Tuesday, May 28, 2013

நானும் எனது வாசகரும்.....



என்னுடைய தீவிர (?) வாசகர் ஒருவர் என்னை பார்க்க வேண்டும் என்று நெடுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் கேட்பதற்காகவே நிறைய கேள்விகளை தயாரித்து வைத்திருப்பதாக வேறு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் அவர் ஊர் பக்கமாக வேலை இருந்தது. அந்த ஊர்ப்பக்கம் சாப்பாடு நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லுவார்கள். அன்று மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வருகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். எல்லாம் திட்டமிட்டபடி சரியாகவே நடந்தது. சரியாக 1 மணிக்கு சென்று விட்டேன். அப்போதுதானே கண்டதையும் பேசாமல் உடனே சாப்பிட முடியும்? முகவரியை கண்டுபிடித்து அவர் வீட்டிற்கு சென்றேன். அங்கே வீட்டு வாசலில் அசிங்கமான பன்னாடை ஒருவன் வழியை மறித்தபடி நின்று கொண்டிருந்தான். எனக்கு கோபம் வந்து விட்டது. ராஸ்கல் ஒரு எழுத்தாளன் வரும் வழியில் நிற்பதா என்று ஓங்கி ஒரு அப்பு விட்டேன். அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை போல, அதிர்ச்சியுடன் என்னை முறைத்து பார்த்தபடி நின்றான். போடா என்று குச்சியை எடுத்து அடித்து விரட்டினேன். ஒருவழியாக தயக்கத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான். 

வீட்டிற்குள் நுழைந்தேன். யாரையும் காணவில்லை. அங்கே ஒரு விருந்து சாப்பாடு நடக்க இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வியப்பாக இருந்தது. ஏதாவது அறைகளுக்குள் யாரும் இருப்பார்கள் என்று எண்ணி குரல் கொடுத்தேன். ஒரு தாட்டியான பெண்மணி வெளியே எட்டிப்பார்த்தார். யார் நீங்க என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான், நான் பெரிய எழுத்தாளர், மதியம் விருந்திற்காக வந்திருக்கிறேன் என்றேன். உடனே அந்த பெண்மணி அப்படி யாரையும் எங்களுக்கு தெரியாதே, எழுத்தாளர்னா நீங்க பத்திரம் எழுதுறவரா என்று கேட்டார். எனக்கு இதில் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் எனது வாசகர்கள் தங்கள் மனைவிக்குத் தெரியாமல் தான் எப்போழுதும் என் எழுத்தை படிப்பார்கள். நானும் அவரிடம் நான் அந்த எழுத்தாளர் இல்லைங்க  வலைப்பதிவு எழுத்தாளர் என்றேன்.

குழப்பத்துடன் அப்படியா என்று கேட்டு விட்டு உள்ளே போய்விட்டார். சற்று நேரம் கழிந்தது. வெளிப்புறமாக கதவுகள் சாத்தப்படும் சத்தம் கேட்டது. ஓடிச் சென்று பார்த்தேன். அதற்குள் அனைத்து கதவு, ஜன்னல்களும் பூட்டப்பட்டு விட்டன. என்ன நடக்கின்றது என்றே எனக்கு புரியவில்லை. மறுபடியும் குரல் கொடுத்தேன். ஒருவேளை அந்த தாட்டியான பெண்மணிக்கு நம்மை பிடித்து போய் விட்டதோ என்ற கிளுகிளுப்பும் வந்து போக தவறவில்லை. அப்படியே மெய்மறந்து நின்ற போது திடீரென பின்புறமாக வந்து யாரோ பிடித்தார்கள். இரும்புப்பிடியாக இருந்தது, ஒரு வினாடி அது அந்த தாட்டியாக இருக்குமோ என்று தாமதித்தேன். அதற்குள் பிடி இறுகியது. இது அந்த தாட்டியாக இருக்க வாய்ப்பில்லை. கத்தினேன். என்னவென்று பார்ப்பதற்குள் பின்மண்டையில் அடிவிழுந்தது. கண்விழித்துப் பார்த்தால் லாக்கப்பிற்குள் இருக்கிறேன். 



என்ன நடந்தது என்று அருகில் இருந்த சக கைதி சொன்னார். திருடன் என்று எண்ணி என்னை பிடித்து வைத்திருக்கிறார்களாம். ஒரு எழுத்தாளனுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்கள்? எனது வாசகர்கள் பலர் அந்த ஊர்ப்பக்கம்தான், எனவே யாரும் அங்கே இருப்பார்களோ என்று அங்கிருந்த லாக்கப்புகளில் உத்துப் பார்த்தேன். யாரும் இல்லை என்று வருத்தமாக இருந்தது. நமது வாசகர்களுக்கு இன்னும் பயிற்சி போதாது போல. ஒருவேளை இந்த ஏட்டு நம் வாசகராக இருக்க போகிறார் என்று சார் நீங்க ஃபேஸ்புக் பார்ப்பீங்களா என்று கேட்டேன். பளார் என்று அறை விழுந்தது கெட்ட வார்த்தைகளுடன். அவ்வளவுதான் ஃபேஸ்புக்கிற்கே இந்த அடி இனி எழுத்தாளன் என்று சொன்னால் விடிய விடிய லாடம் கட்டிவிடுவார்கள் என்று மூடிக்கொண்டேன் எல்லாவற்றையும். 

அந்த சக கைதி வந்து வாஞ்சையாக தட்டி கொடுத்தான். நீங்க எழுத்தாளரா என்று கேட்டான். எழுத்தாளனை மதிக்க ஒருவனாவது இங்கே இருக்கிறான் என்று நிம்மதியாக இருந்தது. ஆமாம் என்றேன். அதற்கு அவன் நானும் எழுத்தாளன் தான், எழுதுபவர்களுக்கு இது கெட்ட நேரம் என்றான். தமிழ்நாட்டில் எனக்குத் தெரியாமல் ஒரு எழுத்தாளரா என்று எனக்கு வியப்பாக போய்விட்டது. அவனிடமே கேட்டேன். அவன் பெண் ஐடியில் ஃபேஸ்புக்கில் எழுதுபவனாம். அவனை காதலிப்பதாக கூறி சிலர் அவர்களாக அவனுக்கு பணம் அனுப்பினார்களாம், அதனால் அவனை கைது செய்துவிட்டார்கள் என்று கூறினான். வருத்தமாக இருந்தது. எழுதுபவனுக்கும் சுதந்திரமில்லை, காதலிப்பவனுக்கும் சுதந்திரமில்லை. 

அப்போது ஒருவனை அடித்து உதைத்து இழுத்து வந்தார்கள். அவன் முகம் எங்கோ பார்த்த முகமாக இருந்தது. அடேய் அவன் இன்று என்னிடம் அறை வாங்கிய அந்த பன்னாடை அல்லவா? அவனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பஸ்ஸ்டாண்டில் பிச்சை எடுக்கும் சாக்கில் பிக்பாக்கெட் அடித்ததாக சொன்னார்கள். அடப்பாவி அப்போ அவனுக்கு பதிலாகத்தான் என்னை பிடித்துக் கொண்டு வந்தார்களா? சரிதான், உண்மையை விளக்கமாக எடுத்துச் சொல்லி எளிதாக வெளியே வந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டேன். 

அதற்குள் அவன் என்னருகில் வந்தான். நான் தான்யா உன்னை வர சொன்ன ஆளு. மதியம் சாப்பாடு வாங்கி கொடுப்பேன்னுதானேயா உன்னை அங்கே வரச்சொல்லி வெயிட் பண்ணேன், நீ பாட்டுக்கு அடிச்சி தெரத்திட்டு ஜெயிலுக்கு வந்துட்டே? அதான் பிக்பாக்கெட் அடிச்சு, நானும் இங்க வர வேண்டியதா போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்துதான் அடிச்சோம்னு சொல்லிடுறேன்,செண்ட்ரல் ஜெயில்ல ரெண்டு மாசம் போடுவாங்க, உள்ளே போய் நிம்மதியா இலக்கிய விவாதம் பண்ணலாம், நான் உன்கிட்ட நிறைய கேள்விகள் கேட்க வேண்டி இருக்கு என்றான். எனக்கு தலை சுற்றியது. ஏட்டு லத்தியுடன் கோபமாக எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். 


16 comments:

MARI The Great said...

நம்ம ஊரு போலிசு உண்மையை சொல்ரா உண்மையை சொல்றான்னு கேட்டுகிட்டு.. வாயவே திறக்கமுடியாதபடி வாயில லட்டிய வுட்டு ஆட்டுவானுகளே.. இவனுககிட்ட எப்பிடி நீங்க பேசி.. உண்மையை சொல்லி.. அத அவனுக புரிஞ்சு... அப்புறம் அவங்க.. அவனுக உயர் அதிகாரிகளுக்கு புரியவச்சு.... அப்பால நீங்க வெளிய வந்து...... ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா நெனச்சாலே கண்ணகெட்டுதே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எழுத்தாளன் எழுதியே புரிய வெப்பான்யா.........

Unknown said...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவு சூப்பர் ன்னே ஆமா எப்போ வெளில வந்திங்க 2 பேரும் உள்ளே என்ன இலக்கியத்த பத்தி பேசுனிங்க அந்த தகவலை எல்லாம் காணோம்

ILA (a) இளா said...

செம கலாய்ச்சலுங்கோ

SNR.தேவதாஸ் said...

தமாஷ்தானே உண்மையில்லையே?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

பழமைபேசி said...

இதுதான்யா படைப்பாற்றல்!! அருமை!!

MANO நாஞ்சில் மனோ said...

நம்ம கோமாளி செல்வா தம்பி எழுத்து மாதிரி இருக்கே ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னி குட்டிக்கே லாடமா என்னய்யா நடக்குது இங்கே?

பெசொவி said...

அது சரி. அடுத்து எப்போ என்னோட மதிய சாப்பாடு சாப்பிட வரீங்க? :)

இந்திரன் said...

ஹாஹா அசத்தல் கலாய்கள்.... நல்ல கிச்சு கிச்சுகள்.... அறிவுச் சொரணை, மொண்ணை, மூளை நரம்பு போன்ற சில வார்த்தைகளும் சேர்த்திருக்கலாம் :)

Unknown said...

இதனால் சகல பேஸ் புக் பிரபலம் என்று தன்னை நினைத்து கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளே, எவனாவது கூப்பிட்டான்னு போனீங்கன்னா இதுதான் நடக்கும்...உஜாரு ...

உலக சினிமா ரசிகன் said...

http://www.jeyamohan.in/?p=36806
மேற்க்கண்ட லிங்கில் உள்ள பதிவைப்படித்து விட்டுத்தான் உங்கள் பதிவைப்படித்தேன்.
சிரித்து சிரித்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது.
சூப்பர் குத்துப்பதிவு.

பட்டிகாட்டான் Jey said...

Panni super. rendu maasathukku saappadu pirachinai over :-))

வெளங்காதவன்™ said...

ச்சே, இந்த சுமோவும் சாணியும் மக்களை நெம்ப கெடுத்து வச்சிருக்காங்கவோய்!

தனிமரம் said...

ஆஹா செமயாக இலக்கிய விவாதம் செய்ய சிறந்த இடம் சென்றல் ஜெயில் தான்:)))!

Madhavan Srinivasagopalan said...

இலக்கிய வாதிக்கு சென்ட்ரல் ஜெயில்லேல்லாம் சிறப்பு..