?
நானும் அரசியல் பத்தி எழுத வேணாம்னு தான் ரொம்ப பொறுமையா இருந்தேன், முடியல சார், முடியல. 2-3 நாளா இவனுங்க வர்ர வரத்து தாங்க முடியல சார். பொதுமக்களை கூமுட்டைகள்னே கன்பர்ம் பண்ணிட்டானுங்க. இப்பவே இப்படின்னா தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன கேவலங்கள் நடக்கப் போகுதோ?
தமிழக மீனவர்கள் மேல் இலங்கை அத்துமீறல்... இதுவரை 539 பேர் கொல்லப்பட்டிருக்காங்க. 10 வருசத்துக்கு மேல நடந்துக்கிட்டு இருக்கு. டெல்லிக்குப் போன நம்ம முதல்வர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? ”மீனவர் பிரச்சனை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது, அவரிடம் எடுத்து சொல்லியிருகிறோம்” என்ன கொடும சார் இது? தன் நாட்டின் குடிமக்களை வெளிநாட்டு கடற்படை கொன்று குவிக்கிறது, அதைப் பற்றி ஒரு நாட்டோட பிரதமருக்கு அவ்வளவாக தெரியாதாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதைவிட ஒரு கேவலம் கிடையவே கிடையாது! நம் முதல்வர் என்ன நினைப்பில் அப்படி சொல்லியிருக்காருன்னே தெரியல.
ஒரு நாட்டின் பிரதமருக்கு இதெல்லாம் தெரியாது என்று கலைஞர் எப்படி முடிவு செய்தார்? மக்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? இல்லை பிரதமரே எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டாரா? இப்படி ஒரு பிரதமர், முதலமைச்சர் இருந்தால்......இந்த நாடு........ ?
எனக்கு அப்பவே டவுட்டு, என்ன வெளியுறவு செயலர் நிருபமா ராவ் தான் இலங்கை போறதா சொல்லிட்டாங்களே, இவரு எதுக்கு அதுக்கப்புறமும் டெல்லி போறாருன்னு! பார்த்தா கூட்டணி பேச்சு வார்த்தையாம். அதானே தலைவரு எங்கே அனுப்பிச்ச கடிதம் கெடச்சிருச்சான்னு கேக்க போறாரோன்னு நெனச்சுட்டேன். இதுக்கிடையில நம்ம மருத்துவர் அய்யா வேற மக்களோட நகைச்சுவை உணர்வோடு விளையாடுகிறார். அய்யா, நீங்கள் எதையும் கண்டு கொள்ளாமல் உங்கள் நகைச்சுவையை தொடருங்கள், பல பிரச்சனைகளில் சிக்கிச் சீரழியும் மக்களுக்கு அதாவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கட்டுமே?
இந்த அரசியல் வியாதிகளுக்கும் அவர்கள் அல்லக்கைகளுக்கும் மீனவர் பிரச்சனையை விட தேர்தல்ல யாருக்கு எத்தனை சீட்டுங்கறதுதான் இப்போ முக்கிய விஷயமா இருக்கு. இப்படியே போனால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று உணர்த்தப்பட வேண்டும். நிருபமா ராவ் இலங்கையில் இருந்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்காங்க, அதாவது இரு நாடுகளின் கூட்டுக் குழு விரைவில் கூடி ஆலோசனை நடத்துமாம். ஏண் அந்தக் கருமத்த இப்பவே பேசித் தொலைச்சா என்ன? மூணு மாசத்துல தேர்தல் வர்ரதுனால அதுவரைக்கும் இப்படியே சமாளிச்சுட்டு அப்புறம் அப்படியே பழையபடி விட்டுட போறாங்க. அதுக்குத்தான் இந்த பம்மாத்து. அதற்கு இடம் தரக்கூடாது. நிரந்தர தீர்வு வர்ர வரை தொடர்ந்து அழுத்தம் தரப்பட வேண்டும் நண்பர்களே!
இணைய வழியாக போராட்டத்தை முன்னெடுக்கும் நண்பர்களை பாராட்டவும் நன்றி சொல்லவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன். அதே நேரம் இது போதாது, இன்னும் நிறையப் பேர் வர வேண்டும். ட்விட்டர் தளத்தில் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் எழுச்சி மகத்தானது. ஆனால் இன்னும் #tnfisherman ட்விட்டர் ட்ரெண்ட்சில் முதலிடத்திற்கு வரவில்லை. எனக்கு தெரிந்த நிறைய நண்பர்களுக்கு இன்னும் ட்விட்டர் அக்கவுண்டே இல்லை (நானும் 4 நாட்கள் முன்புதான் தொடங்கினேன்). அவர்கள் இன்னும் தயங்கிக் கொண்டிருக்காமல் உடனே ட்விட்டரில் இறங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். டிவீட்டரும் ஃபேஸ்புக், ஆர்க்குட் போல ஒரு சோசியல் நெட்வொர்ர்கிங் தளம்தான். இருப்பதிலேயே பயன்படுத்த மிக சுலபமானது. ஒருவேளை தெரியவில்லை என்றால் கூச்சப்படாமல் கேளுங்கள். உங்கள் ட்வீட்டுகளால் பெரும் மாற்றத்தை உருவாக்க ஒரு அரிய வாய்ப்பு நெருங்கி வந்து கொண்டிருகிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
ட்விட்டரில் அப்படி என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு, நண்பர்களே, ட்விட்டரில் அதிகம் கமெண்ட் செய்யப்பட்ட விஷயம் உலக மீடியாக்களின் கவனத்தை பெறும். குறைந்தபடசம் இந்திய மீடியாக்களின் கவனைத்தையாவது பெறலாம். மேலும், இப்போதைக்கு இதுவே சுலபமான வழி. நீங்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியதில்லை, போலீஸ் பயமில்லை, நீங்கள் யாரென்று கூட காட்டிக் கொள்ள வேண்டியதில்லை, சும்மா ட்விட்டரில் ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து ஒரு கமெண்ட் அடித்து அத்தோடு #tnfisherman என்பதையும் பேஸ்ட் செய்து அனுப்பிவிட வேண்டியதுதான் (140 எழுத்துக்களுக்குள் இருக்க வேண்டும்). #tnfisherman என்று பேஸ்ட் செய்துவிட்டால், உங்கள் கமெண்ட்டுகள் #tnfisherman அக்கவுண்டிற்கு சென்று விடும்.
இதுவரை 17000 கமெண்ட்டிற்கு மேல் வந்துவிட்டதாக சொல்கிறார்கள். வெறும் தமிழ் பதிவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துப் பார்த்தாலே இது மிக மிக குறைவு. தமிழ்மணத்தில் மட்டும் ஒரு நாளில் எழுதப்படும் பதிவுகள் 400, கமெண்ட்டுகள் 6000. இப்போது புரிகிறதா நாம் எங்கு இருக்கிறோம் என்று? ஆகவே நண்பர்களே உங்கள் அனைவரின் தொடர் ஆதரவும் தொடர்ந்து தேவைப்படுகிறது. தினமும் ஆளுக்கு 10 ட்வீட்களாவது #tnfisherman க்கு செய்யுங்கள். அடுத்தவர் கமெண்ட்டை ரீட்வீட் செய்தாலும் சரி, இல்லை காப்பி பேஸ்ட்டாவது செய்யுங்கள், என்னுடைய #tnfisherman ட்வீட்டுகள் அனைத்தையும் யாரும் #tnfisherman க்காக பயன்படுத்திக்கொள்ளலாம்!
என் ட்வீட்டர் ஐடி: pannikkuttir
!
