Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Monday, March 28, 2011

உலகிலேயே காஸ்ட்லியான காபி எது தெரியுமா?

உலக்த்துலேயே காஸ்ட்லியான காபி எது?  ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கிற காபிதான்னு சிம்பிளா சொல்லிடாதீங்க சார்! நெஜமாவே வேற காஸ்ட்லியான காபி ஒண்ணு இருக்கு, அது என்னன்னு தெரியுமா? தெரியும்னு சொல்றவங்க அப்படியே அப்பீட் ஆகிடலாம். இன்னும் என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!

அந்த காஸ்ட்லியான காபி பேரு லூவா காபி (Kopi Luwak), இந்தோனேசியாவுல தயாரிக்கப்படுது. எப்படி தயாரிக்கறாங்கன்னு தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க.

நம்மூர்ல கொஞ்சநாள் முன்னாடி மரநாய்னு பூனை சைஸ்ல, நாய் மாதிரி தோற்றத்துல ஒரு மிருகம் இருந்துச்சு, தென்னை மரத்துல எல்லாம் ஏறும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா பாத்ததில்ல. இப்போ நம்மூர்ல கிட்டத்தட்ட இது அழிஞ்சுடுச்சுன்னே நெனைக்கிறேன். இந்த மரநாய் தெற்காசிய நாடுகள் எல்லாத்துலேயும் பரவலாக காணப்படுது. இவை வாசனைத்திரவியம் எடுக்கப்படும் புனுகுப் பூனை ஜாதியை (Civet cats)சேர்ந்தவை. 2003-ல் சார்ஸ் நோய் பரவிய போது இந்தப் பூனை வகைகளில் இருந்தும் தொற்றியதாம். அதெல்லாம் இருக்கட்டும், இந்த மரநாய்க்கும் காபிக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஹி..ஹி.... "மேட்டரே” அங்கதானே இருக்கு....!

அது என்ன சம்பந்தம்னு படமாவே பாத்துடுங்களேன்...!

இதுதாங்க அந்த மரநாய்

மரநாய் காபி பீன்சை சாப்புடுது

நிறைய மரநாய்களை புடிச்சி வெச்சு காபி பீன்ச சாப்புட வைக்கிறாங்க

காபி பீன்ச சாப்புடுற மரநாய், கொட்டைகளை மட்டும் அப்பிடியே கக்கா போய்டும்

கக்காவுல இருந்து காபி கொட்டைகளை எடுத்து சுத்தம் பண்ணினா...


காஸ்ட்லி காபி ரெடி....!

என்ன நம்பலையா.....? நான் சும்மா எப்பவும் போல (?) கக்கா மேட்டர மிக்ஸ் பண்ணிட்டேன்னுதானே நினைக்கறீங்க...? கூகிள்ல போயி தேடிப்பாருங்கோ.... அத்தனையும் 100% உண்மைங்கங்கோ....!

மரநாயின் வயிற்றில் உள்ள செரிமான என்சைம்களால் மாற்றங்களுக்கு உள்ளாவதால் காபிக் கொட்டைகளின் கசப்பு குறைந்து சுவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கிடைச்சா ஒருதடவ குடிச்சுப்பாருங்க சார். இதிலும் டூப்ளிக்கேட் வருதாம்.  அதுனால பாத்து கவனமா ட்ரை பண்ணுங்க. ஏற்கனவே குடிச்சவங்க யாரும் இருந்தீங்கன்னா வெக்கப்படாம அதைப் பத்தி இங்கே பகிர்ந்துக்கலாமே...?

மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவைப் பார்க்கலாம்.
நன்றி விக்கிப்பீடியா, கூகிள்

Wednesday, December 29, 2010

பன்னீஸ் கிச்சன்: தோசை





என்ன நண்பர்களே, போனவாரம் பன்னீஸ் கிச்சன்ல ஒரு நல்ல சமையல் குறிப்பு ஒண்ணு பார்த்தோம். இந்த வாரமும் தோசையப் பத்தி  ஒரு அற்புதமான  சமையல் குறிப்போட வந்திருக்கேன். தென்னிந்தியாவின் தனிச்சிறப்பு உணவான தோசையில்தான் எத்தனை எத்தனை வகைகள்? ஸ்பெசல் தோசை, சாதா தோசை, ஸ்பெசல் சாதா தோசை, மசால் தோசை, செட் தோசை, ஊத்தப்பம் (இதுவும் ஒரு தோசைதானே?), ரவா தோசை......   அப்பப்பப்பா......தமிழன் சாப்பாட்டுக்கே பாதி வாழ்க்கைய செலவு பண்ணிடறான்னு நெனக்கிறேன். பேச்சிலர் சமையலில் இடம் பெறாத ஒரு உணவுகளில் தோசையும் ஒன்று. ஒண்ணு ஒண்ணா போட்டு எடுக்கறதுக்குள்ள  சாப்பிடுற ஆசையே போயிடும். இந்த ஒரு விஷயத்துல நெஜமாவே பாவம்தான் லேடீஸ்........!


திருச்சி, சிங்காரதோப்பில், தோசா கார்னர் என்று ஒரு உணவகம் இருக்கு, அங்கே தோசை மட்டும் தான் கிடைக்கும், இன்ட்ரஸ்டிங்கா இருக்குல்ல? அங்கே சில வருடங்களூக்கு முன்னாடி போயிருந்தேன். மொத்தம் 16 வகைத் தோசைகள் (எல்லாம் சைவ தோசைகள்தான்). எல்லாத்தையும் ஒரே நேரத்துல டேஸ்ட் பண்ண முடியலேன்னாலும், ஆளுக்கொரு டைப்பா சொல்லி முடிஞ்ச வரைக்கும் கவர் பண்ணோம். நல்லாருந்துச்சு. குறிப்பா காலிபிளவர் தோசை அல்டிமேட்..! திருச்சி போனா ட்ரை பண்ணிப் பாருங்க சார். (அப்பாடா திருச்சியப் பத்தி இன்னொரு மேட்டர் போட்டாச்சு!)






கொஞ்சம் வடக்கே திரும்பிப் பாத்தா, தோசைதான் வட இந்தியர்களுக்கும் ரொம்பப் பிடித்த தென்னிந்திய உணவு. ஸ்பூனில் சாம்பாரைக் குடித்துக் கொண்டே அட்டகாசமாக தோசையை உள்ளே தள்ளுவார்கள். அவர்கள் செய்யும் தோசையின் ருசி சற்று வித்தியாசமாக இருக்கும் (நாம சப்பாத்தி செய்யற மாதிரி!), இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும். டெல்லி, சாகேட்டில் ஒரு தமிழர் (காரைக்குடிப்பக்கம்னு நெனைக்கிறேன்), தள்ளுவண்டி வைத்து சாப்பாட்டுக்கடை நடத்துகிறார்,  கிட்டத்தட்ட 25-30 வருடமாக. அங்கும் தோசைதான் ஸ்பெசல், மாலை 5 மணிக்கு மேல்தான் தொடங்குவார், இரவு 12 மணிவரை, நல்ல வியாபாரம்.  சும்மா தள்ளுவண்டிதானே என்று நினைக்காதீர்கள், அவர் இன்று இரு கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர். எந்தப்படிப்பும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்று அல்லல் படுபவர்கள் இதையெல்லாம் சற்று யோசித்துப் பார்க்கலாம். நியூயார்க்கில் கூட ஒரு தமிழர் தோசை ஸ்டால் வைத்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றார் என்று இணையதளங்களில் படித்திருக்ககிறேன்.


சரி சரி, கதை போதும்,  நாம போயி தோசையச் சுடுவோம் வாங்க........

ஸ்டெப்: 1
நல்ல ஹோட்டலா செலக்ட் பண்ணிக்குங்க.

ஸ்டெப் 2:
உங்களுக்கு பிடித்த தோசைய பார்சல் ஆர்டர் பண்ணி வாங்கிக்குங்க (காசு நீங்கதான் கொடுக்கனும்.... சார்)

ஸ்டெப் 3:
உடனே மெரினா பீச்சுக்கு கெளம்புங்க.

ஸ்டெப் 4:
பீச்சுல பலூன் வெச்சி ஒரு மாமா சுட்டுக்கிட்டு இருப்பாரு, அவரு கிட்ட காசைக் கொடுத்து, துப்பாக்கிய வாங்குங்க. பார்சல்ல உள்ள தோசைய எடுத்து பலூனுக்குப் பக்கத்தில ஃபிக்ஸ் பண்ணிட்டு, இப்போ சுடுங்க.... பாக்கலாம்.
டுமீல்ல்ல்ல்ல்ல்...............................................................................................................................!


  
பி.கு.: சொந்தமா தோசையும், துப்பாக்கியும் வெச்சிருக்கவங்களும், வீட்லேயே சுட்டுக்கலாம்.

எச்சரிக்கை: பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.......!

என்ன நண்பர்களே, தோசைய நல்லா சுட்டிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். எப்படி இருந்ததுன்னு உங்க கருத்துக்களையும் சொல்லுங்க. அடுத்த வாரமும் ஒரு அருமையான சமையல் குறிப்போட உங்களை சந்திருக்கிறேன்.............!

புகைப்பட உதவிக்கு நன்றி கூகிள்!


Friday, December 17, 2010

சிக்கன் 65? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.....!

என்ன நேத்து முட்டை, இன்னிக்குச் சிக்கனான்னு கேக்காதீங்க, அது காமெடி, இது சீரியஸ், படுசீரியஸ் மேட்டர். பெரியவர் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணும் சிக்கன் 65க்கும் இப்போது பிரச்சனை. நேற்று எனக்கு வந்த மெயிலை அப்படியே தந்திருக்கிறேன்.



ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.


இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.



உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.


பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.


கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.


சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.


கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.


உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

 
எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?


கேன்சர் ஆபத்து!
இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்.


பி.கு.:
என்ன நண்பர்களே....அதிர்ச்சியாக உள்ளதா? இந்த மேட்டர், ஏதோ பத்திரிக்கையிலோ, பதிவிலோ வந்தது போலத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், எழுதியவர்களுக்கும் பகிர்ந்தவர்களுக்கும் நன்றி. இதையும் நீங்கள் உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் உணவுக்கான வண்ணங்கள் அளவு மீறிப் பயன்படுத்தப்படுவதும், தடை செய்யப் பட்ட வண்ணங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இது சரியான முறையில் கண்காணிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. சிறு நகரங்களில் இது இன்னும் கேள்விக்குரியது.

இந்நிலையில் நாம்தான் எச்சரிக்கையோடு பளிச்சென்று வண்ணங்கள் நிறைந்த உணவுப்பொருட்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கோபி மன்சூரியன், பஜ்ஜி, சில்லி சிக்கன் போன்றவை மீதும் எனக்கு சந்தேகம் உண்டு.

மேலதிக தகவல்களுக்கு, விக்கியிலோ, கூகிளிலோ சென்று பார்க்கலாம். பிபிசி மற்றும் இங்கிலாந்தின் ஃபூட் சேஃப்டி ஏஜென்சியின் செய்தி அறிக்கைகளையும் பாருங்கள்.



Sunday, June 27, 2010

சமைப்பதற்குப் பாதுகாப்பான (நல்ல) எண்ணை எது?

சமீப காலமாகச் சந்தையில் பல புதிய சமையல் எண்ணைகள் வர ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான எண்ணைகளில் இதயதிற்குப் பாதுகாப்பானது என்ற வாசகம் இடம்பெறத் தவறுவதில்லை. இதயதிற்கு பாதுகாப்பான சமையல் எண்ணை என்று சூரியகாந்தி எண்ணைக்கு ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்றைக்குப் பெரும்பாலான நடுத்தர வீடுகளில் சூரியகாந்தி எண்ணைதான் உபயோகப்படுத்துகிறார்கள். இந்தச் சமையல் எண்ணைகளின் உண்மை நிலை என்று பார்ப்போமா?

கொழுப்புகளில் இரண்டு வகை உண்டு, திடக்கொழுப்பு மற்றும் திரவக் கொழுப்பு. திடக்கொழுப்பு என்பது கெட்டியாக இருக்கும் உருக்கினால்தான் திரவமாகும். உதாரணம், வெண்ணை, மிருகக் கொழுப்புகள். திரவக்கொழுப்பு சதாரணமாக திரவமாக்வே இருக்கும், உறைய வைத்தால் மட்டுமே கெட்டியாகும். உதாரணம், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை.

பொதுவாகப் பார்க்கும்போது திரவக்கொழுப்பே நமக்குப் பாதுகாப்பானது. திரவக்கொழுப்புகள் புஃபா (PUFA என்று விளம்பரங்களில் பார்திருப்பீர்கள்) எனப்படும் கொழுப்பு அமிலங்களால் ஆனவை. விளம்பரங்களில் மேலோட்டமாக PUFA உள்ளது என்று சொல்லிவிடுகிறார்கள், ஆனால் அதற்கு மேல்தான் கவனிக்கவேண்டிய முக்கியமான விசயம் ஒன்று இருக்கிறது. PUFA விலும் இரண்டும் வகை உள்ளது, w-6 (ஒமேகா-6) மற்றும் w-3 (ஒமேகா-3). இதில் ஒமேகா-3 தான் உடலுக்கு நல்லது. ஆனால் தாவர எண்ணைகளில் இரண்டும் கலந்தேதான் இருக்கின்றன. எனவே சமையல் எண்ணைகளை மதிப்பிடுவதற்கு இரண்டு கொழுப்பு அமிலங்களும் (ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3) என்ன விகிதத்தில் உள்ளன என்பதைக் கணக்கிடுகிறார்கள். ஒமேகா-3 அதிகமாக இருந்தால் அது நல்லது. ஏனென்றால் ஒமேகா-6 உடலில் புகுந்த பின்பு சும்மா இருப்பதில்லை, அது சுயமாகக் கெட்ட விளைவுகளை ஏற்படுத்துவதுமில்லாமல், ஒமேகா-3 வின் நல்ல விளைவுகளையும் எதிர்க்கிறது. (நல்லதுக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க!)

இனி சமையல் எண்ணைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சூரியகாந்தி எண்ணை:
திரவக்கொழுப்பு அதிகம் உள்ளது, அதனால் இதைப் பயன்படுத்துவதால் கெட்ட கொலஸ்ட்ரால் உயராது. எனவே இதய நோயாளிகளும் பயன்படுத்தலாம். ஆனால் இதில் ஒமேகா-3 அறவே இல்லை. வெறும் ஒமேகா-6 மட்டுமே உள்ளது. நீண்டகால உபயோகத்திற்கு இது பொறுத்தமானதா என்பது சந்தேகதிற்குரியது. ஒமேகா- 6 வின் கெட்ட விளைவுகளில் சில சூரியகாந்தி எண்ணையை நீண்ட நாள் பயன்படுத்தியவர்களிடம் ஏற்பட்டுள்ளதாகச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

சோள எண்ணை (கார்ன் ஆயில்):
இது ஓரளவு சூரியகாந்தி எண்ணையைப் போன்றதே. இந்த எண்ணையில் ஒமேகா-3 உள்ளது, ஆனால் வெறும் 2% தான். மீதம் முழுவதும் ஒமேகா-6 தான். அதனால், ஒமேகா-6 வினால் ஏற்படும் கெட்ட விளைவுகளை இது தடுக்காது. எனவே சூரியகாந்தி எண்ணையைப் போன்றே நீண்டநாள் பயன்பாட்டிற்கு இதுவும் பொருத்தமானதல்ல.

கடலை எண்ணை:
முன்பு வெகு பிரபலமாக இருந்த எண்ணை. இது திரவ கொழுப்புகள் அதிகம் இருந்தாலும், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகவே ஆராய்ச்சிப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணையின் கொழுப்பு அமிலங்களைப் பார்க்கும் போது பாதுகாப்பானதாகத்தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் பரிசோதனை முடிவுகள் குழப்பும்படியாக உள்ளன. அதனால் எப்போவாவது பயன்படுத்துவதில் தப்பில்லை.

அரிசி உமி எண்ணை (ரைஸ் பிரான் ஆயில்):
இந்த எண்ணை ஜப்பான், சீனாவில் அதிகம் பயன்படுத்தபடுகின்றது. இப்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. அருமையான எண்ணை, அதிக நலன்களைக் கொண்டது. இதில் உள்ள ஒரைசெனோல் (Oryzanol) இதய நோயைத்தடுக்கும் சக்தி வாய்ந்தது (நீங்கள் விளம்பரங்களில் பார்ப்பது உண்மையே). மேலும் இந்த எண்ணை உணவுப் பொருட்களால் உறிஞ்சப்படுவது குறைவு. 5% ஒமேகா-3 உள்ளது.

நல்லெண்ணை:
இது நிஜமாகவே நல்ல எண்ணைதான். இந்த எண்ணையில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக் கூடிய தன்மை உள்ளது. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகவும் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் 1 சதவீததிற்கும் குறைவாகவே ஒமேகா-3 உள்ளது.


முடிவாக என்ன எண்ணைதான் பயன்படுத்துவது என்கிறீர்களா? மேலே படிங்க. பொதுவாக இந்தியச் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணைகளில் ஒமேகா- 3 மிகக்குறைவாகவே உள்ளது. ஆலிவ் எண்ணை மட்டுமே தேவையான அளவு ஒமேகா- 3 கொண்டுள்ளது, மிகச் சிறந்த சமையல் எண்ணையும் இதுவே. ஆனால் பொறிப்பதற்குப் பயன்படுத்த முடியாது (பொறிக்கும்போது வரும் கடும் வெப்பம் இந்த எண்ணையை சேதம் அடையச் செய்கிறது, அப்போது வெளியாகும் பொருள்கள் ஆரோக்கியமானவை அல்ல. இப்போது பொறிப்பதற்கேற்ற ஆலிவ் எண்ணையும் வருகின்றது). விலை அதிகம், கிடைப்பதும் கடினம் (இந்தியாவில்) போன்ற காரணங்களால் தினசரி பயன்பாட்டிற்கு இந்த எண்ணையை பயன்படுத்துவது சாத்தியமல்ல.

அடுத்த சிறந்த எண்ணை அரிசி உமி எண்ணையே (ரைஸ் பிரான் ஆயில்). இந்த எண்ணையே இந்தியப் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கிறது. சுமார் 450 டிகிரி வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சூடாக்கலாம் (சமையல் எண்ணைகளிலேயே இதற்குத்தான் அதிகம் வெப்பம் தாங்கும் சக்தி). அதனால் இந்த எண்ணையை தினந்தோறும் பயன்படுத்தலாம். ஆனாலும் இடைஇடையே சூரியகாந்தி எண்ணை, சோள எண்ணை, நல்லெண்ணை என்று மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதே நல்லது.
ஒருவேளை நீங்கள் வேறு எந்த எண்ணையைப் பயன்படுத்தினாலும், ஒரேவகை எண்ணையைத் தொடர்ந்து பயன்படுத்தாதீர்கள்.

தேங்காய் எண்ணை, பாம் ஆயில், வனஸ்பதி போன்றவை தவிர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை. குறிப்பாக இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் (பெரும்பாலான பிஸ்கட்டுகளில் வனஸ்பதி உள்ளது, எனவே பிஸ்கட்டுகள் வாங்கும்போது கூட கவனம் தேவை, hydrogenated vegetable oils, shortened vegetable oils, margarine என்று பல பெயர்களில் போட்டிருப்பார்கள் எல்லாம் வனஸ்பதி வகையைச் சேர்ந்தவையே). வெளிநாடுகளில் இருப்பவர்கள் எண்ணை வாங்கும் போது பொறிப்பதற்கேற்றதா என்று பார்த்து வாங்கவேண்டும் (பாட்டிலின் மேலேயே குறிப்பிட்டு இருப்பார்கள்).


பி.கு.: செவிக்குணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்!

(சும்மா ஒரு சேஞ்சுக்குத்தான் இந்தப்பதிவு, மற்றபடி சமையலுக்கு நமக்கும் ரொம்ப....ரொம்ப..தூ...ரமுங்கோ!)