Thursday, September 18, 2014

ஐ (ai): திரை விமர்சனம்...!


தமிழ் சினிமா உலகில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமாவில் கூட இப்படி ஒரு கதையுடன் இதுவரை எந்தப்படமும் வந்திருக்காது. அப்படிப்பட்ட கதை, திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது ஐ படம். கதைக்காகவே பல்வேறு தேசிய சர்வதேச விருதுகளை அள்ளிக் குவிக்க இருக்கிறது இப்படம்.

விக்ரம் கிராமத்தில் மாட்டுவண்டி வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே ஹீரோயின் எமி ஜாக்சன் சுற்றுலாவிற்காக வந்தவர் மாட்டுவண்டியில் சவாரி செய்கிறார். அவரைப்பார்த்த விக்ரம் காதல்வயப்பட்டு அங்கேயே காதலைச் சொல்கிறார். கோபமடைந்த எமி அர்னால்டின் போட்டோவை காட்டி இந்த மாதிரி ஒருத்தனைத்தான் லவ் பண்ணுவேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். இதைக்கேட்டு ஆவேசமடைகிறார் விக்ரம். அர்னால்டின் போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டு பயங்கரமாக எக்சர்சைஸ் செய்கிறார், ஒன்றும் முன்னேற்றமில்லை. ஏதாவது லேகியம் சாப்பிட்டு பார் என்று நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள். அவர்களை நம்பி சேலத்துக்கு செல்கிறார் விக்ரம். அங்கே வைத்தியரிடம் கிலோக் கணக்கில் லேகியம் வாங்கி வந்து உடல் முழுதும் பூசிக் கொண்டு படுக்கிறார். காலையில் பார்த்தால் அவரையே அவருக்கு அடையாளம் தெரியவில்லை. பனிக்கரடி போன்ற தோற்றத்தில் பயங்கரமாக உருவம் மாறி இருக்கிறது.  காட்சியைப் பார்க்கும் நமக்கு இது என்ன சினிமாதானா என்ற பிரமிப்பு எழுகிறது. அவரைப் பார்த்த எல்லாரும் பயந்து ஓடுகிறார்கள். அருகில் இருந்த காட்டுக்குள் ஓடி ஒளிகிறார். லேகீயத்தில் தான் ஏதோ கோளாறு என்று வைத்தியரை பார்க்கச் செல்கிறார். வைத்தியரை கட்டி வைத்து அடித்து மிரட்டியதில் அவர் வில்லன்கள் வந்து மிரட்டி லேகீயத்தை மாற்றி கொடுக்க சொன்னதை சொல்லி விடுகிறார்.

விக்ரம் ஆவேசத்துடன் வில்லன்களை தேட தொடங்குகிறார். ஆனால் பிடிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு முறை வில்லனை நெருங்கும் போதும் அரசியல்வாதிகள் வந்து லஞ்சம் கேட்டுக்  குறுக்கிடுகிறார்கள். லஞ்சம் கேட்பவர்களை எல்லாம் கடித்து வைக்கிறார் விக்ரம். லஞ்சம் ஒழிந்து ஊரே செழிக்கிறது, அனைவரும் பாராட்டுகிறார்கள். இப்படியே போய் கொண்டிருக்கையில் ஒருநாள் டீவில் எமியின் பேட்டியை பார்த்துவிட்டு கண்கலங்குகிறார். பனிக்கரடி உருவத்துடன் விக்ரம் காதல் சோகத்தில் கண்கலங்குவது அருமை. அப்படியே கனவில் பாடல் காட்சி வருவது மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. 2000 பனிக்கரடிகள் சூழ விக்ரம் எமியுடன் ஆடிப்பாடுகிறார். அண்டார்டிக்காவில் போய் ஐஸ் மலை செட் போட்டு எடுத்தார்களாம். ஒவ்வொரு ஐஸ்கட்டியும் ஒரு கலரில் மின்னுகிறது, எப்படி பெயிண்ட் அடித்தார்களோ தெரியவில்லை. டிக்கட்டிற்கு கொடுத்த காசு இதற்கே போதும். பாடல் முடிந்ததும் வில்லன்களை தேடிக் கண்டுபிடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகள் வழக்கம் போல பதற வைத்தாலும் ஹீரோவே ஜெயிப்பது வெகு யதார்த்தம்!

சண்டையில் மற்றவர்கள் தப்ப, ஒரே ஒரு வில்லன் மாட்டிக் கொள்கிறான். அவனும் வைத்தியர் கொடுத்தது லேகியம் இல்லை, பனிக்கரடி ஆயி என்று சொல்லிவிட்டு செத்துப்போகிறான். அதிர்ச்சியடைந்த விக்ரம், அதை சரி செய்வது எப்படி என்று குழம்புகிறார். துரத்திச் சென்று அடுத்த வில்லனை பிடிக்கிறார். அவன் இன்னொரு முறை பனிக்கரடி ஆயியை தடவினால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு செத்து விடுகிறான்.  பனிக்கரடி ஆயி வாங்க ஸ்காட்லாந்திற்கு கடலில் நீந்தியபடியே செல்கிறார் விக்ரம். பிரம்மாண்ட கப்பல்களை அவர் நீந்தியபடி கடந்துசெல்வது இதுவரை சினிமாவில் பார்த்தே இராத சீன். எப்படி செட் போட்டார்கள் என்றே தெரியவில்லை. அங்கு சென்று ஆய் வாங்கி தடவி, காலையில் பார்த்தால் முகமெல்லாம் கட்டிவந்த மனிதனாகி இருக்கிறார்.

இதனால் குழம்பிப் போன விக்ரம், வில்லன் தன்னை ஏமாற்றி இருக்கிறான் என்று புரிந்து கொள்கிறார். எமி அந்த ஊரில் இருப்பதை தெரிந்து கொண்டு அதே தோற்றத்தோடு பார்க்கச் செல்கிறார். அங்கே எமியை வில்லன்கள் கட்டிவைத்து இருக்கிறார்கள். சண்டையிட்டு மீட்கிறார் விக்ரம். அவரைப் பார்த்து எமி யார் நீ என்று கேட்கிறார், அதைக் கண்டு மனசுடைந்த விக்ரம், தப்பி ஓடிய வில்லன்களை துரத்தி பிடித்து அடித்து உதைத்து தனக்கு மாற்றுமருந்து என்ன என்று கேட்கிறார். அப்போது அந்த வில்லன் நான் சொன்னால் நீ கேட்கமாட்டியே என்று திரும்ப திரும்ப மறுப்பது பரபரப்பைக் கூட்டுகிறது. கடைசியில் நல்ல அழகான வாலிபனின் ஆயியை எடுத்து பூசிக் கொண்டால் பழைய உருவத்தை பெறலாம் என்று சொல்லிவிட்டு அவனும் செத்துப் போகிறான். அடுத்து விக்ரம் என்ன செய்ய போகிறார் என்று ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறார்கள்.

ஊருக்கு வந்த விக்ரம் வில்லன் சொன்னபடி செய்கிறார். எதுவும் ஆகவில்லை. அதிர்ந்து போய் மறுபடியும் மறுபடியும் செய்து பார்க்கிறார் ஒன்றும் ஆகவில்லை. நமக்கோ பரபரப்பு உச்ச கட்டத்தை அடைகிறது. வில்லன் கும்பலின் தலைவன் அந்த ஊர் சந்தைக்கு வந்திருப்பதை பார்த்து அவனை வளைத்துப் பிடித்துக் கொண்டு வந்து அடிக்கிறார் விக்ரம். இவ்வளவு நாளும் விக்ரமுக்கு  ஏற்பட்டது நிஜமான மாற்றம் அல்ல. அது வெறும் மேக்கப்தான் என்றும், இரவு நேரத்தில் தூங்கியவுடன் வந்து வில்லன் ஆட்கள் ரகசியமாக விக்ரமுக்கு அவருக்கே தெரியாமல் மேக்கப் போட்டு விட்டு போய்விடுவார்கள் என்றும் உண்மையை சொல்லி விட்டு செத்துப் போகிறான் அந்த வில்லன் கும்பல் தலைவன். சஸ்பென்ஸ் உடைந்ததும் தியேட்டரே ஆடிப்போகிறது. அடுத்த காட்சியில் விக்ரம் குளியறைக்குள் சென்று மேக்கப்பை களைத்து விட்டு ஸ்மார்ட்டாக கம்பீரமாக வெளியே வருவதை பார்த்து தியேட்டர் முழுதும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்..... எமி வெளியே விக்ரமுக்காக காத்திருக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு வெளியே வந்தும் படபடப்பு குறையவே இல்லை, பலநூறு படங்களை ஒரே நேரத்தில் பார்த்த எஃபக்ட்.......

ஸ்பெசல் எஃபக்ட்ஸ், சஸ்பென்ஸ் கதை, விக்ரம் நடிப்பு, ரஹ்மான் இசை, எமியின் அழகு..... இப்படி எல்லாத்துக்கும் ஒவ்வொரு வாட்டி படம் பார்க்கலாம்......!

ஆய்னு டைட்டில் வெச்சா கண்டுபுடிச்சிடுவாங்கன்னு ஐன்னு டைட்டில் வெச்சிருக்காங்க.... நாங்க சும்மா விடுவமா..... இங்கிலீஸ் டைட்டில் என்னான்னு செக் பண்ணி உண்மைய கண்டுபிடிச்சிட்டோம்ல....... ங்கொய்யால நாங்கள்லாம் யாரு.............!

13 comments:

பால கணேஷ் said...

அடாடா.... சூப்பரா விமர்சனம் பண்ணிட்டீங்கண்ணே... ஷங்கர் சாரு இதப் படிச்சாருன்னா ஓடியாந்து உங்க கால்ல வியுந்து அசிஸ்டண்ட் டைரக்டரா சேத்துக்கிட்டு கூட்டிட்டுப் போயிருவாருங்கோ.....

சி.பி.செந்தில்குமார் said...

hii hi hi

மெக்னேஷ் திருமுருகன் said...

i I I !!! சூப்பரப்பு !!!

விஜய் - செல்வகுமார் said...

ஐ படத்தின் டீசரை வைத்துக்கொண்டே, ஒரு பரபரப்பான, காமெடியான திரைக்கதை அமைத்த விதம் சூப்பர்,

வாழ்த்துக்கள் நண்பரே

M (Real Santhanam Fanz) said...

விமர்சனத்திற்கு நன்றி!
என்னோட 120 ரூபா தப்பிச்சது!
இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறை போடும்போது பார்க்கலாம்!

Madhavan Srinivasagopalan said...

Alternate name for this movie is
"Ai! Aai!!" அய்...! ஆய்(sic)]

வானரம் . said...

' லைப் ஆப் பீயி 'ஹாலிவுட் படத்தோட காப்பி தான்
ஷங்கரின் 'ஆயி '.

வானரம் . said...

ஏன்யா ஊரே கத்தி படத்த பத்தி சுத்தி சுத்தி பேசுது . டாகுடர் ரசிகரா இருந்துகிட்டு இத பத்தி பதிவு எழுதலனா எப்படி?

கத்தி படம் ரிலீஸ் ஆகலைனா கக்கா போக மாட்டேன்னு ஒரு கண்டன பதிவு போட வேண்டியது தானே .

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா....
விமர்சனத்தைப் படிக்கும் போது நமக்கே ஒரு படபடப்பு வருதுங்கண்ணா...

கடைசியில 'ஆய்' ஆராய்ச்சி சிரிக்க வைத்தது...

Geetha said...

ஷங்கருக்கு என்னாச்சு...நல்ல வேளை தப்பிச்சிட்டோம் .நன்றி

chitra said...

HA HA HA...Antarctica la room pottu yosicheengalo....SUPER...SUPER...SUPER!!!

Unknown said...

சிரித்து சிரித்து 😂😂

Yoga.S. said...

டாப்பு.........இந்த வருஷம் மத்தப் படங்க மண் கவ்வும் னு சொல்லுங்க!