Monday, February 28, 2011

எனது (முதல்) காதலர் தினம்...









காதலர் தினத்தன்று என்ன நடந்ததுன்னு என் அனுபவத்தை பதிவு செய்யனும்னு மக்கள்லாம் கொஞ்ச நாளா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுறாங்க, குறிப்பா எப்போதும் முன்னணில இருக்கும் ஒரு பிரபல பதிவர், இதைப் பத்தி நான் எழுதியே ஆகனும்னு மிரட்டலே விடுத்திருக்கார். நான் வேற ரொம்ப பயந்த சுபாவம்கறதாலே வேற வழியே இல்லாம  அதை எழுத வேண்டியதாப் போச்சு. எந்த வருட காதலர் தினத்தைப் பத்தி எழுதனும்னு யாருமே சொல்லாததால, சில வருடங்களுக்கு முன்னாடி நடந்ததைப் பத்தி எழுதுறேன்.

மக்களே, இது உண்மையா நடந்த சம்பவம். சிரிப்பு போலீஸ் தலையில வேணா அடிச்சு சத்தியம் பண்றேன், பெயர்களைத் தவிர அனைத்துமே உண்மைங்க...!



அப்போ காதல் பண்ண ஆரம்பிச்சு கொஞ்சநாள் தான் ஆகியிருந்தது. நீண்ட முன்னோட்டத்திற்குப் பின் சந்தியாவும் நானும் காதலிக்க ஆரம்பித்து இருந்தோம். காதலர் தினத்திற்கு எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரி அரைநாள்தான். காலேஜ் முடிந்ததும் இருவரும் வெளிய செல்வதாகப் ப்ளான். காலேஜ் முடிந்ததும் எல்லோரும் ஒன்றாக வந்து பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தோம். செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லாத காலம், அதனால் எல்லாம் டைரக்ட் மெசேஜிங்தான்.


வீக்கென்டிற்கு மாணவர்கள் பலரும் சொந்த ஊருக்குச் செல்வார்கள், அதனால் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடையில் நாங்கள் மீட் பண்ணிக்கவே முடியவில்லை. சந்தியா, அவள் வகுப்புத் தோழிகளை ஊருக்கு அனுப்பி விட்டு, மத்தியப் பேருந்து நிலையத்தில் அவள் வழக்கமாக எனக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருப்பதாகக் கூறி இருந்தாள். அதனால் நான் தனியாகத்தான் மத்தியப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். என் நெருங்கிய நண்பர்கள் என்னை வழியனுப்ப (?) பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தார்கள். ஒரே கேலியும் கிண்டலுமாய் பஸ் வரும் வரை கலகலப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒருவழியாக ஸ்சில் ஏறி மத்தியப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அங்குதான் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்கும். தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் தான் எப்போதும் சந்தியா காத்திருப்பாள். இன்று ஒரு நாளாவது நான் காத்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டு அங்கே சென்றேன், சிறிது தூரம் போவதற்குள் திடீரென மாலதி என் முன்னால் வந்து நின்றாள். இவள் எங்கிருந்து வந்தாள்....? அவளும் ஊருக்குச் செல்லத் தயாராக பேகுடன் வந்திருந்தாள். என் முன்னாள் வந்து நின்று வள வளவென உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள். எனக்கு எங்கே சந்தியா வந்துவிடப் போகிறாள் என பயம் தொற்றிக் கொண்டது. கல்லூரியில் எல்லோருக்கும் மாலதியைப்பிடிக்கும், ஆனால் மாலதிக்கு என்னைப் பிடித்திருந்தது. 


மாலதி பேசி முடிப்பதாக இல்லை, நேரமாகிக் கொண்டிருந்தது. நான் திரும்பித் திரும்பி சந்தியா வந்துவிட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை சந்தியா இன்று வேறு பக்கத்தில் எங்கும் நின்று கொண்டிருக்கிறாளோ? இன்னும் காணோமே? 10 நிமிடத்திற்கு மேல் ஆகி விட்டிருந்தது.  மாலதி இன்னும் பேசிக்கொண்டு இருந்தாள். நானும் கிளம்பனும், போகனும், அவசரம் என பல்வேறுவிதமாக சொல்லியும், அஞ்சு நிமிசம் அஞ்சே நிமிசம் என்று நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். மறுபடியும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தால், சந்தியா அங்கே நின்று கொண்டு இருந்தாள். எனக்கு மூச்சே நின்றுவிட்டது. எங்களைப் பார்க்கிறாளா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

மாலதியிடம் கெஞ்ச ஆரம்பித்தேன், நான் கிளம்புகிறேன் என்று, அவள் விடுவதாக இல்லை. ஏதேதோ சொல்லி பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாளோ என்ற தோன்றியது. அப்போழுது அடுத்த சோதனையாக, என் வகுப்புத் தோழி ப்ரியா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.   எனக்கு மயக்கமே வந்துவிட்டது. சந்தியா சற்றுத் தொலைவில் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பதையும்,  அருகில் நானும் மாலதியும் பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்த ப்ரியா வேக வேகமாக எங்கள் அருகே வந்து கடும் கோபத்துடன் சே... இப்படியா பண்ணுவீங்க... என்று சொல்லிவிட்டு விடு விடுவென போய்விட்டாள். இதைப் பார்த்து மாலதியும் நானும் கெளம்பறேன் என்று மெல்ல நழுவினாள். நான் அவசரம் அவசரமாக சந்தியா நின்றிருந்த இடத்தை நோக்கினால், அங்கே அவளைக் காணவில்லை. திடுக்கென்று இருந்தது. என்னாச்சு, என்னைக் கடுப்பேற்ற எங்காவது மறைந்து நிற்கிறாளா என்று எல்லாப் பகுதியிலும் தேடினேன். எங்கும் காணவில்லை. ஒருவேளை ப்ரியாவும் அவளும் பேசிக்கொண்டிருக்கிறார்களோ என்று ப்ரியா சென்ற திசையில் சென்றேன்.

ப்ரியா அவள் ஊருக்கு செல்லும் பஸ்சில் அமர்ந்திருந்தாள். நான் உள்ளே ஏறிச் சென்று, சந்தியா வந்தாளா என்று கேட்டதுதான் தாமதம். பொறிந்து தள்ளிவிட்டாள். எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் சந்தியா எங்கே சென்றாள் என்று தெரியாது என்று கூறிவிட்டாள். வேறுவழியில்லாமல் பஸ்சில் இருந்து இறங்கி, ஒருவேளை சந்தியா வந்திருக்கக் கூடும் என்று பழைய இடத்திற்கே வந்தேன். எப்படியும் வருவாள் என்று அருகில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் கிட்டத்தட்ட 1 மணிநேரம் காத்திருந்தேன். மதியம் சாப்பிடவும் இல்லை. மிகுந்த சோர்வாக இருந்தது. உலகமே கைநழுவிப் போய்க் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். பின், ஒருவழியாக அங்கிருந்து கிளம்பிப் போனேன். பிரண்ட்ஸ் எல்லோரும்,  பன்னாடை ஒருத்தன் ரூமில் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அங்கே போய்ச் சேர்ந்தேன்..... 

இப்படியாக என் முதல் காதலர் தினம் முடிவுக்கு வந்தது.


உண்மையிலேயே இவ்வளவு தாங்க நடந்துச்சு............. நம்புங்க சார், நான் ரொம்ப நல்லவன் சத்தியமா...!

படங்களுக்கு நன்றி கூகிள் இமேஜஸ்
!

Thursday, February 17, 2011

ஒரு டாக்டரின் ரத்த சரித்திரம்...

கொஞ்ச நாளாவே நெறைய கெட்ட கனவுகள். என்னன்னே தெரியாம கொழம்பிக்கிட்டு இருந்தேன். அப்புறம் காரமடை ஜோசியரை புடிச்சி ஒரு டோஸ் விட்ட உடனே அவருதான் சின்ன டாகுடர பத்தி ரொம்ப நாளு எழுதல (?), அத உடனே எழுதிட்டா எல்லாம் சரியாயிடும்னு பரிகாரம் சொன்னாரு. இந்த நேரத்துல கரெக்டா நம்ம பிரபாகரன் வேற டாகுடரைப் பத்தி எழுதியே ஆகனும்னு ஒத்தக் கால்ல நின்னாரு (அட நின்னாருங்க...). சரின்னு நானும் களத்துல குதிச்சிட்டேன். எனவே வேற வழியே இல்ல, நீங்க இன்னொரு டாகுடரு பதிவ படிச்சுத்தான் ஆகனும் (சே.... ஒரு டாகுடரு பதிவு போட எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு?). டாகுடர் ரசிகர்கள் இத்தோட ஸ்டாப் பண்ணிட்டு வேற ஏதாவது ப்ளாக் பக்கமா போயிடுங்க சார். அப்புறம் உங்க இஷ்டம்...

பிரபாகரன் அழைத்திருந்த தொடர்பதிவின் சப்ஜக்ட் மாதிரியே நான் ஏற்கனவே எழுதி இருக்கறதால அதையே கொஞ்சம் பெண்டு நிமித்தி, டிங்கரிங் பண்ணி, பெயிண்டு அடிச்சு போட்டிருக்கேன்.

மொதல்ல நம்மாளுடைய சிறப்பம்சங்கள், அதாவது வேற எந்த நடிகர்கள் கிட்டேயும் காணமுடியாத அற்பமான... சீ.... அற்புதமான குணாதிசயங்கள் என்னென்னு ஒவ்வொண்ணா பாத்திடுவோம். இந்த விஷயங்கள் தான் அவரை இந்த இடத்தில் உக்கார வைத்திருகிறது என்றால் அது மிகையல்ல.

சிறப்பம்சங்கள்
1. வசனம்: (எலி புழுக்கை போடுற மாதிரியே(?) வசனம் பேசுறது....!)
டாகுடரு வசனம் பேசற அழகே தனி. மொத படத்துல இருந்து போனமாசம் வந்த காவலன் வர அதே வசனம், அதே ஸ்டைல். அடுத்த சூப்பர் ஸ்டாரா ஆகப்போறாருன்னு சின்னவயசுல இருந்தே நைனா கொடுத்துக்கிட்டு வர்ர ஹெவி ட்ரெயினிங்கால வந்த சிறப்பம்சம் இது. இப்போ வரைக்கும் இந்த மாதிரி டயலாக் டெலிவரி ஏரியாவுல டாகுடர அடிச்சுக்க ஆளே கெடையாதுங்கோ!
 
2. ஸ்டைல்: (எப்பவும் பைல்ஸ்(?) முத்திப் போன மாதிரியே நடக்குறது...!)
இந்த ஸ்டைல எப்போ கண்டுபுடிச்சாருன்னு தெரியல. ஆனா பலவருசமா இப்படித்தான் நடக்குறாரு நம்ம டாகுடரு. இதுலேயும் ரெண்டு வெரைட்டி (?)  வெச்சிருக்காரு, கோவம் வந்தா ஒரு நடை, அதுல தீப்பொறிலாம் வேற அப்படியே சிதறி ஓடும்... ( அத ஏற்கனவே வடிவேலு வேற நாறடிச்சிட்டாரு....),  அப்புறம் ரொமாண்டிக்கா ஒரு நடை.... பார்த்தா கழுத கூட வெக்கப்படும்... அப்படி ஒரு ஸ்டைலு.... ! எதுக்கும் நம்ம டாகுடரு, ஒரு பெரிய டாகுடர (கேப்டன் அல்ல) பாத்துக்கிட்டா நல்லது, அப்புறம் ’பின்’னாடி ப்ராப்ளம் வராதுல?
 
3. பஞ்ச் டயலாக்ஸ்:
பஞ்சரு ஆனாலும் வஞ்சகமில்லாம பஞ்ச் டயலாக் பேசுறது நம்ம டாகுடரோட தனி ஸ்பெசாலிட்டி! (நம்ம டாகுடரு தம்பி பேசுறதப் பாத்துப் பாத்து இப்ப கண்ட கண்ட பயலும் பேசுறாங்ய!) ஒண்ணா ரெண்டா, எத்தன டயலாக்கு, எத்தன படம்? எத விடுறது, எத சொல்றது? இருந்தாலும் உங்களுக்காக எனக்குப் புடிச்ச டயலாக்குகளை இங்கே வைக்கிறேன்.




4. டாகுடரின் இயக்குனர்கள்:
பேரரசு மாதிரி டைரக்டருக டாகுடருக்கு மட்டும் எங்கே இருந்துதான் கிடைப்பாய்ங்களோ? படத்துக்குப் படம் என்ன ஒரு முன்னேற்றம்? இந்த மாதிரி அரியவகை இயக்குனர்கள கண்டுபிடிச்சி கைதூக்கி விடுறது தமிழ்சினிமாவுக்கு நம்ம டாகுடர் செய்து வரும் நீண்ட கால சேவை! தப்பித் தவறி கூட நல்ல டைரக்டருங்க கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு நைனாவே செய்வினை வெச்சிக்கிட்டாரோ என்னமோ, டாகுடரை எந்த பெரிய டைரக்டரும் கூப்புடவே இல்ல. ஒரே ஒரு ஆளு அதாங்க, நம்ம டாகுடருக்கும் பெரிய டாகுடரு, ஒரே ஒரு கதைய வெச்சிக்கிட்டு மாத்தி மாத்தி எடுத்து எல்லாத்தையும் கேனயனாக்கிக்கிட்டு இருக்காரே ஷங்கரு, அவருக்கு என்ன ஆச்சோ தெரியல, 3 இடியட்ஸ் படத்த டாகுடர வெச்சி எடுக்கலாம்னு ரொம்ப முயற்சி பண்ணாரு. ஆரம்பத்துல எப்படியோ ஒத்துக்கிட்ட டாகுடரு கடைசில முடியாதுன்னுட்டாரு. ஒரு வேள  தனக்கு பஞ்ச் டயலாக் எழுதற அளவுக்கு ஷங்கருக்கு கெப்பாசிட்டி இல்லேன்னு டாகுடரு கண்டுபுடிச்சிட்டாரோ..!

5. கேரக்டர்:
கோவமே வராத அப்பாவிப் புள்ள மாதிரி நெஜ வாழ்க்கையிலும் நடிக்கிறது சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம்லனு டாகுடரு கொந்தளிக்கற வீடியோவ  கிட்டத்தட்ட எல்லொரும் பாத்திருப்பீங்க. டாகுடருக்கு ஏன் அந்த மாதிரி கோவம் வந்துச்சுன்னு ஒரு வீடீயோ கூட வந்திருக்கு, என்னுடைய ஆல்டைம் பேவரிட் வீடியோவான அதை இங்கே உங்களுக்கு டெடிகேட் பண்றேன்.



6. காமெடி: காமெடி பண்றேன்னு அடிக்கடி காமெடி பீசாகுறது...!
வசீகரான்னு ஒரு படம் வந்துச்சு, (அதுல சினேகா மட்டும் இல்லேன்னா ஷூட்டிங் ஸ்பாட்லேயே எல்லோரும் காறி துப்பி இருப்பாய்ங்க....), அந்தப் படத்தப் பார்த்துட்டு பலநாள் நடுராத்திரி எந்திரிச்சு அழுதிருக்கேன், அப்படி ஒரு படம், அப்படி ஒரு நடிப்பு. அந்தப் படத்தப் பார்த்துதான் காமெடிக்கு பின்னால எவ்வளவு ரிஸ்க் இருக்குன்னே உணர்ந்தேன். அப்புறம் ரசிகர்களால ஒரு அளவுக்கு மேல சிரிக்க முடியலேன்னு ஒரு நல்லெண்ணத்துல டாகுடரு காமெடிய கொஞ்சம் கொறச்சிக்கிட்டாருன்னு கேள்விப்பட்டேன்.

7. அரசியல்: அடுத்த மொதல்வர் திட்டம்!
நாலு பஞ்ச் டயலாக் பேசி படம் ஓடிருச்சுன்னா எல்லாப் பயலும் இத ஆரம்பிச்சுடுறானுகய்யா... கேப்டனும், சரத்தும் சீரழிஞ்சத பாத்தும் கொஞ்சம் கூட அசரலியே நம்ம டாகுடர் தம்பி? இதுல அவரு நைனா வேற வாய வெச்சிக்கிட்டு சும்மா இருக்காம பேட்டியா கொடுத்து மக்களை அலற வெக்கிறாரு. என்னைக் கேட்டா டாகுடரு அரசியலுக்கு வர்ரதுதான் நல்லது, ஒண்ணு சினிமாக்காரனுக கொஞ்சம் உருப்படுவானுக,  ரெண்டாவது அரசியல்ல குதிச்சா நாலு பேருகிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்குவாங்க டாகுடரும் நைனாவும்....!

எப்பூடி..... நம்ம டாகுடரோட சிறப்பம்சம்........ இதுக்கே நாக்கு தள்ளுதா? இன்னும் பிடிச்ச படங்கள், பாடல்கள்னு நெறைய இருக்கே? மனச தளரவிடாம  நல்லா மூச்ச இழுத்து விட்டு பாடிய கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு மேல படிங்க.

நம்ம சின்ன டாகுடருடைய திரைச்சித்திரங்களை ஆரம்ப காலங்கள்ல இருந்து பார்த்துட்டு(?) வரக்கூடியவன் என்ற தகுதியை (?) வெச்சு அவ்ருடைய பல படங்களையும் அலசி ஆராய்ந்து தான் லிஸ்ட்ட தயார் பண்ணி இருக்கேன். அதனால பதட்டப்படாம தைரியமா படிங்க...!

படங்கள்:
 
1. ஷாஜஹான்: தி கிரேட் கிளைமாக்ஸ்...!
ஷாஜஹான் படம் பாத்துட்டு நாட்ல இருக்க வெந்தது வேகாகது, எச்ச டீ குடிச்சது, கடஞ்சொல்லி பீடி அடிச்சது எல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சிடுச்சு, ஏன்னா டாகுடரு வந்து உசுர குடுப்பாராம்.... த்தூ...  படுவா, உண்மைக் காதல்னா உசுரக் கொடுப்பாராம்ல, இவருபாட்டுக்கு வில்லன்க கிட்ட இருந்து நம்மளை காப்பாத்திடுவாரு, அப்புறம் இவருகிட்ட இருந்து காப்பாத்தறது யாரு?
அப்புறம் இந்தப் பட கிளைமாக்ஸ்ல டாகுடரு கன்னத்துல அடிச்சிக்கிட்டே கதறி அழுகும் சீன் இருக்கே.... அதப்பாத்து தமிழ்நாடே சே... ஒலகமே கதறிடிச்சுங்ணா.... இந்த ஒரு சீனுக்காகவே டாகுடரை நாம எல்லோரும் சேர்ந்து மொதல்வராக்கி அழகு பாக்கோனும்!

2. சிவகாசி: தி தண்டர் ஓப்பனிங்...
சிவகாசி படத்துல டாகுடரு ஒரு ஷட்டரு போட்ட கடைக்குள்ள இருந்து அப்படியே வெல்டிங் பண்ணிட்டு வெளிய வருவாரு பாருங்க, அதுலேயும்  பிஞ்சு போன ஷட்டர் துண்டுக எகிறி விழுகும் சீன் இருக்கே ....... சான்சே இல்ல.... இப்படி ஒரு சீனைக் கற்பனை பண்ண டைரக்டர பாராட்டறதா, இல்ல இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்ச நம்ம டாகுடர பாராட்டறதா......  வெல்டன் டாகுடர்.....! ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட்னு எல்லா வுட்டுகளையும் ஒரே சீன்ல சாய்ச்சுட்டாரு நம்ம டாகுடர்னு எல்லோரையும் சொல்ல வெச்ச படம் இது...!




2. திருப்பாச்சி: பாசமலரின் ரத்தக்காவியம்
இந்தப் படத்துல சடையக் கட் பண்றது மாதிரி ரொம்ப திரில்லிங் சீன்ஸ்லாம் உண்டு. த்ரிசாவும், மல்லிகாவும் பெட் கட்டிக்கிட்டு டாகுடர கூப்புடும்போது நடந்து வருவாரே டியான் டியான்னு ஒரு நடை!  (இதுக்கு கெரகம், தமிழ்நாடு அரசு விருது வேற கெடச்சிருக்காம்.....!) நடையா அது.......கலக்கல்ங்ணா.......! ங்ணா..... இதுதான் உங்க நிஜ நடைங்ளாங்ணா? இப்படி ஒரு ராஜநடைய வெச்சிக்கிட்டு ஏனுங்ணா சும்மா பைல்ஸ் வந்த மாதிரியே நடந்து பீதிய கெளப்புறீங்க?)

3. ரசிகன்: தி மாமி(யார்) (ரி)டர்ன்ஸ்
இந்தப் படத்தப் புகழாத பத்திரிக்கை, டீவி, ரசிகர்கள், பதிவர்கள் யாருமே  இல்லே....!  அகில ஒலகத்தையே அதிர வெச்ச மாமியாருக்கு சோப்பு போடும் சீனுக்கு இணையா இப்போ மட்டுமில்ல, எப்பவுமே, ஏன் டாகுடரால கூட இனி எடுக்க முடியாது, அவ்வளவு பவர்புல் சீன் அது. டாகுடரோட நைனா கற்பனை வளத்தப் பாத்து புலவர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள்லாம் கதறி அழுத சீன்...!  இதுக்காகவே ரசிகன் படத்த ரிலீஸ் ஆகி ஓடுதுனதுக்கப்புறமும் 2-வது முறையா சென்சார் பண்ணாங்க, எப்பேர்ப்பட்ட சாதனை..... இனி யாராலேயாவது முடியுமா..?

4. துள்ளாத மனமும் துள்ளும்:
இந்தப் படத்துல லேடீஸ் பாத்ரூம் சுவத்தப் புடிச்சித் தொங்கிக்கிட்டே நம்ம தங்கத் தலைவி சிம்ரன் பாடுறத பாப்பாரே ஒரு சீன், மறக்க கூடிய சீனா அது? டாகுடரு வேற டூப்பு போடாம, உயிரைத் துச்சமா மதிச்சு ரெண்டு மணீ நேரமா செவத்துல தொங்கிக்கிட்டே நடிச்ச சீன்... ! ங்ணா......அந்த சீன்ல மூஞ்சில சாணிய அள்ளிப் அடிச்ச மாதிரியே ஒரு எக்ஸ்பிரசன் வெச்சிருப்பீங்களே... அது எனக்கு ரொம்பப் புடிக்கும்னா......

5. ப்ரண்ட்ஸ்:
தங்கச்சி பிரண்ட்ஸ்கிட்ட ல்தகா சைஆ இருக்கான்னு (கொஞ்ச நஞ்ச அலும்பா பண்ணி இருக்காய்ங்க?) கேட்டு மாட்டிக்கிட்டு வழிவாரே ஒரு வழிசல்....... அட அட அட அடடா... என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு எக்ஸ்பிரசன், ஒரே உணர்ச்சிக்குவியல்தான்..... அப்பிடியே அத அள்ளி ஸ்டில்லா போட்டு வெச்சிட்டா காலமெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம்...! கிளைமாக்ஸ்ல மொட்டை போட்ட மாதிரி தலைல என்னமோ பண்ணி வெச்சி (மொட்டைதான் போட்டுத் தொலையறது?) ஒரு மாதிரி உக்கார்ந்திருப்பாரே, என்ன ஒரு பயங்கரமான சீன்பா அது? அப்புறம் அவருக்கு நெனைவு வரும் பாருங்க, அதப் பாத்து வில்லன்கள்லாம் மெரள்றது நமக்கே திகிலா இருக்கும்.

6. குருவி: தி டெட்லி ஆக்சன்!
படத்துல ஒரு மொட்ட மாடில இருந்து ஜம்ப் (ஜம்ப்பா அது?) பண்ணி பறந்துக்கிட்டே.........................போய்ய்ய்யி........ ட்ரெயின புடிப்பாரே, அந்த சீனுதாங்க டாகுடரு இதுவர நடிச்ச சீன்கள்லேயே பெஸ்ட்டு. அதுலேயும் ட்ரெயின்ல ஏறுனதுக்கப்புறம், விரல சுத்தி ஏதோ பண்ணி அதுல இருந்து இண்டர்வல்னு வர வெப்பாரே, அதப் பாத்துட்டு மூணு நாளு சோறு தண்ணி திங்காம கக்கூசுல உக்காந்திருந்திருக்கேன், அப்படி ஒரு ஆழமான சீன் அது. இந்த ஒரு சீனுக்கே டாகுடருக்கு ஆஸ்கார், ரோப்கார், நோபல், டம்பிள், சொம்பு,  பீடி, பஞ்சுமுட்டாய், கடல உருண்டை எல்லாம் கொடுத்திருக்கனும், பட் எதிரிகளின் சதியால மிஸ்சாகிடுச்சு....

இருந்தாலும் பரவால்ல,  அந்த மயிர்க் கூச்செறியும் காட்சிய இங்கே உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.



பாடல்கள்

1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி... (ரசிகன்)

2. சிக்கன் கறி..சிக்கன் கறி... (செல்வா)

3. தொட்டபேட்டா ரோட்டுமேல முட்ட பரோட்டா... (விஷ்ணு)

4. அய்யய்யோ அலமேலு...ஆவின் பசும்பாலு.....(இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்) (தேவா)

5. கட்டிப்புடி கட்டிபுடிடா.... (பாட்டை ரேடியோவுல கூட கேக்க முடியலைடா சாமி!)

என்ன ஆச்சுன்னு தெரியல இப்பல்லாம் கொத்து பரோட்டா போடுறதில்ல டாகுடரு.... எல்லாம் நைனாவொட ஐடியாவா இருக்கும்.

சரி இவ்வளவு நேரமா பொறுமையா டாகுடரோட சாகசங்களை பத்தி படிச்சதுக்கு, உங்க எல்லாத்துக்கும் மௌண்ட் ரோட்ல செலையே வெக்கலாம், ஃப்யூட்சர்ல ஆச்சிய புடிச்சா முயற்சி பண்ணுறேன்....!

நன்றி கூகிள், யூட்யூப்...!





Monday, February 14, 2011

பன்னீஸ் டீவி: காதலர்தின சிறப்பு ஒளிபரப்பு...!

பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. சரி, வேற என்ன பண்றதுன்னு வந்துட்டேன்...!

ஊர்ல காதலர் தினம்  கொண்டாடுறாங்களோ இல்லையோ, தமிழ்ப் பதிவுலகத்துல நல்லாவே களை கட்டிருச்சு போல, எந்தப் பக்கம் திரும்புனாலும் கவிதை, அனுபவம்னு போட்டுல் கொல்றாய்ங்க... சரி விடுங்க, நம்ம பங்குக்கும் ஏதாவது செஞ்சிடுவோம், என்ன நான் சொல்றது?

************

நம்ம டெர்ரரு ரொம்ப நாளா துரத்திக்கிட்டு இருந்த அந்த பிலிப்பினோக்காரிக்கு இந்தக் காதலர் தினத்துக்காவது ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அசத்திடலாம்னு முடிவு பண்ணி, என்ன வேணும்னு அவகிட்டேயே கேட்டிருக்கார். அவ, எங்கிட்ட இருந்த டீவி ரிப்பேராயிடுச்சு, அதுனால எனக்கு ஒரு டீவி வாங்கிக் கொடுங்கன்னிருக்கா. இவரும் ஃபிகரு ஒர்க் அவுட் ஆயிடுச்சுன்னு, நெறைய ஷோரூம்களுக்கு அலைஞ்சி திரிஞ்சி கடைசில ஒரு டீவிய செலக்ட் பண்ணி வாங்கி கொடுத்திருக்கார். இப்போ அந்தப் பொண்ணு கோவிச்சுக்கிட்டு, நாட்டை விட்டே ஓடிப்போயிடுச்சாம், ஏன்னா அது டீவியே இல்ல, மைக்ரோவேவ் ஓவனாம்... என்னத்த சொல்ல?

************

நேத்து மங்குனி, சிரிப்பு போலீச பாக்கப் போயிருக்காரு, அப்போ

மங்குனி: டேய் நீ ஒரு கார் வங்கனும்னியே, என்ன பிராண்டு டிட்சைட் பண்ணி இருக்கே?

சிரிப்பு போலீஸ்: பிராண்ட் நேம் மறந்துடுச்சு மச்சி, ஆனா அது டீ-ல ஸ்டார்ட் ஆகும்...

மங்குனி: என்ன ஆச்சர்யம், எல்லாக் காரும் பெட்ரோல் இல்ல டீசல்ல தானே ஸ்டார்ட் ஆகும், அந்தக் காரு மட்டும் எப்படி டீல ஸ்டார்ட் ஆகுது? அப்போ காபில கூட ஸ்டார்ட் ஆகுமா?

சிரிப்பு போலீஸ்:  %&^(&*)(%^$^*&)(*

மங்குனி: ஏம்பா நீதான் டீல ஸ்டார்ட் ஆகும்னு சொன்னே, இப்போ இப்படி திட்டுறீயே? என்னமோ போங்கப்பா.....!

சிரிப்பு போலீஸ் இப்போ கார் வாங்கற ஐடியாவையே கைவிட்டுட்டார். இனி ஏதாவது டௌரியா வந்தாத்தான் உண்டாம்.

************

நம்ம செல்வா ரேடியோ ஜாக்கியா சேர்ந்து மொத நாளு, சிரிப்பு போலீஸ் போன் பண்ணி,

சிரிப்பு போலீஸ்: ஹலோ ரேடியோ டேசனா? நான் கீழ கெடந்து ஒரு பர்ஸ்ச எடுத்திருக்கேன், அதுல 5000 ரூவா, டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு எல்லாம் இருக்கு, அவர் டீடெயில்ஸ்,

பனங்காட்டு நரி என்ற தில்லுமுல்லு என்ற மணி
நம்பர் 24, 4-த் மெயின் ரோடு
ராசா காலனி,
கேகே நகர், சென்னை

செல்வா: அய்ய்ய்யயோ... கிரேட் சார் கிரேட்.. இந்தக் காலத்துலேயும் இவ்வளவு நேர்மையா இருக்கீங்களே... இப்போ எங்க நிலையத்துக்கு வந்து அதை ஒப்படைக்க போறீங்க அவ்வளவுதானே?

சிரிப்பு போலீஸ்: அட நீங்க வேற யோவ், மொதல்ல நான் சொல்றத கேளுங்க, அந்தப் பர்சை மிஸ் பண்ண நரிக்கு ’என் கதை முடியும் நேரமிது’ பாட்டை டெடிகேட் பண்ணனும், அதுக்குத்தான் ஃபோன் பண்ணுனேன், உடனே போடுங்க..... ஓகே பை டாட்டா...சீ யூ....

************

நம்ம வெங்கட், ஊர்ல பயங்கர புயல் மழை அடிச்சிட்டு இருக்கும் போது KFC-ல போயி பார்சல் ஆடர் பண்ணியிருக்காரு, பார்க்க ரொம்ப யங்கா இருக்காரேன்னு கடைக்காரன் கேட்டிருக்கான்,


சார், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

வெங்கட்: ஏம்பா, எங்கம்மா இந்த மாதிரி என்னைய புயல் மழைல சிக்கன் வாங்க அனுப்புவாங்கன்னு நெனைக்கிறியா?

************

வேலண்டைன்ஸ் டே ஸ்பெசல் கார்ட்டூன்ஸ்

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket



நம்மாளுங்க தண்ணி கெடைக்காம தாகம் எடுத்தே செத்தாலும் சாவாய்ங்களே தவிர, சில விஷயங்கள விடவே மாட்டாய்ங்க...





வேல கெடச்சிருச்சு.........................
மங்குனி அமைச்சருக்கு மாருதி கம்பேனில எப்படியோ வேல கெடச்ச மாதிரி நமக்கும் ஒரு எடத்துல இருந்து வேலைக்கு வரச் சொல்லி ஆடர் வந்திருக்கு,  தனியா போறதவிட யாராவது என்கூட சேர்ந்தீங்கன்னா நல்லாருக்குமேன்னு பாக்குறேன். இடம், சாப்பாடு, ட்ரான்ஸ்போர்ட் எல்லாமே ஃப்ரீ. சம்பளம் கொஞ்சம் கம்மிதான், ஆனா டிப்சே பல மடங்கு தேறுமாம். அப்படி என்ன வேலைன்னு கேக்குறீங்களா? அதை வெளக்கமா வெளக்கறதவிட படமாவே காட்டிடறேன். கொஞ்சம் கீழ பாருங்க,



என்ன இந்த ஜாப் ஓக்கேயா? நெறைய கெடைக்கும் சார், டிப்சு...... 


சரி மேட்டருக்கு வருவோம். பீ சீரியஸ். துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக ஒரு அருமையான பாடலை டெடிகேட் செய்கிறேன்.





பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!

நன்றி: யூ ட்யூப், மற்றும் படங்கள் தயாரித்த, அனுப்பிய நண்பர்கள்

Tuesday, February 1, 2011

ட்வீட்டர் #tnfisherman: இன்னும் எழுச்சி தேவை நண்பர்களே....!

?

நானும் அரசியல் பத்தி எழுத வேணாம்னு தான் ரொம்ப பொறுமையா இருந்தேன், முடியல சார், முடியல. 2-3 நாளா இவனுங்க வர்ர வரத்து தாங்க முடியல சார். பொதுமக்களை கூமுட்டைகள்னே கன்பர்ம் பண்ணிட்டானுங்க. இப்பவே இப்படின்னா தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன கேவலங்கள் நடக்கப் போகுதோ?

தமிழக மீனவர்கள் மேல் இலங்கை அத்துமீறல்... இதுவரை 539 பேர் கொல்லப்பட்டிருக்காங்க. 10 வருசத்துக்கு மேல நடந்துக்கிட்டு இருக்கு. டெல்லிக்குப் போன நம்ம முதல்வர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? ”மீனவர் பிரச்சனை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது, அவரிடம் எடுத்து சொல்லியிருகிறோம்” என்ன கொடும சார் இது?  தன் நாட்டின் குடிமக்களை வெளிநாட்டு கடற்படை கொன்று குவிக்கிறது,  அதைப் பற்றி ஒரு நாட்டோட பிரதமருக்கு அவ்வளவாக தெரியாதாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதைவிட ஒரு கேவலம் கிடையவே கிடையாது! நம் முதல்வர் என்ன நினைப்பில் அப்படி சொல்லியிருக்காருன்னே தெரியல.

ஒரு நாட்டின் பிரதமருக்கு இதெல்லாம் தெரியாது என்று கலைஞர் எப்படி முடிவு செய்தார்?  மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? இல்லை பிரதமரே எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டாரா? இப்படி ஒரு பிரதமர், முதலமைச்சர் இருந்தால்......இந்த  நாடு........ ?

எனக்கு அப்பவே டவுட்டு, என்ன வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தான் இலங்கை போறதா சொல்லிட்டாங்களே, இவரு எதுக்கு அதுக்கப்புறமும் டெல்லி போறாருன்னு! பார்த்தா கூட்டணி பேச்சு வார்த்தையாம். அதானே தலைவரு எங்கே அனுப்பிச்ச கடிதம் கெடச்சிருச்சான்னு கேக்க போறாரோன்னு நெனச்சுட்டேன். இதுக்கிடையில நம்ம மருத்துவர் அய்யா வேற மக்களோட நகைச்சுவை உணர்வோடு விளையாடுகிறார். அய்யா, நீங்கள்  எதையும் கண்டு கொள்ளாமல் உங்கள் நகைச்சுவையை தொடருங்கள், பல பிரச்சனைகளில் சிக்கிச் சீரழியும் மக்களுக்கு அதாவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கட்டுமே?

இந்த அரசியல் வியாதிகளுக்கும் அவர்கள் அல்லக்கைகளுக்கும் மீனவர் பிரச்சனையை விட தேர்தல்ல யாருக்கு எத்தனை சீட்டுங்கறதுதான் இப்போ முக்கிய விஷயமா இருக்கு. இப்படியே போனால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று உணர்த்தப்பட வேண்டும். நிருபமா ராவ் இலங்கையில் இருந்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்காங்க, அதாவது இரு நாடுகளின் கூட்டுக் குழு விரைவில் கூடி ஆலோசனை நடத்துமாம்.  ஏண் அந்தக் கருமத்த இப்பவே பேசித் தொலைச்சா என்ன? மூணு மாசத்துல தேர்தல் வர்ரதுனால அதுவரைக்கும் இப்படியே சமாளிச்சுட்டு அப்புறம் அப்படியே பழையபடி விட்டுட போறாங்க. அதுக்குத்தான் இந்த பம்மாத்து. அதற்கு இடம் தரக்கூடாது. நிரந்தர தீர்வு வர்ர வரை தொடர்ந்து அழுத்தம் தரப்பட வேண்டும் நண்பர்களே!

இணைய வழியாக போராட்டத்தை முன்னெடுக்கும் நண்பர்களை பாராட்டவும் நன்றி சொல்லவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். அதே நேரம் இது போதாது, இன்னும் நிறையப் பேர் வர வேண்டும். ட்விட்டர் தளத்தில் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் எழுச்சி மகத்தானது. ஆனால் இன்னும் #tnfisherman ட்விட்டர் ட்ரெண்ட்சில் முதலிடத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்த நிறைய நண்பர்களுக்கு இன்னும் ட்விட்டர் அக்கவுண்டே இல்லை (நானும் 4 நாட்கள் முன்புதான் தொடங்கினேன்). அவர்கள் இன்னும் தயங்கிக் கொண்டிருக்காமல் உடனே ட்விட்டரில் இறங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். டிவீட்டரும் ஃபேஸ்புக், ஆர்க்குட் போல ஒரு சோசியல் நெட்வொர்ர்கிங் தளம்தான். இருப்பதிலேயே பயன்படுத்த மிக சுலபமானது. ஒருவேளை தெரியவில்லை என்றால் கூச்சப்படாமல் கேளுங்கள். உங்கள் ட்வீட்டுகளால் பெரும் மாற்றத்தை உருவாக்க ஒரு அரிய வாய்ப்பு நெருங்கி வந்து கொண்டிருகிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
 
ட்விட்டரில் அப்படி என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு, நண்பர்களே, ட்விட்டரில் அதிகம் கமெண்ட் செய்யப்பட்ட விஷயம் உலக மீடியாக்களின் கவனத்தை பெறும். குறைந்தபடசம் இந்திய மீடியாக்களின் கவனைத்தையாவது பெறலாம். மேலும், இப்போதைக்கு இதுவே சுலபமான வழி. நீங்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியதில்லை, போலீஸ் பயமில்லை, நீங்கள் யாரென்று கூட காட்டிக் கொள்ள வேண்டியதில்லை, சும்மா ட்விட்டரில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து ஒரு கமெண்ட் அடித்து அத்தோடு #tnfisherman என்பதையும் பேஸ்ட் செய்து அனுப்பிவிட வேண்டியதுதான் (140 எழுத்துக்களுக்குள் இருக்க வேண்டும்).  #tnfisherman என்று பேஸ்ட் செய்துவிட்டால், உங்கள் கமெண்ட்டுகள் #tnfisherman  அக்கவுண்டிற்கு சென்று விடும்.
 
இதுவரை 17000 கமெண்ட்டிற்கு மேல் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். வெறும் தமிழ் பதிவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பார்த்தாலே இது மிக மிக குறைவு. தமிழ்மணத்தில் மட்டும் ஒரு நாளில் எழுதப்படும் பதிவுகள் 400, கமெண்ட்டுகள் 6000. இப்போது புரிகிறதா நாம் எங்கு இருக்கிறோம் என்று? ஆகவே நண்பர்களே உங்கள் அனைவரின் தொடர் ஆதரவும் தொடர்ந்து தேவைப்படுகிறது. தினமும் ஆளுக்கு 10 ட்வீட்களாவது #tnfisherman  க்கு செய்யுங்கள். அடுத்தவர் கமெண்ட்டை ரீட்வீட் செய்தாலும் சரி, இல்லை காப்பி பேஸ்ட்டாவது செய்யுங்கள், என்னுடைய #tnfisherman ட்வீட்டுகள் அனைத்தையும் யாரும் #tnfisherman க்காக பயன்படுத்திக்கொள்ளலாம்!


என் ட்வீட்டர் ஐடி: pannikkuttir

!