Tuesday, June 3, 2014

நேர்ந்து விடப்பட்ட சிலர்.....





பலவருடங்களுக்கு முன் ஒருவர் தனக்கு பிகர் இல்லையே என்று என்னிடம் வந்து மிகவும் வருத்தப்பட்டார். அது ஏன் அவர் என்னிடம் வந்து இப்படி வருத்தப்பட்டார் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவரை சேலம் வைத்தியரிடம் கூட்டிச் சென்று அங்கே கூடும் கூட்டத்தை காண்பித்து, பிகர் இருந்தும் அவதிப்படுபவர்கள் நிலையை உணர்த்தினேன். அந்த ஒரு சம்பவம் அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இன்று அவர் உலகின் மிகப்பெரிய சித்த வைத்திய நிபுணராகி பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துக் கொண்டிருக்கிறார். 

அந்த சம்பவத்தை பற்றி நெடுநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். பல அறிஞர்களுடன் அதை பற்றி விவாதித்திருக்கிறேன்.  மனித இனம் தழைத்தோங்க வேண்டும் பண்பாட்டு நுண்ணறிவு வளரவேண்டும் என்ற அறிவுத்திறன் கொண்டவர்கள் அந்த வைத்தியர்கள்தான். அவர்கள்தான் இன்று நாம் காணும் இந்த வளர்ச்சியை, எழுச்சியை உருவாக்கியவர்கள். மீதிப்பேர் லேகியம் என்ற பெயரில் மைதா மாவை விற்பவர்கள். வைத்திய தொழிலின் தொடர்ச்சியை நீட்டிப்பதைத் தவிர எந்த ஒரு பொறுப்பையும் அவர்கள் அளிக்கவில்லை.

25 வருடங்களுக்கு முன் ஒரு நாள் பறங்கிமலைஜோதி தியேட்டரில் இருந்துவெளியே வரும் போது அங்கே அடுத்த காட்சிக்காக நின்றிருந்த பெரும் கூட்டத்தைப் பார்த்து மன அதிர்ச்சி அடைந்தேன். அவர்கள் யாருக்குமே இந்தப்படத்தின் எந்த இடத்தில் நல்ல பிட்டு வரும் என்று தெரியாது. அவர்கள் யாரும் இதைப் பற்றியெல்லாம் யோசிப்பவர்கள் அல்ல. அவர்கள் கிடைக்கப் போவது பழைய லோக்கல் பிட்டே. அதை எண்ணியது பெரும் துக்கம் வந்து என் நெஞ்சை அடைத்தது. கண்களில் தானாக கண்ணீர் வந்துவிட்டது. 




மனிதர்கள் எல்லோரும் ஒரேமாதிரி கிடையாது. சிலருக்கு பலான புத்தகமே பிடிக்கிறது. சிலருக்கு அந்த வகைஎழுத்துக்களே வருகிறது. அவர்களின் நுண்ணுணர்வு அத்தகையது. இந்த வகை இலக்கியத்தை எழுதும் தகுதியும் பொறுப்பும் அவர்களுக்கே உண்டு. அவர்கள்  இந்த தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும். அதுதான் இயற்கை அவர்களுக்கு அளித்த நியதி. இத்தனை தியாகங்களோடு இவர்கள் எழுதும் புத்தகங்களை பாமரர்களும் படித்து சுவைத்து இன்புற்று மகிழ்வார்கள், ஆனால் இறுதிவரை எழுதியவர் யார் என்றே தெரியாமல் வாழ்வார்கள். அதுதான் மரபு.

ஆகவேதான் எனக்கு இந்த புத்தகங்களைப் படிக்க தோன்றுவதே இல்லை. ஏன் பலான புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று ஒருவர் கேட்ட போது என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டேன். நான் ஏன் வேலை செய்ய வேண்டும் என திரும்ப கேட்டார். குரூரமான கேள்வி என்று இப்போதும் தோன்றுகிறது. ஆனால் அதுதான் உண்மை. ஏனென்றால் அவர் வெட்டியாகத்தான் இருந்தார்.  

ஆம் இந்த புத்தகங்களை எல்லாம் படிக்கிறீர்கள் என்றால் இணையத்தில் கோடான கோடி  வாய்ப்புகள் இருக்கும் போது இதை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இலவசமாக இணைய தொடர்பு பெற்றவர், இப்புத்தகங்களை படிப்பது பெரிய அறியாமை. இயற்கை அவருக்களித்த வாய்ப்பை தட்டிக்கழிக்கும் மென் அவமதிப்பு. கையில் முறுக்கை வைத்துக் கொண்டு காராச்சேவை பொறுக்க முயலும் குழந்தைகளின் நிலை அது. இதெல்லாம் ஒரு மாபெரும் வாய்ப்புதான், ஆனால் அதை தவறவிடும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.  






நன்றி: ஃபேஸ்புக்,கூகில் இமேஜஸ்!