Thursday, July 25, 2013

கன்னி கணிணி அனுபவம்....





கன்னி கணிணி அனுபவம்னு ஒரு தொடர்பதிவு எழுதிக்கிட்டு வர்ராங்க. நம்மளைலாம் யாரும் கூப்புட மாட்டாங்க பட் அதுக்காக அப்படியே விட்ர முடியுமா? தன்கையே தனக்கு உதவவில்லை யெனில், முழங்கை கூட மதிக்காதுன்னு பாலமன் ஆப்பையாவே சொல்லி இருக்கறதால நானே என்னை கூப்டுக்கிட்டு நானே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

காலேஜ்ல படிச்சிட்டு இருந்த டைம். இண்டர்னெட் பிரபலமாகிட்டு இருந்துச்சு. கொஞ்சம் ப்ரீ டைம் கிடைச்சா போதும், ஆளாளுக்கு ஒரு பிகர தள்ளிக்கிட்டு போய்டுவானுங்க. நமக்கு போக்கிடமே இருக்காது. கேண்டீனுக்கு போனா எல்லா டேபிள்லயும் இவனுங்களே சிங்கிள் டீய வாங்கி வெச்சிக்கிட்டு ரெண்டு மணி நேரம் வறுப்பானுங்க, உக்காந்து வேடிக்க பார்க்க கூட இடம் கிடைக்காது, கிரவுண்ட் பக்கம் போனா வெட்டியா ஒரு பால், பேட்ட வெச்சிக்கிட்டு நாலு பேரு சீன் போட்டுட்டு இருப்பானுங்க. அவனுங்களும் வெளையாட மாட்டானுங்க அடுத்தவனையும் வெளையாட விடமாட்டானுங்க. அவனுங்களுக்கு சப்போர்ட் பண்றதுக்குன்னு தஸ்புஸ்னு பேசுற நாலு பிகருக அங்க நின்னுக்கிட்டு ஹாய்யா போயா வாயான்னு அலப்பற பண்ணிட்டு இருப்பாளுக.

வெளில போய் டீக்கடைலயாவது உக்காரலாம்னா அங்க காலேஜ் வாத்தியாருங்க தொல்லை. சரி மிச்சம் மீதி இருக்க அல்லகைஸ் எவனையாவது ரெடி பண்ணிட்டு தியேட்டர் பக்கம் போகலாம்னா, அவனுங்க பிட்டுப்படத்த தவிர வேற படம் பாக்க மாட்டோம்னுட்டானுங்க. நாமலும் ஒரே படத்த எத்தன வாட்டிதான் பாக்குறது? இப்படி நம்ம பொழப்பு லோல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. 

ஒருநா இந்த மாதிரியான ஒரு நேரத்துல என்ன பண்றதுன்னே தெரியாம லைப்ரரில தனியா உக்காந்து பெரிய பெரிய பொஸ்தகங்களை வெச்சி வெட்டி சீன் போட்டுட்டு இருந்தப்ப ஒரு சுமாரான ஜூனியர் பிகரு, பேரு சுதா,  பக்கத்துல வந்துச்சு. வந்து சுத்திமுத்தி பாத்துட்டு,

சார், வந்து.....

சொல்லு சுதா.. என்ன வேணும்?

அது வந்து, நீங்கதான் கம்ப்யூட்டர்ல பெரியாள்னு சொன்னாங்க ...

"!!!!!!!" ( எவனோ நம்ம பசங்கதான் சொல்லி இருக்கனும், நம்ம பசங்க எப்பவும் இந்த மாதிரி நல்ல விஷயம்லாம் பண்ண மாட்டானுங்களே, இதுல எதுவும் சதி இருக்குதா?) எவனாவது ஒளிஞ்சிருந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கானான்னு சுத்தி முத்தி பார்த்தேன்..... ஒரு பக்கியையும் கணோம்...

என்ன சார், யோசிக்கிறீங்க, நான் வேணா அப்புறம் வரவா?

...ம்ம் இல்ல இல்ல,. சொல்லு சுதா... ஏதாவது ப்ரோகிராம் இன்ஸ்டால் பண்ணனுமா?

இல்ல சார், பிரவுசிங் செண்டர் போய் ஈமெயில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?

ஆஹா டிக்கட்டு வாண்டடா வந்து வலைல விழுகுதே..... சரி வா போகலாம்னு பக்கத்துல இருந்த பிரவுசிங் செண்டருக்கு கூட்டிட்டு போனேன். 




அப்போ நெட்டு இருந்த ஸ்பீடுக்கு ஒரு ஈமெயில் செக் பண்ணவே அரை மணி நேரம் ஆகிடும். ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்றேன்னு ஆரம்பிச்சி வெச்சி கடலை வறுத்துட்டு இருந்தேன். கொஞ்ச நேரம் நல்லா போய்ட்டு இருந்துச்சு. அப்புறம்தான் கவனிச்சேன், அங்க ஒரு சூப்பர் பிகர் வேலைல இருக்குன்னு. இவ்ளோ பக்கத்துல இருக்கு, நமக்கு எப்படி தெரியாம போச்சுன்னு ஆச்சர்யமா இருந்துச்சு. அதை கூப்புடனும்னா சிஸ்டத்துல ஏதாவது ஹெல்ப் வேணும்னுதான் கூப்புட முடியும், நாமலோ பெரிய ஐடி அப்பாட்டக்கர் ரேஞ்சுக்கு ஈமெயில் அக்கவுண்ட் ஆரம்பிச்சிட்டு இருக்கோம், கடலை வேற நல்லா போய்ட்டு இருக்கு, இருக்கறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படனுமான்னு ஒரே யோசனை. பட் அதுக்காக இந்த பிகரையும் மிஸ் பண்ணவும் மனசில்ல.




கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு பிரண்டு ஒருத்தன், பிகர் விஷயத்துல கரை கண்டவன், கண்டிப்பா நல்ல ஐடியா கொடுப்பான்னு நம்பி அவனுக்கு கால் பண்ணேன்.  நம்புன மாதிரியே செமையா ஐடியா கொடுத்தான். மச்சி காலேஜ் பிகர் கிணத்து தண்ணி மாதிரி, எப்ப வேணா கடலை போட்டுக்கலாம். பிரவுசிங் செண்டர் பிகர் ஆத்துத்தண்ணி மாதிரி, சான்ஸ் கிடைக்கிறப்பவே கடலை வறுத்துடனும்னு தெளிவா சொல்லிட்டான். சரின்னு சொல்லி கொஞ்சம் ஸ்பீடா ஈமெயில் அக்கவுண்ட் கிரியேட் பண்ணிக் கொடுத்து காலேஜ் பிகரை சீக்கிரமே அனுப்பி வெச்சிட்டேன், அது போனதும் சும்மா ரெண்டு வெப்சைட்ட ஓப்பன் பண்ணி வெச்சிட்டு, பிரவுசிங் செண்டர் பிகரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டேன். ரொம்ப நேரமா கூப்புடாத ஆள் கூப்பிடுறாரேன்னு அதுவும் வேகமா பக்கத்துல வந்துச்சு, வந்து...,

என்னண்ணா... சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?




நன்றி: கூகிள் இமேஜஸ்!

Monday, July 22, 2013

தலைவா.... எனது பார்வையில்...!




எச்சரிக்கை: இது ஒரு முன் விமர்சனம்

ஓப்பனிங் சீன். சந்தானம், மனோபாலா மற்றும் பிற அல்லக்கைகள் எல்லாரும் எதற்கோ காத்திருகிறார்கள். அங்கே ஒரு புதியவர் வந்து பார்த்து எல்லாரும் காத்திருப்பதைப் பார்த்து திகைக்கிறார். ஏன் இப்படி காத்திருக்கீங்க ஏன்று திட்டுகிறார். அதற்கு சந்தானம் படத்துக்கு படம் பலவருசமா இப்படித்தான் பண்ணிட்டு இருக்கோம் உங்களுக்கு தெரியாதா. ஏன்யா சினிமா எதுவும் பாத்தது இல்லையா...? ஸ்ட்ரெயிட்டா சென்ட்ரல் ஜெயில்ல இருந்து வர்ரியான்னு எகிற,  மனோபாலா எல்லாத்தையும் மூடிட்டு உக்காந்து வேடிக்கை பாரு தெரியும்னு சொல்ல, எல்லாருக்கும் பல்ஸ் பதறுது. தங்கச்சி கேரக்டர்ஸ் ரெண்டு பேரு எங்கண்ணன் இப்ப வந்துடும், இப்ப வந்துடும்னு சொல்லி சொல்லி தாய்க்குலங்களை தவியா தவிக்க வெக்கிறாங்க.  திடீர்னு ஒரு சத்தம், நாலஞ்சு பேர் தலைவா வந்துட்டார் தலைவா வந்துட்டார்னு கத்திக்கிட்டே தலைதெறிக்க ஓடிவாராங்க. அந்த இடம் முழுதும் ஒரே பதட்டமும்  பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது.




அப்போ க்ளோசப்ல ஒரு வலது பக்க ஷூவ மட்டும் (காலோடுதான்யா) காட்டுறாங்க. அதுல நாலாபக்கமும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. இடது பக்க ஷூவையும் காட்டுறாங்க அதுலயும் நெருப்பு பொறி சிதறிட்டு இருக்கு. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கேமராவ மேல தூக்குறாங்க. டாகுடர் எதுக்குன்னே தெரியாம ஆக்ரோஷத்தோட வர்ராரு. முகத்துல இருந்தும் நெருப்பு பொறி அங்கங்க தெரிச்சு விழுது. பக்கத்துல வந்ததும் முகம் டக்குன்னு சாந்த்தமா மாறுது, உடனே க்ளோசப்ல காட்டுறாங்க. அப்படியே கைய மேல தூக்கி வணக்கம் வைக்கிறார் பாருங்க, சான்சே இல்ல, பட்டாசு கிளப்பும் சீன். பின்னால தலிவா... ச்சே தலைவா தலைவான்னு கோசம் வேற விண்ணை முட்டுது. பார்க்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது. இதுவரை எந்த படத்துலயும் வந்திராத ஓப்பனிங்  சீன்ன்னு கண்ணு, வாயி, மூக்குன்னு எல்லாத்தையும் மூடிட்டு சொல்லலாம். இப்படி ஒரு வழியா ஓப்பனிங் சீன்  முடிஞ்சு ஓப்பனிங் சாங் ஆரம்பிக்குது. சாங்னா சாங் அப்படி ஒரு சாங். விஜய் யார், என்ன செய்றாரு, என்ன செய்ய போறாரு, எப்படி செய்ய போறாரு, அவருடைய திறமை, புகழ், பெருமைன்னு எதையும் விட்டு வைக்காம நம்மளை திக்குமுக்காட வெக்கிறாங்க, ஒரே பாட்டுல இவ்ளோ விஷயத்தையும் எப்படி கொண்டுவந்தாங்கன்னு திகைப்பா இருக்கு. ஒண்டர்புல் ஜாப்.




குட்டிசுவத்து மேல டாக்டர் விஜய் தன் நண்பர்களோட உக்காந்து ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருக்கார். அப்போ சைடு வில்லன் & கோ குவாலிஸ், ஸ்கார்ப்பியோ சகிதமா கத்திக்கிட்டே தாறூமாறா வர்ராங்க. கைல அருவாள வேற வெச்சி சுத்திக்கிட்டே இருக்கானுங்க (அப்பதானே அவங்க அருவா வெச்சிருக்கறது நமக்கு தெரியும்?) நம்ம ஹீரோ & கோ அதை கண்டுக்காம அலட்சியமா அரட்டைல பிசியா இருக்காங்க. வில்லன் குரூப்ல இருந்து ஒரு வண்டி அவங்க பக்கத்துல நிக்குது, அதுல இருந்து கரடுமுரடா ஒருத்தன் இறங்கி நேரா இவங்கள நோக்கி வந்து பக்கத்துல வந்த உடனே விலகி  அருகிலேயே ஒண்ணுக்குப் போறான். அவன் இறங்கி வர்ரதும், ஒதுங்கி ஒண்ணுக்குப் போறதும் பரபரப்பின் உலகத்தரம். அதைப் பார்த்து நமக்கே கோவம் கோவமா வருது.

ஆனா டாக்டர் விஜய், அதையும் கண்டுக்காம அலட்சியமா ஒரு லுக் விட்டுட்டு அரட்டையை கண்டினியூ பண்ணுவது செம கெத்து சீன். அந்த கரடுமுரடு பார்ட்டி ஒண்ணுக்கடிக்கும் போது வேணும்னே ஹீரோ கோஷ்டியோட அல்லக்கை கால் மேல தெரிக்கிற மாதிரி அடிக்கிறான். அதை பார்த்ததும் விஜய் அவன் சட்டைய புடிச்சு இழுத்து ஏண்டா இப்படி பண்றே என்று கேக்கிறார். அதுக்கு அவன் ஒண்ணுக்கடிக்கிற இடத்துல உக்காந்திருந்தா மேல படத்தாண்டா செய்யும்னு சொல்றான். அதைக் கேட்டதும் விஜய் சூறாவளியா கெளம்பி வேட்டையாடுறாரு பாருங்க, சான்சே இல்ல. தமிழ் சினிமாவுல இப்படி ஒரு சண்டைய பாத்து எத்தன வருசமாச்சுய்யா. 

சண்டை போட்டு முடிஞ்சதும்தான் தெரியுது அந்த வில்லன் & கோ ஏதோ வில்லங்கமான வேலைக்காகத்தான் போய்ட்டு இருக்காங்கன்னு. அவங்களோட எல்லா கார்களையும்  நிறுத்தி பரபரன்னு செக் பண்றார். நமக்கும் திக் திக்னு இருக்கு. அதுல ஒரு கார்ல அமலா பால் கட்டி வைக்கப்பட்டிருக்கார். விஜய் உடனே அவரை விடுவிக்கிறார். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிறாங்க. உடனே நம்ம டாக்டர் வழக்கம் போல ஸ்டைலா வாய்க்குள்ள கோலிக்குண்டை குதப்புறார். அப்படியே செமத்தியா ஒரு டூயட் சாங்க். செம பீல் குட் எபக்ட்.




பாட்டு முடிஞ்சதும் டாக்டர் விஜயோட தேடுதல் வேட்டை ஆரம்பிக்குது. வில்லன் கும்பல்ல எல்லாரும், அடிக்கடி தேவையில்லாம அழுகுறாங்க. அதை நோட் பண்ணி, அவங்க கடத்துறது சாம்பார் வெங்காயம்தான்னு கண்டுபிடிப்பது சபாஷ் போட வைக்கிறது. அந்த வில்லன் கும்பல் சென்னைல இருந்துதான் சாம்பார் வெங்காயத்தை கடத்திட்டு வர்ராங்கன்னும் கண்டுபுடிக்கிறார். நண்பர்கள்லாம் இது ரொம்ப பெரிய இடம் வேணாம்னு சொல்லும் போது பதிலுக்கு அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகள் இனி பட்டிதொட்டியெங்கும் பேசப்படும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் உதவியுடன் சாம்பார் வெங்காயத்தை வைத்து வில்லன்  சாராயம் தயாரிக்க முயற்சிப்பதும், அதை டாக்டர் விஜய் அந்த விஞ்ஞானிகள் மூலமாகவே தடுப்பதும் செம ஹைடெக். இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ப எல்லாமே பேஸ்புக்கிலேயே நடப்பதாக காட்டி இருப்பது மிகவும் சுவராசியமாக இருக்கிறது.

சென்னைல உள்ள அவங்க நெட் ஒர்க்கை கண்டுபுடிச்சி மெயின் வில்லனை அழித்து ஒழிக்கறதுக்காக சென்னை கிளம்புறார். அவர் சென்னை செல்லும் அந்த பாட்டு சீன்கள் ஜோரா வந்திருக்கு. அமலா பாலும் சென்னைக்கு வருவது, அவரை வில்லன்கள் கடத்த முயற்சிப்பது எல்லாம் கிளாஸ்.  சென்னைல அவர் ஒவ்வொரு தாதாவா தனித்தனியா ஸ்கெட்ச் போட்டு, பஞ்ச் டயலாக் பேசி(யே)  போட்டுத்தள்ளும் சீன்கள் ஏ ஒன் ரகம். செம விருவிருப்பு. கடைசில அவர் மெயின் வில்லனை நேருக்கு நேரா சந்திச்சு கேள்விகள் கேக்குறது செம பஞ்ச். அவற்றை உலகில் உள்ள தாதாக்கள் அனைவரையும் கேக்க வைத்தால் அவர்கள் அனைவரும் அந்த நிமிடமே திருந்திவிடுவார்கள்.  அவ்வளவு கருத்துக்களும், தத்துவங்களும் அவற்றில் பொதிந்திருக்கின்றன.  சமூக ஆர்வலர்கள் முயற்சிக்கலாம்.

மொத்தத்தில் தலைவா பட்டாசு கிளப்புகிறான்.

நன்றி: கூகிள் இமேஜஸ்!