Friday, June 21, 2013

ஐடி கம்பேனியும் டாஸ்மாக் பாரும்.......



ஐடி கம்பெனி
டாஸ்மாக்/பார்
1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்

1) டாஸ்மாக் வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக தள்ளுவண்டி பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்
2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .
2) எல்லா நேரமும் ஒரு ஐந்து பேர் , வாசலுக்கருகே மப்பில் கிடந்து கொண்டு தொல்லை கொடுத்து கொண்டு இருப்பார்கள்
3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.
3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 ஆட்கள் எப்போதும் வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.
4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.
4) வரும் அனைத்து நபர்களின் பர்சுகளும் காலியாகும். இருந்தும் அவர்கள் பாக்கெட்டுக்கு அடியில் எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.
5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.
5) அலுவலத்தில் இருந்து வருபவர்கள் அடையாள அட்டையோடு பந்தாவாக உள்ளே வருவார்கள்.
6 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.
6 ) கிச்சன் முதல் கக்கூஸ் வரை (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை மஞ்சள் பூத்த வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.
7) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.
7) அங்கே இருக்கும் தொலைகாட்சியில் குத்துப் பாட்டு மட்டுமே ஓடும்.
8) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .
8) சர்வீஸ் – இவர்களை எப்போது அழைத்தாலும் உடனே வரவே மாட்டார்கள் .
9) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .
9) இலவசமாக அறிவுரை கிடைக்கும் .
10) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.
10) உள்ளே போய் சிறிது நேரத்திலேயே வெளியே போகும் வழி மறந்துவிடும்
11) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.
11) சில வெளிநாட்டு சரக்கு பாட்டல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.
12) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .
12) ஒரு மூலையின் கண்டிப்பாக ஒருவன் எப்போது வேணுமின்னாலும் வாந்தி .வந்துவிடும் கண்டிசனில் இருப்பான்.
13) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .
13) எப்போதும் துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா டேபிளில் இடம் பிடிக்க வேண்டும் .
14) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.
14) பெசல் ஐட்டங்கள் ஆடர் பண்ணா நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும்.
15) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .
15) குடிக்க மட்டும்தான் அனுமதி என்றில்லை, வேடிக்கை பார்க்கவும் செல்லலாம்.
16) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .
16) தலையில் துண்டு போட்டு கவர் பண்ணிய ஒரு ஆள் எப்படியும் இருப்பார் .
17) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .
17)உள்ளே போனதும் இங்கிலீஷ், தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .
18) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .
18) உள்ளே.சென்றாலே கப் அடிக்கும் .
19) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”
19) சர்வர் நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “என்ன சார் வேணும்”
20) ஒரு ATM இருக்கும்.
20) காசு வாங்கும் கல்லாப்பெட்டி டேபிள் இருக்கும்.
21) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு .
21) வாந்தி எடுக்க தனி அறை கிடையாது .

Tuesday, June 18, 2013

ராத்திரி நேரத்து டீவியும் பின்னே நானும்........!



முன்னிரவு நேரம். ஊர் அடங்கி இருந்தது. எல்லாரும் குடும்ப(?) சீரியல்கள், குத்துப்பாட்டு, காமெடி நியூஸ் என்று பார்த்துப் பார்த்து களைத்துப் போய் தூங்கி கொண்டிருக்க வேண்டும். எனக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. எழுந்து உக்கார்ந்தேன். என்ன செய்யலாம், மறுபடியும் டீவியை போட்டேன். இன்னேரம் ஏதாவது ஒரு சேனலில் தாட்டியான பெண்மணிகள் குலுங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம் என்ற நப்பாசையில் ரிமோட்டை சுழட்டினேன். சட்டென ஒரு சேனலில் போய் நின்றது. கெட்டவார்த்தைகளில் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார். வைத்தியராம். கோபத்துடன் மிகுந்த அக்கறையாக பேசிக்கொண்டிருந்தார். இவருக்குத்தாம் நம் இளைஞ்சர்களின் மீது எவ்வளவு கவலை? மற்ற சேனல்களில் இன்னேரம் வந்து கொண்டிருக்கும்  குலுங்கல்களைப் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு உடனடியாக பயன்படும் விதமாக இந்த சேனலில் பொருத்தமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் போல. நல்ல சிந்தனைதான். வைத்தியரை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று மறுபடியும் ரிமோட்டை சுழற்ற ஆரம்பித்தேன். 

இப்போது போய் நின்றது இன்னொரு சேனலில். அங்கே கோட்டுசூட்டு போட்ட ஒருவர் ஒரு போர்டில் பெயர்களை எழுதி நம்பர் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். நம்பர்களை வைத்தே பெயர்களை அருமையாக டிங்கரிங் பண்ணுகிறார். புதுப்பெயர் பழைய பெயர் போலவே இருக்க அவர்கள் மெனக்கெடுவதை பார்க்க திகைப்பாக இருக்கிறது. பெயர்கள் எல்லாம் பிரெஞ்சு, ஸ்பானிஷ் ரேஞ்சிற்கு மாற்றப்படுகிறது. பெயர் மாற்றப்பட்டவுடன் அனைவரும் உடனடியாக புதுப்பொலிவடைகிறார்கள். எல்லாமே மாறிவிடும், காசு கொட்டோ கொட்டென்று கொட்டும், வீட்டில் ஹாயாக படுத்துக் கொண்டு காசை அள்ளலாம் என்கிறார்கள். நம்பமுடியவில்லை ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் சொல்பவர் போல் தெரியவில்லை. கோட்டு சூட்டு போட்டிருக்கிறார். அருமையாக பேசுகிறார். எந்தவித தயக்கமோ தடுமாற்றமோ இல்லை. தொலைக்காட்சியில் வந்து பேசுகிறார். பொய்சொல்பவர், ஏமாற்றுபவர்கள் தொலைக்காட்சிக்கு வருவார்களா? எத்தனையோ பேர் தொலைக்காட்சியை பார்க்கிறோம், யார் யாரோ பெரிய பெரிய படிப்பாளிகள், விஞ்சாணிகள், மேதாவிகள் எல்லாம் பார்க்கிறார்கள் எல்லாரையும் ஏமாற்றிவிட முடியுமா என்ன? நாளைக்கே சென்று இவரை பார்த்து பெயரை மாற்றிவிடவேண்டும் என்று முடிவு செய்தவனாக அவருடைய முகவரி, போன் நம்ப்ரை குறித்துக் கொண்டேன். மறுபடியும் ரிமோட்டை கையிலெடுத்தேன்.




இன்னொரு சேனலில் ஏதோ கல்லை வைத்து உருட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து நிறுத்தினேன். சிறிய கல் ஒன்று வைத்திருக்கிறார்கள், அதை மோதிரத்தில் வைத்து அணிந்து கொண்டால் பணம் அதுபாட்டுக்கு நம்மை தேடி வரும் என்கிறார்கள். அதிசயமாக இருக்கிறது. ஒரு சிறு கல்லுக்கு இத்தனை எஃபக்டா என்று யோசிக்கும் போதே இவரும் கோட்டு சூட்டு போட்டிருப்பதை கவனிக்க நேர்ந்தது. பெயருக்கு பின்னால் இரண்டு வரிகள் வரும் அளவுக்கு டிகிரிகள் வாங்கி இருக்கிறார். மெத்தப்படித்தவர். ஏமாற்ற மாட்டார். டிவியில் வேறு சொல்கிறார். வாங்கியவர்கள் ஏமாந்திருந்தால் இன்னேரம் பிரச்சனை ஆகி இருக்காதா? ஏற்கனவே பெயர் மாற்றம் வேறு செய்யப் போகிறோம், கல்லை வேறு வாங்கி அணிந்து கொண்டால் பணம் டபுள் மடங்காக கொட்ட தொடங்கி விடும். இதையும் பார்த்தது நல்லதாக போயிற்று, நாளைக்கு பேரை மாற்றியதும், உடனடியாக நல்ல கல் ஒன்றும் வாங்கி போட்டுக் கொள்ள வேண்டும்.

பணம் சேர்வதற்கான வழியை பார்த்தாகிவிட்டது. இனி எஞ்சாய் பண்ண வேண்டும். ஏதாவது குலுங்கல் பக்கம் போகலாம் என்று தேட ஆரம்பித்தேன். ஒரு சேனலில் பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். என்னவென்று பார்த்தால் எவனோ ஏமாற்றிவிட்டானாம். அதற்கு டீவியில் வந்து ஏன் அழுகிறார் என்று புரியவில்லை. இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் நன்றாக இருந்ததால் சிறிது நேரம் பார்த்தேன். யார் யாரை ஏமாற்றினார்கள் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை என்றாலும், பக்கத்து வீட்டுக்காரனிடம் ஏன் சொந்தக்காரனிடம்  கூட சொல்ல தயங்கும் பல விஷயங்களை அங்கே சர்வசாதாரணமாக போட்டு உடைத்துக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சியை நடத்துபவரும் தன் பங்குக்கு தாறுமாறாக கேள்விகளை அள்ளி வீசி கொண்டிருந்தார். இதையெல்லாம் கோர்ட்டிலோ, போலீஸ் ஸ்டேசனிலோ வைத்து விசாரித்தால் மனித உரிமை மீறல் என்று போராட்டமே நடத்தி ஒரு காட்டு காட்டி விடுவார்கள். டீவியில் வைத்து நடத்துவதால் அதே போல் பேச நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இத்தனை தொலைக்காட்சிகள் வந்ததில் கிடைத்த நல்ல வளர்ச்சி. 

மறுபடியும் ரிமோட்டை எடுத்தேன். திடீரென ஒரு சேனலில் அரையிருட்டாக என்னமோ ஓடிக் கொண்டிருந்தது. ஆஹா நம்ம மேட்டர் இதுதான்யா என்று பார்க்க ஆரம்பித்தேன். ஒரு தாட்டியான பெண் அரையிருட்டில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். முகம் அடையாளம் தெரியாதவறு கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. (தெரிந்தாலும் ஒரு எழவும் ஆகிவிட போவதில்லை என்றாலும் அப்படி மறைத்தால் தான் பார்க்கிறவனுக்கு ஒரு இது வருமாம்...). புருசனுக்கு ஒண்ணுமே முடியலையாம், ஏதோ ஒரு கேப்சூலாம் ஃபிரண்டு சொன்னாராம். அதை வாங்கி புருசனுக்கு கொடுத்து இப்போ சந்தோசமா இருக்காராம். அதற்கு ஆதாரமாக ஒரு வயதான தம்பதியை எசகுபிசகாக காட்டினார்கள். தலையில் அடித்துக் கொண்டேன். அங்கே இளைஞ்சர்களை குறி வைத்து ஒரு வைத்தியர், இங்கே பெண்மணிகளை குறிவைத்து ஒரு கேப்சூல். ஆனா பாருங்க எல்லாத்தையும் ஆண்கள்தான் தின்று தொலைக்க வேண்டி இருக்கு. என்ன ஒரு பெண்ணாதிக்கம்?

அடுத்த சேனலுக்கு தாவினேன். அங்கு ஒருவன் வடைசுடும் சட்டியை மூவாயிரம் ரூவாய்க்கு விற்றுக் கொண்டிருந்தான். அடேய் மூவாயிரம் ரூவாய வெச்சி ஒருத்தன் வாழ்க்கை பூரா வடை சாப்பிடலாமேடா என்று எண்ணிகொண்டேன் சீக்கிரம் தூங்க வேண்டும். நாளைக்கு போய் பெயர் மாற்ற வேண்டும், கல் மோதிரம் வாங்க வேண்டும். அதற்கு அப்புறம் வந்து கொட்டப் போகும் பணத்தை எங்கே போட்டு வைப்பது? மறுபடியும் சேனலை மாற்றினேன். அதிலே சென்னைக்கருகில் நிலம் விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிப்போட்டால் பலமடங்கு உயருமாம். பணம் வந்தவுடன் பல்க்காக நிலத்தை வாங்கிப் போட்டுவிட்டு  செட்டில் ஆகிவிட வேண்டியதுதான். ஆகவே நண்பர்களே இரவு 11 மணிக்கு மேல் டீவி பாருங்கள், இனி எல்லாமே உங்கள் கையில்.........




நன்றி: கூகிள் இமேஜஸ்