசு கொடுத்தா, பாக்கி எவ்வளவு இருக்கு எல்லாத்தையும் முன்பக்கத்துல போட்ருங்க (ஆமா பொண்ணு மாப்ள பேருக்கும் முன்னாடி தான் போடனும்)

அப்புறம் எல்லாத்தையும் கூப்பிடறதுதான் பெரிய வேல. இதுலதான் சிக்கலே இருக்கு. எல்லாரும் யார் யாரைக் கூப்புடனும்னு லிஸ்ட் தயார் பண்ணுவாங்க, ஆனா நீங்கதான் பிரபல பதிவராச்சே, அதுனால, நீங்க யார் யார கூப்புடக் கூடாதுன்னு லிஸ்ட் தயார் பண்ணனும். (கல்யாணத்தன்னிக்குக் கூட, நீங்க கூப்புடாத ஆளுக மண்டபத்துகுள்ள வராம பாத்துக்கிட ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியம்)

இனி துணி எடுக்கப் போவோமா? துணி வாங்கும்போது அதுல எதுலேயும் விலை ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர கிழிச்சிடாதீங்க. அப்படியே வெச்சுடுங்க. நடிகன் படத்துல கவுண்டரு, சத்யராஜ் பெரியப்ப பையன்னு சொல்லி பாக்க வருவாரே அந்த மாதிரி கல்யாண்த்தன்னிக்கு ட்ரெஸ்ஸ அப்பிடியே ஸ்டிக்கரோடவே போட்டுக்கனும். யாரும் எது என்ன விலைன்னு கேட்டு நம்மல தொந்தரவு பண்ண மாட்டாங்க, அப்பிடியே பாத்துக்கலாம்.


கல்யாண மண்டப வாடகை எவ்வளவு, சமையல் கான்ட்ராக்ட் எவ்வளவுன்னு ஸ்டேஜ் பேக்ரவுண்ட்ல பெரிய பேனர் பிரின்ட் பண்ணி வெச்சிடலாம். ஒரு சாப்பாட்டுக்கு குத்துமதிப்பா எவ்வளவு செலவு பண்ணியிருக்கீங்கன்னும் போட்டுட்டிங்கன்னா, மொய்யெழுதறவங்க அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுக்க வசதியா இருக்கும். மொய் நிறைய கொடுக்குறவங்கள கல்யாண மண்டப ஓனர்கிட்டயே கூட்டிட்டு போயி செலவு விபரம் சொல்லலாம். அதுக்கும் மேல அதிகமா மொய் கொடுத்தவங்கள, உக்கார வெச்சி, கல்யாணத்தோட மொத்த வரவு செலவு கணக்க தயார் பண்ணி ஒப்படைச்சிடலாம். அவங்க பாத்து சரின்னு சொன்னதுக்கப்புறம்தான் மண்டபத்த விட்டே வரனும்!

கல்யாணத்துக்கு வர்ர பிரபலபதிவர்கள் யாரும் மண்டபத்துக்குள்ள ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கவே கூடாதுன்னு சொல்லிடலாம். அதே மாதிரி யாரும் போட்டோ எடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பான உத்தரவு போட்ருங்க. நீங்க  எடுக்கும் போட்டோவையும் யாருக்கும் கொடுத்துடாதீங்க  (எந்திரன் படத்த விட கஷ்டமா இருக்கும் போலேயே?)

அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டரு, மறந்திட்டேன், பதிவரு சந்திப்புன்னு சொல்லிக்கிட்டு எவனாவது வந்தா மண்டபத்து பக்கம் இல்ல, அந்த தெரு பக்கமே விட்றாதீங்க. இது ரொம்ப முக்கியம் ஆமா!

கல்யாணம்  முடிஞ்சப்புறம் ஹனிமூன் அது இதுன்னு ஓடிடாதீங்க, பொறுமையா உக்காந்து, யாரெல்லாம் வந்ததாங்க, எப்பிடி சாப்புட்டாங்க, சாபாட்டு மெனு, லைட் மியூசிக்ல என்ன பாட்டு பாடுனாங்க,  மண்டபத்துல என்ன பெயின்ட் அடிச்சிருந்தாங்க, டாய்லெட்டுல என்ன கம்பெனி சிங்க் இருந்துச்சு, எவ்வளவு மொய் வந்துச்சு, டோட்டல் கணக்கு வழக்கு  விபரமா தயார் பண்ணி நீங்களே ஒரு பதிவா போட்ருங்க!

இதுக்கு மேலேயும் கல்யாணத்தப் பத்தி வேற ஏதாவது பதிவுப் பிரச்சனை வந்துடுச்சுன்னா, உடனடியா போயி கெஜட்ல இருந்தே உங்க டோட்டல் பேமிலி பேருகளையும் மாத்திடுங்க!

தத்துவக் குத்து:  தாத்தா சொல்றார், பதிவர்களே... ஓ... பதிவர்களே...! நீங்கள் என்னை எத்தனை முறை குமுறக் குமுறக் குதறினாலும், சளைக்கமாட்டேன், மீண்டும் மீண்டும் வாயைக் கொடுத்து அங்கமெல்லாம் புண்ணாகுவேன்!

பி.கு: இது நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப் பட்டது, ங்கொக்காமக்கா இங்கே வந்தும் ஏதாவது லொட்டு, லொசுக்குன்னு ஆரம்பிச்சீங்க்கன்னா, அப்புறம் நம்ம டீஆரு கட்சில சேத்து விட்டுருவேன் ஆமா....!


!